ஏழைகளுக்கான நற்செய்தி துணிவுள்ள சான்றாக இருக்க வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ் உரை.

அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை மாலை உரோம் தூய இலாத்தரன் பெருங்கோவிலில் உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளுக்கு நற்செய்தியை கொண்டு செல்லுதல், சிதைந்ததை சீர்படுத்துதல், எதிர்நோக்கை விதைத்தல் என்னும் மூன்று தலைப்புகளில் கீழ் தனது கருத்துக்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதலில், ஏழைகளுக்கு நற்செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும். ஏழைகள் எப்போதும் நம்முடன் இருக்கின்றார்கள், ஏழைகள் கிறிஸ்துவின் உடலாகவும் திருவருளடையாளமாகவும் அவரை நம் கண்களுக்குப் புலப்படுகிறார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தெருவோர எளியோர்க்கு பணம் கொடுத்து உதவும்போது அவர்களின் கண்களைப் பார்த்து உதவ வேண்டும், மாறாக பணத்தை தூக்கி எறிந்து நடப்பது என்பது அவர்களில் வாழும் கடவுளை உதாசீனப்படுத்துவது என்றும் கூறினார்.

ஏழ்மையைத் தீர்க்கின்ற ஒரு மாயமந்திரத்தை இயேசு நமக்கு வழங்கவில்லை மாறாக அவர்களிடத்திலும் “நற்செய்தியை” கொண்டு செல்லும்படிக் கேட்கிறார் என்றும், இறைவனால் அன்பு செய்யப்படுவர்கள், கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றவர்களாக கருதப்படும் ஏழை எளியோரின் மாண்பு உலகத்தாரால் நசுக்கப்படுகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை,ஏழைகள் எண்களாக, பிரச்சனைகளாகவோ, நிராகரிக்கப்படுபவர்களாகவோ கருதப்படக்கூடாது என்றும், நமது உடலாக இருக்கும் உடன் சகோதரர்கள் போன்று கருதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள் உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் பலர் ஏழை எளியோர்க்கு பணியாற்றுவதற்காக தங்கள் நேரத்தை பயன்படுத்துவது குறித்து வாழ்த்து தெரிவித்தார்.

பெரும் சமூகக் கட்டமைப்பு, சமத்துவமின்மை காரணமாக, அன்றாடம் உணவுப்பொருள்கள் வீணாகின்றன பல ஆடம்பர உணாவு விடுதிகளில் எண்ணற்ற உணவுப்பொருள்கள் கொட்டப்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், உண்ண உணவின்றி ஆயிரக்கணக்கான ஏழைகள் நடைபாதைகளில் உறங்குவதை நாம் காண்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

பணக்காரர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களது தேவைகள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் இவ்வுலகில், ஏழைகள் நோய்வாய்ப்பட்டால் அவர்கள் மாண்புடன் நடத்தப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய முரண்பாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளால் நாம் வாழ்கின்ற இந்த உலகம் சிதைந்துள்ளது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்துள்ளார்.

சமூகப் பிரச்சினைகளின் பன்முகத்தன்மையானது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லும் அளவிற்கு நம்மை கொண்டு செல்லலாம். ஆனால் கிறிஸ்தவ நம்பிக்கை என்பது எப்போதும் செயல்பாட்டில் இருப்பது. ஏனென்றால் வரலாற்றை வழிநடத்துவது இறைவன் தான் என்ற உறுதியால் அது உயிரூட்டப்படுகிறது, மனிதனால் சாத்தியமற்றது என்று தோன்றுவதை அவரில் உருவாக்குகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது! எதிர்நோக்கின் பாதையில் செல்வோம் என்றும், ஒரு நல்ல விதையை விதைக்க வேண்டியதன் அவசியத்திற்கு பதிலளிக்கும் பணியில் ஈடுபடும் பல மக்கள், அந்த சிறிய விதையானது பெரிய மரமாக மாறும் வரை வேறு யாராவது பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் செயல்முறைகளை செயல்படுத்துவதைப் பின்பற்றுகின்றார்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.