இஸ்ரேல்–லெபனான் மோதலில் மக்களுக்கு உதவிய அருட்தந்தை உயிரிழப்பு ! | Veritas Tamil

லெபனானின் மலைப்பகுதியில் உள்ள க்லயா (Qlayaa) என்ற கிராமத்தில், தனது பங்கு மக்களுக்கு உதவி செய்ய முயன்ற போது மரோனைட் கத்தோலிக்க அருட்தந்தை  ஒருவர் மார்ச் 9 அன்று உயிரிழந்தார் என்று லெபனான் ஊடகங்களும் வத்திக்கான் நியூஸ்மும் தெரிவித்துள்ளன.

50 வயதான அருட்தந்தை பியர் எல்-ராஹி, ஒரு இஸ்ரேல் டேங்க் தாக்குதலில் சேதமடைந்த வீட்டில் இருந்த பங்கு மக்களுக்கு உதவுவதற்காக சில இளைஞர்களுடன் அவசரமாக அங்கு சென்றார். அப்போது டேங்க் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் கடுமையாக காயமடைந்தார். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், காயங்களின் காரணமாக அவர் உயிரிழந்தார்.

வத்திக்கான் நியூஸ் உடன் பேசிய டைர் மற்றும் டெய்ர்மிமாஸ் பகுதிகளின் லத்தீன் மரபு பங்குத்தந்தை அருட்தந்தை டூபிக் பு மெர்ஹி, அருட்தந்தை எல்-ராஹியை “தன் மக்களுடன் நிலைத்திருந்த உண்மையான மேய்ப்பர்” என்று விவரித்தார். இஸ்ரேல் பலமுறை வெளியேறுமாறு உத்தரவிட்ட போதிலும் அவர் தனது பங்கு மக்களை விட்டுச் செல்லவில்லை என்று அவர் கூறினார்.

“பங்கு மக்கள் அவரது மரணத்தால் துயரத்தில் மூழ்கியுள்ளனர்; அவர்கள் பயத்திலும் வாழ்கிறார்கள்,” என்று அருட்தந்தை மெர்ஹி தெரிவித்தார். “கிறிஸ்தவர்கள் வாழும் கிராமங்களில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தயங்கினர். ஆனால் இப்போது சூழ்நிலை மாறிவிட்டது. வெளியேறுவது என்றால் தெருக்களில் வாழ்வதோ அல்லது வேறு இடத்தில் வீடு வாடகைக்கு எடுப்பதோ ஆகும்; லெபனானின் கடுமையான பொருளாதார நிலைமையில் அது மிகவும் கடினம்.”

“நாங்கள் தொடர்ந்து கூறுவது ஒன்று தான்: எங்களுக்குள் இறக்கக்கூடாத ஒன்று இருக்கிறது — அது ஆண்டவரில் உள்ள நம்பிக்கை. அதுவே எங்களுக்கு முன்னே செல்ல வலிமை தருகிறது,” என்று அவர் கூறினார்.

இறுதியாக ,“போர் போதும்; வன்முறை போதும். திருத்தந்தை கூறியதுபோல் ஆயுதங்கள் சமாதானத்தை உருவாக்காது; அவை படுகொலைகளையும் வெறுப்பையும் உருவாக்குகின்றன. எங்களுக்கு வேண்டியது சிறிதளவு மரியாதையுடனான வாழ்க்கை மட்டுமே.”

Tamil Survey Popup Image