28 ஆண்டுகளுக்கு முன்பு கேரள இரயில் நிலையத்தில் தனியாகக் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் இன்று கத்தோலிக்க அருள்பணியாளர் | Veritas Tamil

தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள இரயில் நிலையம் ஒன்றில், 28 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினர் யாருமின்றி தனியாகக் கண்டெடுக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன், தற்போது கத்தோலிக்க அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார். சிறுவயதில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த அவரது வாழ்க்கைப் பயணம், இன்று பிறருக்குச் சேவை செய்யும் அருள்பணிக்கு வழிவகுத்துள்ளது.

வடஇந்தியாவில் உள்ள ஜான்சி மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக தற்போது பணியாற்றும் அருள்பணி விவேக் மார்ட்டின், சிறுவனாக இருந்தபோது கேரளாவின் ஷோரனூர் இரயில் நிலையத்தில் குடும்பத்தினர் யாருமின்றி தனியாகக் காணப்பட்டார். அவருக்கு உதவ முன்வந்தவர்களிடம் அவர் கேட்ட ஒரே வேண்டுகோள்: அண்ணா, நான் படிக்க வேண்டும்” என்பதாகும்.

அப்போது இயேசு இளையோர் இயக்கத்தைச் சேர்ந்த ரெக்ஸி டி’குரூஸ் அவரைச் சந்தித்தது, விவேக்கின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சட்டப்பூர்வ அனுமதியுடன், ரெக்ஸியும் அவரது நண்பர்களான பேட்ரிக், ஜோஸ், ராஜேஷ் மற்றும் டோனியும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த குழந்தைகளுக்குத் தங்கள் இல்லங்களைத் திறந்தனர். அவர்களுக்கு கல்வி, பாதுகாப்பு மற்றும் குடும்பத்தைப் போன்ற அன்பான சூழலை வழங்கினர்.

விவேக், பேட்ரிக் மற்றும் அவரது மனைவி மனுவுடன் பல ஆண்டுகள் வளர்ந்தார். பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கிய அவர், பின்னர் பத்தாம் வகுப்பில் பள்ளித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்தாம் வகுப்பை முடித்த பின்னர், தான் அருள்பணியாளராக விரும்புவதாக விவேக் தெரிவித்தார். ஆரம்பத்தில் சிறிது காலம் காத்திருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டாலும், மேல்நிலைப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பின்னர் ஜான்சி மறைமாவட்டத்தின் குருத்துவக் கல்லூரியில் இணைந்தார்.

கேரளாவின் அட்டப்பாடி மலைப்பகுதியில் தொடங்கிய அவரது வாழ்க்கைப் பயணம், கொச்சி வழியாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஜான்சியைச் சென்றடைந்தது. இது 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவைக் கொண்ட பயணமாகும்.

குருத்துவப் பயிற்சியில் இணைவதற்கு முன்பு, கேரளாவின் ஆலுவாவில் உள்ளசிநேக தீரம்’ என்ற அமைப்பில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும் பராமரிப்புப் பணியாளராகவும் விவேக் பணியாற்றினார். கமிலியன் அருள்பணியாளர்களின் வழிகாட்டுதலில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வந்த இந்த அமைப்பில் அவர் ஆற்றிய பணி, துன்பம், இரக்கம் மற்றும் பிறருக்குச் சேவை செய்வது குறித்த அவரது புரிதலை மேலும் ஆழப்படுத்தியது.

ஜான்சி மறைமாவட்ட ஆயர் வில்ஃப்ரெட் மோராஸ் அவர்கள் ஆகஸ்ட் 16 அன்று விவேக் மார்ட்டினை அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தினார். ஆகஸ்ட் 24 அன்று, வெரப்போலி உயர்மறைமாவட்டத்தின் துண்டத்தின்கடவு பகுதியில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயத்தில் அவர் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார்.

பாதுகாப்பற்ற நிலையில் இருந்த குழந்தைகளுக்கு கல்வி, அக்கறை மற்றும் நிலையான குடும்பச் சூழல் வழங்கப்பட்டால், அவர்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கும் விவேக்கின் அருள்பணி அழைப்பு ஒரு சான்றாகக் கருதப்படுகிறது. ரெக்ஸியின் பராமரிப்பில் வளர்ந்தவர்களில் இருவர் அருள்பணியாளர்களாகியுள்ளனர்; மேலும் இருவர் தற்போது குருத்துவப் பயிற்சியில் உள்ளனர்.

கந்தமால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பிப்ரசரண் நாயக் கூறுகையில், அருள்பணி விவேக்கின் வாழ்க்கைப் பயணம், இரக்கமும் கல்வியும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது என்றார்.

எந்தக் குழந்தையும் தனது வாழ்க்கையின் தொடக்கச் சூழ்நிலையால் ஒருபோதும் வரையறுக்கப்படக் கூடாது. இரக்கம் ஒரு குழந்தைக்கு மாண்பை வழங்கும்போது, கல்வி அவருக்கு வாய்ப்பைத் தருகிறது; நம்பிக்கை அவரது வாழ்க்கைக்கு நோக்கத்தை அளிக்கிறது. இவ்வாறு, கைவிடப்பட்ட நிலையில் தொடங்கிய ஒரு வாழ்க்கையும் பிறருக்குச் சேவை செய்யும் வாழ்க்கையாக மாற முடியும்” என்று அவர் கூறினார்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த புனித அன்னாள் புதல்வியர் சபையின் அருள்சகோதரி கொரற்றி நாயக் கூறுகையில், அருள்பணி விவேக்கின் கதை ஒவ்வொரு குழந்தைக்கும் மாண்பும் இறைவனால் அளிக்கப்பட்ட ஓர் அழைப்பும் உண்டு என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றார்.

ஒரு காலத்தில் இரயில் நிலைய நடைமேடையில் தனியாக நின்றுகொண்டிருந்த சிறுவனை, அவனுடைய சிரமங்களைக் காண்பதற்கு முன்பாகவே அவனுடைய மாண்பைக் கண்ட மனிதர்கள் அன்புடன் அரவணைத்தனர். இன்று அவர் பலிபீடத்தின் முன் நிற்கிறார். அவர் இழந்தவற்றின் அடையாளமாக அல்ல; மாறாக, அன்பு, கல்வி, இரக்கம் மற்றும் நம்பிக்கை ஆகியவை ஒரு வாழ்க்கையை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு சாட்சியாக நிற்கிறார்” என்று அருள்சகோதரி கொரற்றி அவர்கள்  கூறினார்.

இரயில் நிலைய நடைமேடையிலிருந்து பலிபீடம் வரையிலான தனது வாழ்க்கைப் பயணம், தனிமையாலும் துன்பத்தாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் உடனிருந்து அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்ற அழைப்பாக மாறியுள்ளதாக அருள்பணி விவேக் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற நிலையில் இருந்த ஒரு குழந்தைக்கு காட்டப்படும் ஓர் இரக்கச் செயல், அந்தக் குழந்தையின் வாழ்க்கையையே மாற்றி அமைக்க முடியும்; காலப்போக்கில், அதன் வழியாக இறைவனின் அருள்பணி அழைப்பையும் வெளிப்படுத்த முடியும் என்பதை அருள்பணி விவேக்கின் வாழ்க்கைக் கதை எடுத்துக்காட்டுகிறது.

Tamil Survey Popup Image