இந்திய ஆயர் பேரவையின் தலைவர் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு பணி || வேரித்தாஸ் செய்திகள்
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் (CBCI) தலைவர், பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் , ஜூலை 23-24 தேதிகளில் வடகிழக்கு இந்தியாவில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு தனது குழுவினருடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத், மணிப்பூரின் உயர்மறைமாவட்ட இம்பாலின் பேராயர் டொமினிக் லுமோன், சிபிசிஐயின் துணைப் பொதுச்செயலாளர் அருள்தந்தை ஜெர்விஸ் டிசோசா மற்றும் கரித்தாஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அருள்தந்தை பால் மூஞ்செலி ஆகியோர் குழுவில் இருந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள கக்சிங், சுக்னு பகுதி, புகாவ், காஞ்சிப்பூர் மற்றும் சங்கைப்ரூ ஆகிய பகுதிகளுக்குச் சென்ற குழுவினர், வழியில் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் மீண்டும் கட்டி எழுப்ப முடியாத அளவிற்கு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.
காக்ச்சிங் என்னும் இடத்தில உள்ள உள்விளையாட்டு மைதானத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்கி இருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்தனர். 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த புகோவ்,மற்றும் சுக்னுவில் வசித்து வந்த மக்களின் வீடுகள் மற்றும் அவர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்துள்ளனர்.
காஞ்சிப்பூரில் உள்ள கத்தோலிக்க பள்ளி வளாகத்தில் உள்ள புனித மீட்பர் ஆலயம் , மறைமாவட்ட பயிற்சி மையம், சங்கைபுராவில் உள்ள புனித பால் தேவாலயம் ஆகியவை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.
இவற்றைக் கண்ட பேராயர் மனம் நொந்து இந்த இடங்களில் வாழ்ந்து வந்த மக்களின் மனநிலையில் இருந்து பார்க்கும்போது மக்களிடையே ஒரு வித நம்பிக்கையற்ற சூழலும் அவர்களின் உயிர் பயம் நம் இதயங்களை நொறுங்க செய்துள்ளது.மனிதம் இல்லாத இந்த மிருகங்களின் செயல் கண்டு தப்பிப்பிழைத்த உயிர்கள் மீண்டும் இங்கு வந்து குடியேறுவார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் உயிருக்கு பயந்து சென்ற மக்களின் நிலைமை என்ன ஆனது என்றும் குழந்தைகள், பெண்கள், வயதானவர்களின் நிலைமை பற்றி யோசிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பள்ளிகளில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் கண்களை பார்க்கும்போது அவர்களின் கண்களில் மரணத்தின் வலியை, அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமையின் உச்சத்தை உணர் முடிகிறது ஆனால் இதற்க்கு முடிவு இல்லையா எங்களுக்கு பாதுகாப்பான ஒரு எதிர்காலம் உண்டா என்ற கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பது தன வேதனையின் உச்சம்.
இந்திய கரித்தாஸ் மற்றும் இம்பால் மறைமாவட்ட சமூக சேவை இந்திய ஆயர் பேரவையுடன் இணைந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் கத்தோலிக்க நிவாரண சேவைகள் (CRS) மற்றும் மறைமாவட்ட சமூக சேவைகள் சங்கம் (DSSS) இணைந்து நிவாரண முகாம்களுக்கு ஆதரவளித்து வருகிறது.
ஜூலை 24 நிலவரப்படி, கரித்தாஸ் இந்தியா இந்திய ரூபாய் 3 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளது.
மேலும் இதற்கிடையில் இந்திய திருஅவை இந்தியா முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஜெபம் மற்றும் , அமைதி பேரணிகளை ஏற்பாடு செய்தல்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வளங்களை திரட்டுதல் ஆகியவற்றின் மூலம் தீவிரமாக செயலாற்றி வருகிறது.
மணிப்பூர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் உதவிகள் வழங்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட சமூகங்களின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பிற்கு தொடர்ந்து உதவி செய்வதில் கரித்தாஸ் இந்தியா உறுதியுடன் மனிதாபிமான இதயத்துடன் பணியாற்றி வருகிறது.
ஒற்றுமையின் வெளிப்பாடாக, நிவாரண முகாம்களில் பொருள், சுகாதாரம் மற்றும் உளவியல்-சமூக ஆதரவு உட்பட பல்வேறு வகையான உதவிகளை வழங்க பல்வேறு மத சபைகள் மற்றும் அருள்சகோதர்கள், அருள்சகோதரிகள் மற்றும் அருள்பணியாளர்கள் முன்வந்துள்ளனர்.
மணிப்பூரில் நடந்து வரும் மனித நேயமற்ற கொடூரர்களின் இத்தைகைய செயல்களை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் இந்த அளவு பிரச்சனைகள் நடந்தும் அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதும் இந்திய அரசியல் அமைப்பின் மீதும் அவ நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு தலையிட்டு நமது நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை நிலைநிறுத்துவதுடன் அரசியலமைப்பு விழுமியங்களை வலுப்படுத்தி அமைதியான வாழ்வு சூழலை வளர்க்க வேண்டும் என்பது எங்கள் தீவிர வேண்டுகோள் என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் தெரிவித்துள்ளார்.
_ அருள்பணி வி.ஜான்சன் SdC
(Source from RVA English News)