கடவுளுக்கு உரியதைக் கொடுக்கத் தயாரா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

நற்செய்தி வாசகம்
மு.வா: தோபி: 2: 9-14
ப.பா: திபா 112: 1-2. 7-8. 9
ந.வா:மாற்: 12: 13-17

 கடவுளுக்கு உரியதைக் கொடுக்கத் தயாரா!

கொரோணா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரசு ஊதியம் பெறும் ஆசிரியர் மாத வருவாயில் பாதியைப் பயன்படுத்தி மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவி செய்தார். அவரிடம் உதவி பெற்ற நபர் "உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி " என்று கூறினார். அதற்கு அந்த ஆசிரியர் "எனக்கு சிறுவயதாக இருக்கின்ற பொழுது ஒரு வேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் இருந்தபொழுது கிறிஸ்தவ அருட்சகோதரிகள் நடத்திய ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் படித்துதான் இந்த நிலைமைக்கு உயர்ந்து நிற்கின்றேன். என்னிடம் பணம் இல்லாத பொழுது என்னோடு இருந்தது மனிதநேயம் மட்டுமே. அந்த மனிதநேயம் தான் கடவுள். அந்த மனித நேயம் தான் என்னை ஒரு ஆசிரியராக உயர்த்தியது. எனவே இத்தகைய  உதவி செய்வது கடவுளுக்கு நான் செலுத்தும் நன்றி. எனக்கு இப்பொழுது எல்லாம் நிறைவாக இருக்கின்றது. இதைக் கொடுத்தது கடவுள். நான் கடவுளுக்கு நேரடியாக எதையும் கொடுக்க முடியாது. ஆனால் உங்களுக்கு கொடுப்பதன் வழியாக கடவுளுக்கு கொடுக்கலாம் "என்று கூறினார். இதைக் கேட்ட உதவி பெற்ற அந்த நபர் "மனித நேயத்தில் தான் கடவுள் இருக்கின்றார்" என்று கூறி சென்றுவிட்டார். 

நம்முடைய வாழ்க்கையில் கடவுள் பலவற்றை நமக்கு கொடுத்திருக்கின்றார். கொரோனா என்ற இந்த இக்கட்டான சூழலில் உலகமே துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏழை எளிய மக்கள் போதுமான உணவு இல்லாமல்,  உடுத்த உடை இல்லாமல், இருக்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  இப்படிப்பட்ட சூழலில் மனித நேயத்தோடு பிறருக்கு  நம்மிடம் நிறைவாக இருப்பதைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது நாம் கடவுளுக்கு வரி செலுத்துகிறோம். அந்த வரி நமக்கு அருளையும் ஆசிர்வாதத்தை கொடுக்கும். 

உரோமை ஆட்சியில் வரி என்பது ஒரு குடிமகனின் உரிமையாகவும் கடமையாகவும் கருதப்பட்டது. இயேசுவை சூழ்ச்சியில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பரிசேயர்கள் "வரி செலுத்துவது முறையா? "என்று கேட்டனர். இயேசு வரி செலுத்துவது தவறு என்று கூறியிருந்தால் அவர் அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என்று குற்றம் சுமத்தலாம் என பரிசேயர்கள் நினைத்தனர். ஆனால் பரிசேயர்களின் குறுகிய எண்ணத்தைப் புரிந்துகொண்டு கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் சீசருக்கு உரியதை சீசருக்கும் கொடுங்கள் எனக் கூறியுள்ளார்.  இதன் பின்னணி என்னவென்றால் நாம்  வாழ்கின்ற சூழலில் அரசுக்கான வரிகளை மட்டும் செலுத்தாமல்,  மனிதநேய செயல்பாடுகள் வழியாக உதவி செய்து கடவுளுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற ஆழமான இறையியல் சிந்தனையைக் கொடுத்துள்ளார்.  நாம் நம்மையே ஆய்வு செய்து பார்ப்போம். நம்மிடம் நிறைவாக இருப்பதை தேவையில் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தயாரா?  பகிரத் தொடங்கினால் கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுத்து நற்செய்தி விழுமியத்திற்கு    சான்று பகர முடியும்.

 இறைவேண்டல் : 
வல்லமையுள்ள இறைவா!  எங்களில் நிறைவாக இருப்பதைத், தேவையில் உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நல்ல மனநிலையைத் தாரும்.இதன் மூலம் உமக்கு உரியதை நாங்கள் கொடுக்கிறோம் என்பதை உணர்ந்து வாழ அருள் புரியும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்