திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் எட்டாம் நாள் நிகழ்வுகள் ! | Veritas Tamil
ஏப்ரல் 20, திங்கள்கிழமை இன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் லுவாண்டாவின் பிப்ரவரி 4 சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சௌரிமோ செல்கிறார். சௌரிமாவிலுள்ள நலக்காப்பகத்திற்கு சென்று அவர்களை சந்தித்துவிட்டு, சௌரிமோ எஸ்பிளானட் எனப்படும் சௌரிமா சமூக கலாச்சார மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார். அதன்பின், லுவாண்டா திரும்பிவந்து அங்கு ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியரைச் சந்தித்து தனது இன்றைய நாளுக்கான பயணத்தை நிறைவுசெய்கிறார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் எட்டாம் நாளை இன்று ஏப்ரல் 20 ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கியிருக்கிறார்.
காலை மணி 7.45 க்கு லுவாண்டாவின் பிப்ரவரி 4 சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சௌரிமோ செல்கிறார். சௌரிமோ, அங்கோலாவின் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள லுண்டா சுல் (Lunda Sul) மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இப்பகுதி தொடக்கத்தில் புகழ்பெற்ற லுண்டா பேரரசின் (Lunda Empire) ஒரு பகுதியாக இருந்தது. 1884 இல் போர்ச்சுகீசிய ஆய்வாளர் (Henrique de Carvalho) என்பவரால் இந்த நகரம் நிறுவப்பட்டது. 1975 இல் அங்கோலா சுதந்திரம் பெறும் வரை ஹென்றி டி கார்வால்ஹோ பெயராலேயே இந்நகரம் அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, உள்ளூர் பெயரான 'சௌரிமோ' என்று மாற்றப்பட்டது. சௌரிமோ என்னும் பெயர் அந்தப் பகுதியில் வாழும் பூர்வீக மக்களான சோக்வே (Chokwe) மொழியிலிருந்து வந்த பெயராகக் கருதப்படுகிறது. இதற்கு அந்த மொழியில் "சிறிய குளம்" அல்லது "நீர்நிலை" என்று பொருள் இருக்கலாம் என்று உள்ளூர் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இது ஒரு ராணுவத் தளமாகவும், நிர்வாக மையமாகவும் செயல்பட்டது. அங்கோலா உள்நாட்டு போர் (1975-2002) காலத்தில் நகரம் பாதிக்கப்பட்டது. போர் முடிந்தபின் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வளர்ச்சி பெற்றது.
இங்கு லுண்டா மற்றும் சோக்வே பழங்குடி மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். இவர்களது மரச்சிற்பங்களும், சின்னங்கள், குறிப்பாக இவர்களின் 'மவானா போ' (Mwana Pwo) எனப்படும் முகமூடிகளும் உலகப் புகழ்பெற்றவை. இவை அவர்களின் முன்னோர்களின் ஆவிகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இவை இவர்களது கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் அடையாளமாகும். இந்நகரம் வைரச் சுரங்கங்களுக்கு மிகவும் பெயர் பெற்றது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய வைரச் சுரங்கங்களில் ஒன்றான 'காடோகா' (Catoca) இதற்கு அருகிலேயே உள்ளது. இவர்கள் சோக்வே மற்றும் லுண்டா உள்ளூர் மொழிகள் பேசுகின்றனர். போர்ச்சுகீசியம் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கிறது. குடும்பம் மற்றும் சமூக ஒற்றுமை இவர்கள் வாழ்க்கையின் மையமாக உள்ளது.
சௌரிமோ நகரின் வளர்ச்சிக்கு கத்தோலிக்க திருஅவை மிக முக்கியமான பங்காற்றியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் சௌரிமோ ஒரு உயர் மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. இந்த உயர்மறைமாவட்டத்தின் பேராலயம் அன்னை மரியாள் விண்ணேற்பு பேராலயமாகும். பேராயர் ஜோஸ் மானுவல் இம்பாம்பா (Archbishop José Manuel Imbamba) இங்குள்ள கத்தோலிக்க சமூகத்தின் மிக முக்கியமான தலைவர் மற்றும் சமூக நீதிப் போராளி ஆவார். அரசுக்கு இணையாக இங்குள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை நடத்துவதில் கத்தோலிக்க திருஅவை முன்னணியில் உள்ளது. இன்று சௌரிமோ பொருளாதார வளமும் ஆன்மீக எழுச்சியும் கொண்ட ஒரு நகராகத் திகழ்கிறது.
காலை மணி 9:20 க்கு தியோலிண்டா ரோட்ரிக்ஸ் விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். அங்கு அவருக்கு வரவேற்புக் கொடுக்கப்படுகிறது. இந்த விமான நிலையம் ஒரு போக்குவரத்து மையம் மட்டுமல்ல, ஒரு வரலாற்று நினைவுச்சின்னம். தியோலிண்டா ரோட்ரிக்ஸ் என்பவர் அங்கோலா நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு மிக முக்கியமான பெண்மணி ஆவார். இவர் ஒரு தேசியவாதி, போராளி, எழுத்தாளர் மற்றும் கவிஞர். 1960களில் போர்ச்சுகீசிய ஆட்சிக்கு எதிராக போராடினார். அங்கோலாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய - அங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கத்தின் (MPLA – Movement of the Liberation of Angola) முக்கிய உறுப்பினராக இருந்தார். தியோலிண்டா ரோட்ரிக்ஸ் வெறும் ஒரு போராளி மட்டுமல்ல, அவர் பெண்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர். எனவே இவ்வியக்கத்தின் மகளிர் பிரிவான அங்கோலா பெண்கள் அமைப்பை (OMA – Organization of Angolan Women) உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். கல்வி மற்றும் சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்ட இவர், போராட்டத்தின் போது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதிலும், மருத்துவ உதவிகள் செய்வதிலும் முன்னின்றார்.
1967 ஆம் ஆண்டு தனது சக பெண் போராளிகளுடன் பயணித்தபோது காங்கோ எல்லைக்கு அருகில் எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இவர் அங்கோலா மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் "வீர மங்கை" என்று போற்றப்படுகிறார். அங்கோலாவின் சுதந்திர வரலாற்றைப் படிக்கும் எவரும் தியோலிண்டாவின் தியாகத்தைத் தவிர்க்க முடியாது. அவர் ஒரு புரட்சியாளராக மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கப் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒரு வித்தாக அமைந்தார். எனவேதான் அவர் இறந்த தினமான மார்ச் 2 அங்கோலா பெண்கள் தினமாகப் போற்றப்படுகிறது. மேலும் இந்த விமான நிலையத்திற்கு இவரின் பெயரைச் சூட்டி வரலாற்றை நினைவுபடுத்துகிறது.
அங்கிருந்து புறப்பட்டு காலை மணி 9:45 க்கு அங்குள்ள நலக்காப்பகத்திற்குச் (Nursing Home) சென்று, அங்குள்ளவர்களைச் சந்திக்கிறார்.
அதன்பின் முற்பகல் மணி 11:15 க்கு சௌரிமோ எஸ்பிளானட் (Saurimo Esplanade) எனப்படும் சௌரிமோ சமூக கலாச்சார மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார். இது சௌரிமோ நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான திறந்தவெளி மைதானம் ஆகும். இது நகரத்தின் சமூக இதயம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அரசு விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மிக முக்கியமான மத நிகழ்வுகள் நடைபெறும் முதன்மை இடமாக திகழ்கிறது. இந்த இடமானது அங்கோலாவின் பாரம்பரிய சோக்வே கலை அடையாளங்கள் மற்றும் கத்தோலிக்க சின்னங்களுடன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்காக லூண்டா சுல் மாகாணம் முழுவதிலும் இருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும் சுமார் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தந்தையின் வருகையை முன்னிட்டு, ஏப்ரல் 19 ஞாயிறு மாலை முதலே மக்கள் இந்த எஸ்பிளானட் பகுதியில் குவியத் தொடங்கிவிட்டனர்.
சௌரிமோ எஸ்பிளானட்டில் திருப்பலி நிறைவேற்றி, மக்களை ஆசீர்வதித்தபிறகு, மதியம் மணி 1:45 க்கு சௌரிமோவின் தியோலிண்டா ரோட்ரிக்ஸ் விமான நிலையத்திலிருந்து லுவாண்டாவிற்கு திரும்புகிறார். பிற்பகல் மணி 3:15 க்கு லுவாண்டாவின் பிப்ரவரி 4 சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துசேர்கிறார்.
மாலை மணி 5:30 க்கு புனித பாத்திமா அன்னை பங்கு ஆலயத்தில் ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர் மற்றும் மேய்ப்புப் பணியாளர்களைச் சந்திக்கிறார். இத்துடன் இன்றைய நாளுக்கான திருத்தந்தையின் பயணம் திட்டக் குறிப்பு நிறைவு பெறுகிறது.
நன்றி வத்திக்கான் செய்தி