செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் அறநெறி மற்றும் ஆன்மிகப் பகுத்தறிவு அவசியம்: ஆசியத் திருஅவைக்கு இறையியலாளர் அழைப்பு | Veritas Tamil
பாபேல் கோபுரத்திற்கும் எருசலேம் நகரத்திற்கும் இடையிலான விவிலிய ஒப்புமையை முன்வைத்து, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும்போது ஆசியத் திருஅவையின் தகவல் தொடர்புப் பணியாளர்கள் ஆழமான அறநெறி மற்றும் ஆன்மிகப் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இறையியலாளர் பேராசிரியர் லியோ-மார்ட்டின் ஆஞ்சலோ ஆர். ஒகாம்போ அழைப்பு விடுத்துள்ளார்.
மணிலாவில் உள்ள புனித தோமையார் திருத்தந்தை பல்கலைக்கழகத்தின் இறையியல், சமய ஆய்வுகள் மற்றும் அறநெறி மையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் பொதுநிலையினரான தொமினிக்கன் சபை உறுப்பினர் பேராசிரியர் ஒகாம்போ அவர்கள், அக்டோபர் 28ஆம் நாள் பிற்பகல் மகாவோவில் உள்ள புனித ஜோஸ் வில்லா மாநாட்டு அரங்கில் உரையாற்றினார்.
அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் சமூகத் தொடர்பு அலுவலகத்தின் (FABC-OSC) இக்கூட்டத்தில், ஆசிய ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினரான ஊடகப் பணியாளர்கள் பங்கேற்கின்றனர். “மகத்தான மானுடம் மற்றும் ஆசியாவில் நற்செய்தி அறிவிப்பதற்கான ஒன்றிப்புப் பாதைகள்: செயற்கை நுண்ணறிவு காலத்தில் கிறிஸ்துவைத் தொடர்புகொள்ளுதல்” என்பது இக்கூட்டத்தின் மையக்கருத்தாகும்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் மகத்தான மானுடம் திருமடலையும், புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பகுத்தறிவு மரபையும் அடிப்படையாகக் கொண்டு உரையாற்றிய பேராசிரியர் ஒகாம்போ, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சுயநலத்தையும் தற்பெருமையையும் வளர்க்கும் ‘பாபேல் கோபுரத்தை’ உருவாக்குகிறதா அல்லது ‘எருசலேமை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு’ உதவுகிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்குமாறு பங்கேற்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
“பாபேல் கோபுரம் என்பது கடவுளைப் புறக்கணித்து, தற்பெருமை, தற்சார்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படும் திட்டத்தைக் குறிக்கிறது. இத்தகைய அணுகுமுறை மனிதர்களைத் தரவுகளாகவும் செயல்திறன் அளவீடுகளாகவும் சுருக்கிவிடுகிறது. ஆனால், நெகேமியா நூலில் காணப்படுவதுபோல், எருசலேமை மீண்டும் கட்டியெழுப்புவது என்பது அனைவருக்கும் இடமளிக்கும் வகையில் மனித உறவுகளை முதலில் சீரமைத்து, சமூகமாக இணைந்து செயல்படுவதைக் குறிக்கிறது” என்று அவர் விளக்கினார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இயல்பிலேயே தீமையானது அல்ல என்றாலும், நடைமுறையில் அது ஒருபோதும் முழுமையாக நடுநிலையானதாக இருப்பதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு கணினி வழிமுறையும் (Algorithm) அதை உருவாக்குபவர்களின் முன்னுரிமைகள், மதிப்பீடுகள் மற்றும் அதிகாரக் கட்டமைப்புகளைப் பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்தார். தொழில்நுட்பத்தின் செயல்திறனை அறநெறிசார் நன்மையுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது என்றும், திறமையாகச் செயல்படும் அமைப்புகள்கூட பாரபட்சத்தை அதிகரிக்கவும் நலிவடைந்தவர்களைப் புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தார்.
தகவல் தொடர்புக் கருவிகள் ஆய்வு மற்றும் மறைப்பணிச் செயல்பாடுகளை எளிதாக்கினாலும், அவை மனித இதயம், உண்மையான உடனிருப்பு, மனச்சான்று மற்றும் தனிப்பட்ட சான்று வாழ்வுக்கு மாற்றாக அமைய முடியாது என்றும் அவர் கூறினார்.
“செயற்கை நுண்ணறிவு தானாகவே அறநெறியுடன் செயல்படாது; அதனைப் பயன்படுத்துபவர்களிடமிருந்தே அறநெறி வெளிப்பட வேண்டும். ஓர் அருள்பணியாளர், கிறிஸ்துவுடனான தனது நட்பையும், இறைவார்த்தையைப் பற்றிய தனது படிப்பையும், மக்கள்மீதான அன்பையும் கணினி வழிமுறையிடம் ஒருபோதும் ஒப்படைத்துவிடக் கூடாது” என்று பேராசிரியர் ஒகாம்போ வலியுறுத்தினார்.
ஆசியத் திருஅவையின் ஒன்றிப்புப் பயணத்துடன் தமது கருத்துகளை இணைத்துப் பேசிய அவர், கத்தோலிக்கத் தலைவர்கள் அனைவரும் இணைந்து செவிமடுக்கும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, தொழில்நுட்ப மாற்றங்களால் பாதிக்கப்படும் விளிம்புநிலைச் சமூகத்தினரின் குரல்களுக்குச் செவிமடுப்பதன் வழியாக, செயற்கை நுண்ணறிவு சகோதரத்துவம், மனித மாண்பு மற்றும் பொது நலனுக்குச் சேவை செய்வதைத் திருஅவை உறுதிப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
