திருத்தந்தை பிரான்சிஸின் கல்லறையில் பிரார்த்தனை செய்த திருத்தந்தை லியோ | Veritas Tamil
  நவம்பர் 3ஆம் தேதி காஸ்டெல் கண்டோல்போவுக்கு பயணிக்கும் வழியில், திருத்தந்தை லியோ ரோமிலுள்ள புனித மேரி மேஜர் பேராலயத்தில் ஒரு சிறப்பு இடைவெளி எடுத்து, திருத்தந்தை பிரான்சிஸின் கல்லறையிலும், மக்களின் பாதுகாவலியான மதிப்பிற்குரிய சாலஸ் பொபுலி ரோமானி என்ற மரியன்னைச் சாயலில் முன்பாகவும் செபம் செய்தார்.
தனது முன்னோடியான திருத்தந்தை பிரான்சிஸின் கல்லறை ஸ்ஃபோர்சா மற்றும் பாலின் ஆலயங்களுக்கிடையில் அமைத்துள்ளது அருகில், திருத்தந்தை லியோ அன்பும் நினைவூட்டலுமான அடையாளமாக வெள்ளை ரோஜா மலர்க்கொத்தை வைத்து வணங்கினார். அந்த இடத்தில் எப்போதும் ஓர் வெள்ளை ரோஜா மலர் வைக்கப்பட்டிருக்கும்; இது புனித தெரேசா ஆஃப் லிசியூவின் நினைவாகும். திருத்தந்தை பிரான்சிஸ் தனது வாழ்நாள் முழுவதும் அந்த புனிதருக்கான ஆழ்ந்த பக்தி கொண்டிருந்ததால், அந்த இடம் அவருக்குப் பெரிதும் பிரியமானதாக இருந்தது.
பேராலயத்திலிருந்து புறப்படுவதற்கு முன், திருத்தந்தை லியோ, “ரோம மக்களின் பாதுகாவலியான” சாலஸ் பொபுலி ரோமானி என்ற தொன்மையான மரியன்னைச் சாயலின் முன்பாகவும் அமைதியான செபத்தில் ஈடுபட்டார். திருத்தந்தை பிரான்சிஸ், ஒவ்வொரு சர்வதேசப் பயணத்திற்கும், மருத்துவமனையில் தங்கியிருந்த ஒவ்வொரு நேரத்திற்கும் முன்பும் பிறகும் அந்தச் மரியன்னை முன்பாக பிரார்த்தனைக்காகச் சென்றுவந்த பாரம்பரியத்தை, இப்போது திருத்தந்தை லியோ தொடர்கிறார்.
அன்றைய தினம், புனித பேதுரு பேராலயத்தில் உள்ள அல்டர் ஆஃப் தி சேர் என்ற பீடத்தின் முன்பாக, மறைந்த திருத்தந்தை பிரான்சிஸுக்கும் கடந்த ஆண்டில் மரணமடைந்த கார்டினல்கள் மற்றும் மறைமாவட்ட ஆயர்கள் அனைவருக்கும் நினைவு திருப்பலியை பாப்பா லியோ அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார்.தமது போதனையில், திருத்தந்தை லியோ அவர்கள் தமது முன்னோடியான திருத்தந்தை பிரான்சிஸைப் பற்றிய “ஆழ்ந்த பாசத்துடன்” உரையாற்றி, “திருத்தந்தை பிரான்சிஸ் புனித வாசலை திறந்து, ஈஸ்டர் ஆசீர்வாதத்தை ரோமாவுக்கும் உலகமுழுவதற்கும் வழங்கிய பின்னர் மறைந்தார்” என்று நினைவு கூர்ந்தார்.
“இந்த யூபிலி ஆண்டின் அருளால்,” என திருத்தந்தை லியோ கூறினார், “இந்த விழா என்னுடைய முதலாவது — ஒரு தனித்துவமான அர்த்தத்தைப் பெறுகிறது; இது கிறிஸ்துவ நம்பிக்கையின் இனிமையை தாங்கியுள்ளது.” அவர் மேலும் கூறுகையில், இதே நம்பிக்கையே திருத்தந்தை பிரான்சிஸின் வாழ்விலும், திருச்சபைக்கு ஊக்கமளிக்கும் பல ஆயர்களின் வாழ்விலும் வெளிப்பட்டது என்று குறிப்பிட்டார்.
வத்திக்கான் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, இது திருத்தந்தை லியோ அவர்கள் தமது முன்னோடியின் கல்லறையை பார்வையிட்ட முதல் முறை அல்ல. மே 10 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் திருத்தந்தை பிரான்சிஸின் சமாதியில் சென்று மலர் வணக்கம் செலுத்தி, சில நிமிடங்கள் அமைதியான தியானத்தில் ஈடுபட்டார். பின்னர், ஜூன் 22 அன்று, புனித யோவான் லாதரான் பேராலயத்திலிருந்து புனித மேரி மேஜர் பேராலயத்துக்கு நடந்த கார்பஸ் கிறிஸ்தி ஊர்வலத்திற்குப் பின் அவர் மீண்டும் அந்த கல்லறையை பார்வையிட்டு, தமது முன்னோடியின் நினைவுடன் ஆன்மீக உறவைத் தொடர்ந்தார்.