உண்மையான விடுதலையை நோக்கி ஒரு புனிதப் பயணம் ! | Veritas Tamil
துன்பங்களுக்கு மத்தியிலும் மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, உடைந்த உள்ளங்களுக்கு அருகில் இருக்கும் கடவுளின் அன்பைப் பிரதிபலிக்கிறது.
ஏப்ரல் 16, வியாழனன்று கேமரூனின் வடமேற்கு பகுதியில் அமைந்த முக்கிய நகரமான பாமெண்டாவில் இடம்பெற்ற திருப்பலியின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
அமைதி மற்றும் ஒற்றுமையின் தூதராக உங்கள் பகுதிக்கு வருகை தந்து, உங்கள் வாழ்க்கைப்பயணம், போராட்டங்கள் மற்றும் நம்பிக்கைகளில் பங்கெடுப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். திருவழிபாடுகளின் போது வெளிப்படும் கொண்டாட்டங்களும், உங்கள் இறைவேண்டலிலிருந்து பெருகியோடும் மகிழ்ச்சியும், நீங்கள் கடவுள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், அசைக்க முடியாத எதிர்பார்ப்பையும், தந்தையின் அன்பின் மீதான உங்கள் உறுதியான பிடிப்பையும் பிரதிபலிக்கின்றன. துன்புறும் பிள்ளைகள் மீது மிகுந்த இரக்கத்தோடு தந்தை காட்டும் அந்த அன்பையே நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை இது உணர்த்துகிறது. திருப்பாடலில் நாம் நினைவு கூர்ந்தது போல: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். (திருப்பாடல் 34:18).
தற்போதைய சவால்களும் மாற்றத்திற்கான தருணமும்
என் அன்பு சகோதர சகோதரிகளே, வாழ்க்கையில் நேரிடும் பல நிகழ்வுகள் நம் மனதை ரணமாக்கி, நம்மைத் துக்கத்தில் ஆழ்த்துகின்றன. அனைவருடைய மதிப்பும் மரியாதையும் காக்கப்பட்டு, உரிமைகள் வழங்கப்படுகிற ஒரு அமைதியான வாழ்வை நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், இந்த மண்ணில் நிலவும் சவால்கள் அந்த நம்பிக்கையை அடிக்கடி சிதைத்து விடுகின்றன. உணவுப் பற்றாக்குறை நிலவும் சூழலில், வறுமை இன்னும் பலரைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறது. ஒழுக்கத்திலும், சமூகத்திலும், அரசியலிலும் ஊடுருவியுள்ள ஊழல் முக்கியமாகச் சொத்துக்களைக் கையாளுவதில் நிலவும் முறைகேடுகள் நாட்டின் நிறுவனங்களும் அடிப்படை வசதிகளும் முன்னேறுவதைத் தடுத்து நிறுத்துகின்றன. கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளில் நிலவும் கடுமையான சவால்களுடன், சிறப்பான எதிர்காலத்தைத் தேடி இளைஞர்கள் கூட்டமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலையும் இங்கே காணப்படுகிறது. உள்நாட்டில் நிலவும் இந்தப் பிரச்சனைகளுடன், பணத்திற்காக ஆப்பிரிக்காவை வெளியாட்கள் சுரண்டி வருவதும் சேர்ந்து கொள்கிறது.
இப்படியெல்லாம் நடக்கும்போது நாம் கையறு நிலையில் இருப்பதாகத் தோன்றும், அது நம் நம்பிக்கையையும் குறைத்துவிடும். ஆனால், நாட்டின் சூழ்நிலையை மாற்றியமைக்கவும், புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கவும் இதுவே உகந்த நேரம். நாட்டினுடைய மற்றும் கண்டத்தினுடைய பன்முகத்தன்மையையும் வளமையையும் ஏற்றுக்கொண்டு, ஒற்றுமையை மீட்டெடுப்பதற்கான நேரம் இதுதான், நாளை அல்ல, இப்பொழுதே. அவ்வாறு செய்வதன் மூலம், அமைதியும் நல்லிணக்கமும் மேலோங்கி நிற்கும் ஒரு சமுதாயத்தை நம்மால் கட்டியெழுப்ப முடியும்.
சூழல்கள் நீண்ட காலமாக மாறாமல் இருக்கும்போது, புதியது எதுவும் நடக்காது என்ற சலிப்பு ஏற்பட்டு, எதையும் மாற்ற முடியாது என்ற மனநிலைக்கு நாம் தள்ளப்படும் ஆபத்து உள்ளது. ஆனால், இறைவார்த்தை புதிய வழிகளைக் காட்டி, நம் வாழ்வில் மாற்றத்தையும் குணப்படுத்துதலையும் தருகிறது. அது நம் உள்ளத்தை உலுக்கி, நாம் பழகிக்கொண்ட வழக்கமான பாதைகளை மாற்றச் சொல்கிறது; அத்தோடு, மாற்றத்தைக் கொண்டுவரும் உண்மையான மனிதர்களாக வாழ நம்மைத் தூண்டுகிறது. இறைவன் எப்போதும் புதுமையானவர். அவர் புதிய காரியங்களைச் செய்கிறார். தீமையை எதிர்த்து நின்று, நன்மையை உருவாக்க நமக்குத் துணிவு தருகிறார்.
திருத்தூதர்கள் வழங்கிய சாட்சியத்தில் நாம் இதனைக் காண்கிறோம். கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றியதற்காக அவர்கள் விசாரணைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளானபோது: 'மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதை விட, கடவுளுக்கே நாம் கீழ்ப்படிய வேண்டும்' (திருத்தூதர் பணிகள் 5:29) என்று துணிவுடன் பதில் கூறினர். அவர்களின் அந்தத் துணிவு, மனசாட்சியின் ஒலியாகவும், தீமையைச் சுட்டெரிக்கும் இறைவாக்காகவும் திகழ்ந்தது. அதுவே மாற்றத்தை நோக்கி அவர்கள் எடுத்து வைத்த முதல் அடியாகவும் அமைந்தது. கடவுளுக்குக் கீழ்ப்படிதல் என்பது நம்மை ஒடுக்குவதோ அல்லது நம் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதோ அல்ல; மாறாக, அது நமக்கு உண்மையான விடுதலையை அளிக்கிறது.
இறைவார்த்தை தரும் புதுமையும் துணிச்சலும்
அதாவது, நம் வாழ்க்கையை அவரிடம் முழுமையாகக் கொடுத்துவிட்டு, அவருடைய போதனைகளின்படி நம் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மாற்றியமைப்பதாகும். நற்செய்தி நமக்கு நினைவூட்டுவது போல, 'விண்ணகத்திலிருந்து வருபவர் அனைவருக்கும் மேலானவர்' (யோவான் 3:31). உலகப் போக்குகளை விடக் கடவுளையே மேலானவராகத் தேர்ந்தெடுப்பவர்கள், தங்களுக்குள் இருக்கும் விடுதலையை மீண்டும் கண்டடைகிறார்கள்; நன்மையின் மேன்மையை உணர்கிறார்கள், மேலும் தீமையை ஏற்க மறுக்கிறார்கள். அவர்கள் சரியான திசையைக் கண்டடைகிறார்கள்; அத்துடன் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புபவர்களாக மாறுகிறார்கள்.
நாம் கடவுளிடமும் அவருடைய வார்த்தையிடமும் நம்மை முழுமையாக ஒப்படைக்கும்போது, உடைந்த இதயங்களுக்கு ஆறுதலும், மாற்றத்திற்கான நம்பிக்கையும் சாத்தியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டும் என்ற இந்த அறிவுறுத்தலை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நற்செய்தியின்படி உண்மையாக வாழவும், விழிப்புடன் இருக்கவும் இது நம்மை அழைக்கிறது; அரசியல் அல்லது பொருளாதார நோக்கங்களுக்காக நமது நம்பிக்கையின் உண்மையைச் சிதைக்கும் நம்பிக்கைகளோடோ அல்லது செயல்பாடுகளோடோ அது கலந்துவிடாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.கடவுள் ஒருவரே உண்மையான விடுதலையைத் தருகிறார்; அவருடைய வார்த்தை மட்டுமே நம்மை முன்நடத்திச் செல்கிறது; அவருடைய தூய ஆவியார் மட்டுமே நம்மைப் புதுப்பித்து, சமூகத்தை மாற்றியமைக்கும் ஆற்றலை நமக்கு வழங்குகிறார்.
உங்களுக்காக நான் இறைவனிடம் வேண்டுகிறேன். வேதனையில் இருப்பவர்களுக்குத் ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் அருள்பணியாளர்கள், மறைப்பணியாளர்கள், துறவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆசீர்வாதங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.துணிவுடன் இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறேன்; திருஅவையின் தாயாகிய அன்னை கன்னி மரியாவின் பரிந்துரை உங்களை எப்போதும் வழிநடத்துவதாக!
நன்றி வத்திக்கான் செய்தி