இந்திய கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் 2025 ஜூபிலி பயணம் மேற்கொண்டிருந்த கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இந்து தேசியவாத அமைப்பான பஜ்ரங் தள உறுப்பினர்கள், மாண்ட்லா திருச்சபையிலிருந்து வந்த திருப்பயணிகளை தடுத்து நிறுத்தி, ஓம்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேறு ஒரு தேவாலயத்தில் சென்று அங்கு தொந்தரவு செய்தனர். பின்னர் அவர்கள் ராஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு ஜபல்பூரின் விகார் ஜெனரல் அருட்தந்தை டேவிஸும், மறைமாவட்ட வழக்கறிஞரான அருட்தந்தை ஜார்ஜ் டி.யும் உதவி செய்ய வந்தபோது அவர்களையும் இந்துத்துவ அமைப்பினர் தாக்கினர்.
வன்முறை இருந்தபோதிலும், அருட்தந்தையர்கள் அமைதியாக இருந்தனர்.போலீசார் தலையிட்டு, அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர்.மாலை 5 மணிக்குள் அவர்களை மாண்ட்லாவுக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தாக்குதலால் கத்தோலிக்க சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவாலயத் அருட்தந்தையர்கள் நீதி கோரி அதிகாரிகளிடம் புகாரை சமர்ப்பித்துள்ளனர்.
ஏப்ரல் 1 ஆம் தேதி, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு (CBCI) இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தது, இது மத சுதந்திரம் மற்றும் மனித கண்ணியத்தை மீறுவதாகக் கூறியது. அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்தி, நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களித்த கிறிஸ்தவ சமூகம், தீவிரவாத மற்றும் தேச விரோத சக்திகளால் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டு, துன்பப்படுவதும், வழிபடும் அடிப்படை உரிமையை மறுக்கப்படுவது "ஆழ்ந்த வருத்தத்தை" அளிக்கிறது என்று சிபிசிஐ கவலை தெரிவித்துள்ளது.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மத சிறுபான்மையினரைப் பாதுகாக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்தியப் பிரதேச அரசு அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தினர். மேலும் போபாலில் இருந்து 310 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஜபல்பூர், மத்தியப் பிரதேசத்தின் நீதித்துறை தலைநகராக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Daily Program
