துன்புறும் இதயங்களுக்கு அன்னையின் அரவணைப்பு ! | Veritas Tamil

நோயுற்றவர்கள் மற்றும் துன்பப்படுபவர்கள் அன்னை மரியாவின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இந்தத் திருத்தலத்தை ஒரு புகலிடமாகவும், தங்களது சொந்த இல்லமாகவும் உணர வேண்டும்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், பொம்பெயி திருத்தலத்திற்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணிப் பயணத்தின் போது, Temple of Charity என்று அறியப்படும் "பிறரன்பின் ஆலயத்தில் உள்ள நோயுற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து உரையாடினார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆற்றிய உரை.

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!

உங்கள் நம்பிக்கையின் வலிமையாலும், நமது ஆசிர்வதிக்கப்பட்ட அன்னையான மரியாவின் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பினாலும், பல தடைகளையும் சிரமங்களையும் கடந்து, இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு வந்ததற்காக உங்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு மிக்க நன்றி!

இந்தத் திருத்தலத்தில் நீங்கள் உண்மையிலேயே உங்கள் இல்லத்தில் இருப்பதைப் போன்ற உணர்வைப் பெறுகிறீர்கள். அன்னை மரியாவின் ஒவ்வொரு திருத்தலத்தைப் போலவே, இங்கும் நோயாளிகளும் துன்பப்படுபவர்களுமே அன்னையின் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். நாம் அன்னையை 'சலூஸ் இன்ஃபர்மோரம்' (Salus Infirmorum)  நோயாளிகளின் ஆரோக்கியமே என்று போற்றி வேண்டுகிறோம்.

அன்னையின் மேலங்கியின் பாதுகாப்பில் நின்று, இன்று நாம் இணைந்து செபிப்போம்: நான் உங்களுக்காகச் செபிக்கிறேன், நீங்கள் திருத்தந்தைக்காகவும் அவருடைய கருத்துக்களுக்காகவும் (Intentions) செபியுங்கள். உங்கள் செபங்கள் நேரடியாக விண்ணகத்தை சென்றடைகின்றன! 'யாரெல்லாம் செபமாலையைப் பரப்புகிறார்களோ, அவர்கள் மீட்கப்படுவார்கள்' என்று புனிதர் பார்டோலோ லோங்கோ கூறுவார்; இந்த அழகான செபத்தின் வலிமையான சாட்சிகளாகவும், அதனை ஊக்குவிப்பவர்களாகவும் நிச்சயமாக நீங்கள் விளங்குகிறீர்கள்.”

“சிறிது நேரத்திற்கு முன்பு, சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் அவர்களுடைய சாட்சியத்தின் உண்மையும் புத்துணர்வும் இந்த உலகையே மாற்றும் என்று நான் கூறினேன். உங்களுக்கு நான் சொல்வது இதுவே: நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் தியாகங்களையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பது அதைவிட மேலான காரியங்களைச் செய்யக்கூடும் — ஆன்மாக்களின் மீட்பிற்காகவும், உலக அமைதிக்காகவும், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே நிலவ வேண்டிய ஒற்றுமைக்காகவும் அவை பெரும் பலன் தரும். இதற்காகவே, உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்; அதேபோல் உங்களை அன்போடு கவனித்துக் கொண்டு, உங்கள் அருகே துணையாக நிற்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, தம் திருத்தாயிடம்: ‘பெண்ணே, இதோ உம் மகன்!’ என்றும், அன்புச் சீடரிடம்: ‘இதோ உன் தாய்!’ என்றும் கூறினார். இன்று, அவரே இவ்வார்த்தைகளை உங்களுக்காக, குறிப்பாக எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே, உங்களுக்காக மீண்டும் கூறுகிறார். இயேசு தனது சிலுவையைச் சுமந்ததைப் போலவே, நீங்களும் உங்கள் தோள்களில் கனமான சுமைகளைச் சுமந்து கொண்டு, நம்பிக்கையோடு அன்னை மரியாவிடம் வந்திருக்கிறீர்கள்.”

இயேசு மரியாவிடம், ‘தாயே, இதோ உம் புதல்வர்களும் புதல்விகளும்!’ என்று கூறுகிறார்; உங்களிடமோ, ‘இதோ உன் தாய்!’ என்கிறார். அன்னையின் அன்பான பரிந்துரை உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கட்டும்; எனது உளப்பூர்வமான ஆசி உங்களோடும், உங்கள் அன்பிற்குரியவர்கள் அனைவரோடும் என்றும் நிலைத்திருக்கட்டும். “பொம்பெயி நகரின் புனித செபமாலை அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!” “புனித பார்டோலோவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!”

நன்றி வத்திக்கான் செய்தி