திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் பதினொன்றாம் நாள் நிகழ்வுகள் ! | Veritas Tamil

ஏப்ரல் 23, வியாழக்கிழமை அன்று  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான தமது திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்கிறார். முற்பகல் 10 மணிக்கு மலாபோ மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், பிற்பகல் மணி 12:15 க்கு மலாபோ சர்வதேச விமான நிலையத்தில் விடைபெறும் நிகழ்வு நடைபெறுகிறது. அனைவருக்கும் ஆசி வழங்கியபின் பிற்பகல் மணி 12:45 க்கு மலாபோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து உரோமை நகருக்குப் புறப்படுகிறார். இரவு மணி 7:55 க்கு உரோமையிலுள்ள பியுமிசினோ விமான நிலையத்தை வந்தைடைகிறார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் பதினொன்றாம் நாளாகிய இன்று, அதாவது தமது திருத்தூதுப் பயணத்தின் இறுதிநாளை தொடங்கியிருக்கிறார்.

முற்பகல் 10 மணிக்கு மலாபோ மைதானத்தில் திருப்பலி நடைபெறுகிறது. மலாபோ மைதானம் 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது எக்குவடோரியல் கினியாவின் தலைநகரான மலாபோவில் அமைந்துள்ளது. இது சுமார் 15,250 பேர் அமரக்கூடிய வசதி கொண்டது. இது நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பல்நோக்கு மைதானமாகும். இந்த நவீன மைதானம் கட்டப்படுவதற்கு முன்பு, அந்த இடத்தில் பழைய தேசிய மைதானம் இருந்தது. 1969 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று, நாட்டின் அப்போதைய அதிபர் பிரான்சிஸ்கோ மசியாஸ் நுகுயேமாவின் உத்தரவின் பேரில், அரசியல் எதிர்ப்பாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் அங்கு வைத்து தூக்கிலிடப்பட்ட ஒரு கொடூரமான வரலாற்றுப் பின்னணியும் இதற்கு உண்டு.

இப்பொழுது மலாபோ மைதானம் நாட்டின் விளையாட்டு மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்கிறது. இது எக்குவடோரியல் கினியா தேசிய கால்பந்து அணியின் தாயக மைதானமாகும். 2012 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளின் கால்பந்து போட்டிகளை நடத்திய முக்கிய மைதானங்களில் இதுவும் ஒன்று. 2008  ஆம் ஆண்டு ஆப்பிரிக்க மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் இங்குதான் நடைபெற்றது.

தேசிய விழாக்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் அரச நிகழ்ச்சிகளுக்கான முக்கிய தளமாக உள்ளது. மக்கள் ஒன்றுபடும் பொதுவான இடமாகவும் இது செயல்படுகிறது.

பெரிய அளவிலான மக்களை ஒரே இடத்தில் கூடச் செய்யும் வசதி இருப்பதால், திருப்பலி, திருஅவை நிகழ்வுகள், குறிப்பாக திருத்தந்தையர் வருகை போன்ற நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுகின்றன.

மலாபோ விளையாட்டரங்கு என்பது ஒரு சாதாரண விளையாட்டு மைதானம் மட்டுமல்ல. சுருக்கமாகச் சொன்னால், மலாபோ மைதானம் அந்த நாட்டின் கடந்த காலத்தின் சாட்சியாகவும், நிகழ்காலத்தின் விளையாட்டு மற்றும் கலாச்சார அடையாளமாகவும் திகழ்கிறது. மேலும் இது விளையாட்டு, தேசிய ஒற்றுமை மற்றும் திருஅவையின் ஆன்மீக வாழ்க்கை ஆகிய மூன்றையும் இணைக்கும் முக்கியமான அடையாளமாக உள்ளது.

திருப்பலி நிறைவேற்றியபின் பிற்பகல் மணி 12:15 க்கு மலாபோ சர்வதேச விமான நிலையத்தில் திருத்தந்தை அவர்களுக்கு விடைபெறும் நிகழ்வு நடைபெறுகிறது. அனைவருக்கும் நன்றிகூறி, இறையாசீர் வழங்கியபின், பிற்பகல் மணி 12:45 க்கு மலாபோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து உரோமை நகருக்கு திருத்தந்தை அவர்கள் புறப்படுகிறார்கள். இரவு மணி 7:55 க்கு உரோமையிலுள்ள பியுமிசினோ விமான நிலையத்தை வந்தைடைகிறார்.

இத்துடன் திருத்தந்தை லியோ XIV அவர்களின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திட்டம் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து வத்திக்கான் வானொலியுடன் இணைந்திருங்கள். உடனடித் தகவல்களைப் பெற்று பயன்பெறுங்கள்.

நன்றி வத்திக்கான் செய்தி