அணு ஆற்றலை விவேகத்துடன் பயன்படுத்த திருத்தந்தை அழைப்பு ! | Veritas Tamil

அணுசக்தி தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் வெறும் லாபத்தை மட்டும் நோக்காமல், விவேகம் மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

அணு ஆற்றலை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும், செர்னோபில் அணு உலை விபத்தில் உயிரிழந்தவர்களையும் அதன் பாதிப்புகளால் துன்புறுவோரையும் இறைவனின் இரக்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார் .

ஏப்ரல் 26, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்திக்குப் பிறகு இவ்வாறு திருத்தந்தை தெரிவித்தார். 

செர்னோபில் அணு உலை விபத்தின் 40-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அதனை மனிதகுலத்தின் மனசாட்சியில் ஆழமாகப் பதிந்துவிட்ட துயரம் என்று கூறிய திருத்தந்தை, பெருகி வரும் ஆற்றல்மிக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்து குறித்து எச்சரித்தார்.

மேலும் அணுசக்தி தொடர்பான முடிவெடுக்கும் அனைத்து நிலைகளிலும் விவேகமும் பொறுப்புணர்வும் எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, இதனால் அணு ஆற்றலின் ஒவ்வொரு பயன்பாடும் வாழ்விற்கும் அமைதிக்கும் சேவை செய்வதாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று, உக்ரைனின் கீவ் நகருக்கு வடக்கே ஏறத்தாழ 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோவியத் நிர்வாகத்தின் கீழ் இருந்த செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஒரு உலை வெடித்துச் சிதறியது. இதில் 31 பேர் உடனடியாக உயிரிழந்தனர், அடுத்த சில ஆண்டுகளில் கதிர்வீச்சு நச்சுத்தன்மையால் மேலும் 15,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வத்திக்கான் செய்தி