திருத்தந்தையின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் ! | Veritas Tamil
யவுண்டே நகரின் வாழ்வில் கிறிஸ்தவம் ஒரு அடித்தளமாக விளங்குகிறது. இந்த நகரம் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் தலைமையிடமாகவும் திகழ்கிறது. பழமையான மிஷனரி பணிகளும், நவீன கட்டிடக் கலை அதிசயங்களும் இந்நகரின் கிறிஸ்தவ இருப்பை வெளிப்படுத்துகின்றன.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் நாளை ஏப்ரல் 15ஆம் தேதி புதன்கிழமை இன்று தொடங்குகிறார்.
காலை மணி 9:40 க்கு அல்ஜியர்ஸ் ஹுவாரி பௌமெடியேன் சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு பிரியாவிடை விழா நடைபெறுகிறது. அனைவரிடமும் விடைபெற்றபின்பு காலை மணி 10:10 க்கு திருத்தந்தை அவர்கள் கேமரூன் நாட்டின் தலைநகரான யாவுண்டே நகருக்கு புறப்படுகிறார். இந்த நகரம் கேமரூன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். இது அரசியல் மற்றும் நிர்வாக மையமாக அறியப்படுகிறது. மேலும், அதன் மேடு பள்ளமான நில அமைப்பினால், இது “ஏழு மலைகளின் நகரம்” (City of Seven Hills) என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு பாரம்பரியக் கதையின் படி, ஆரம்ப கால ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள், அந்தப் பகுதியின் பெயரை உள்ளூர் எவொண்டோ (Ewondo) மக்களிடம் கேட்டபோது, அவர்கள் நிலக்கடலை விதைத்துக் கொண்டிருந்ததால், “மியா வொண்டோ” (அதாவது “நாங்கள் நிலக்கடலை விதைத்து வருகிறோம்”) என்று பதிலளித்தனர். அந்த பதிலை ஆராய்ச்சியாளர்கள் “யவுண்டே” என்று பதிவு செய்தனர். இன்றுவரை அதுவே நாட்டின் தலைநகரத்தின் பெயராக நிலைத்திருக்கிறது.
யவுண்டே நகரின் வாழ்வில் கிறிஸ்தவம் ஒரு அடித்தளமாக விளங்குகிறது. இந்த நகரம் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் தலைமையிடமாகவும் திகழ்கிறது. பழமையான மிஷனரி பணிகளும், நவீன கட்டிடக் கலை அதிசயங்களும் இந்நகரின் கிறிஸ்தவ இருப்பை வெளிப்படுத்துகின்றன.
ம்வோல்யே (Mvolyé) – மரியா, திருத்தூதர்களின் அரசி பேராலயம் (Basilique Marie-Reine-des-Apôtres): 1890 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கேமரூனின் முதல் கத்தோலிக்க மிஷன் அமைந்த இடத்தில் இந்த பேராலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் கூரை செபிக்கும் கைகளின் வடிவில் அமைந்துள்ளது. பேராலயத்தின் உள்பகுதியில் பன்னிரண்டு திருத்தூதர்களைக் குறிக்கும் பன்னிரெண்டு பெரிய தூண்கள் அமைந்துள்ளன.
வெற்றியின் அன்னை பேராலயம் (Cathédrale Notre Dame des Victoires) நகர மையத்தில் உள்ள “ரொன் பொயிண்ட் டெ லா போஸ்ட்” பகுதியில் அமைந்துள்ள இந்த பேராலயம், மூவகை (triangular) வடிவமைப்பும் வண்ணமயமான கண்ணாடி ஓவியங்களாலும் சிறப்பாக திகழ்கிறது. ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களை ஒரே நேரத்தில் கொண்டாட வைக்கும் திறன் கொண்டது. தேசிய அளவிலான மத நிகழ்வுகளின் முக்கிய மையமாகவும் உள்ளது.
மொன் பெபே (Mont Fébé) பெனடிக்டின் அருங்காட்சியகம் (Benedictine Museum) திருத்தந்தையர் வழியில் வாழும் துறவிகள் நடத்தும் இந்த அருங்காட்சியகம், நம்பிக்கையும் கலைவும் இணையும் இடமாக உள்ளது. பாரம்பரிய கேமரூனிய முகமூடிகள், வெண்கலச் சிற்பங்கள் மற்றும் மர வேலைப்பாடுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பிற்பகல் மணி 3:20க்கு யவுண்டே நகரின் யாவுண்டே-என்சிமாலென் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார்.அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
கேமரூன் நாடு மிகவும் பாரம்பரிய நாடு. இது “ஆப்பிரிக்காவின் சுருக்க வடிவம்” என அழைக்கப்படும் பல்வகை இயற்கை அமைப்புகள் கொண்ட நாடு. இதன் தலைநகர் யவுண்டே, அதன் வர்த்தக மையம் டுவாலா ஆகும். இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகள் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம். இது பல இன மக்கள் வாழும் நாடு. இங்கு 200-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் வாழ்கின்றனர். இங்கு இசை, நடனம், பாரம்பரிய கலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மரச்சிற்பங்கள், முகமூடிகள், பாரம்பரிய உணவுவகைகள் இந்த நாட்டின் கலாச்சார சிறப்பு.
கத்தோலிக்க நம்பிக்கை நிறைந்த நாடு. திருஅவை இம்மக்களின் கல்வி, சுகாதாரம், சமூகமாற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பல மறைமாவட்டங்கள், பள்ளிகள், சேவை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களின் பங்கேற்பு பாராட்டுவதற்குரியது. திருத்தந்தையின் இந்தப்பயணம் நம்பிக்கை, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றை வலுப்படுத்தும், இளைஞர்களையும், இறையழைத்தலை ஊக்குவிக்கும், மேலும் ஆப்பரிக்க கிறிஸ்தவத்தின் உயிர்த்துடிப்பை உலகிற்கு காட்டும் எனக் கருதப்படுகிறது.
இத்தகைய சிறப்புக்கொண்ட நாட்டில் வந்திறங்கிய திருத்தந்தை அவர்கள் மாலை மணி 4:20 க்கு குடியரசுத் தலைவரை அதிபர் மாளிகையில் மரியாதையின் நிமித்தமாக சந்திக்கிறார்.
மாலை மணி 5:05 க்கு அதிகாரிகள், குடியியல் சமூகத்தினர், தூதரக பிரதிநிதிகளுடன் திருத்தந்தையின் சந்திப்பு நடைபெறுகிறது.
அதன்பின் மாலை மணி 5:45 க்கு ந்குல் ஜாம்பா அனாதை இல்லத்திற்குச் சென்று அவர்களை சந்தித்து பார்வையிடுகிறார். அங்கிருந்து புறப்பட்டு மாலை மணி 6:25 க்கு கேமரூன் ஆயர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார். இத்துடன் இன்றைய நாளுக்கான திருத்தந்தையின் பயணம் திட்டக் குறிப்பு நிறைவு பெறுகிறது.