70 வயதில் கடல் நீந்தி மனிதநேயம் காக்கும் முதியவர் | Veritas tamil

தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கு வயது ஒரு தடையல்ல என்பதை 70 வயதான ஜிம்மி சுக்ரிஸ்னோ நிரூபித்து வருகிறார். இந்தோனேசியாவின் ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள மதுரா நீரிணையை நவம்பர் 1ஆம் நாள் நீந்திக் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். கடல் நீர் உட்புகுதல் மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மீனவப் பெண்களுக்கு உதவுவதே அவரது இம்முயற்சியின் நோக்கமாகும்.

ஜகார்த்தாவில் உள்ள இயேசு சபையினரின் கேனிசியஸ் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், ‘Xtreme Impact 2026’ என்ற மனிதநேய நீச்சல் சவாலில் பங்கேற்கும் 19 நீச்சல் வீரர்களில் ஒருவராவார். இம்முயற்சி, அக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2027ஆம் ஆண்டை நோக்கி முன்னெடுக்கப்படும் ‘நூற்றாண்டுக்கு 100 செயல்கள்’ என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இம்முயற்சியின் மூலம் 100 கோடி இந்தோனேசிய ரூபியா நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஜிம்மி சுக்ரிஸ்னோ ‘ஒவ்வொரு நீச்சல் அசைவும் ஒரு நம்பிக்கை’ என்ற பெயரில் தனியாக 1.5 கோடி ரூபியா நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

இந்த நிதி, மத்திய ஜாவாவின் டெமாக் மாவட்டத்தில் உள்ள திம்புல்ஸ்லோகோ கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த ‘புஸ்பிதா பஹாரி’ மீனவப் பெண்கள் சங்கத்திற்கு வழங்கப்படும். கடற்கரை அரிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக இக்கிராமத்தில் வீடுகளும் சாலைகளும் கடல் நீரில் மூழ்கியுள்ளன. கடல் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தி விற்பனை செய்வதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் பெண்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

திரட்டப்படும் நிதியைக் கொண்டு மிதக்கும் சாலைகள், தூய குடிநீர் வசதிகள் மற்றும் கடல் உணவுப் பொருள்களைப் பதப்படுத்துவதற்கான ‘ஓமா இவாக்’ மையம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம், வெள்ளப் பாதிப்புகளுக்கு இடையிலும் பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தைத் தொடர முடியும்.

“எங்களைப் பொறுத்தவரை கடல் ஒரு தாய் போன்றது” என்று அச்சங்கத்தின் தலைவி மஸ்னுஆ (Masnu'ah) தெரிவித்துள்ளார். மேலும், “மதுரா நீரிணையைக் கடந்து நீந்துவது ஒரு வழிமுறை மட்டுமே. நிலத்தை இழந்த நம் சகோதரர், சகோதரிகளுக்கு நம்பிக்கையின் பாலத்தை உருவாக்குவதே உண்மையான நோக்கம்” என்று இம்முயற்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆர்டோ பியான்டோரோ கூறியுள்ளார்.

இந்தோனேசியக் கடற்படை மற்றும் மருத்துவக் குழுக்களின் ஆதரவுடன் நடைபெறும் இம்முயற்சியின் ஒரு பகுதியாக, சுரபயா நகரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 150 பேருக்கு இலவச கண்புரை அறுவைச் சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளன.

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ, தனிப்பட்ட ஆர்வத்தையும் திறமையையும் சமூகப் பணியாக மாற்ற முடியும் என்பதை 70 வயதான ஜிம்மி சுக்ரிஸ்னோவின் இம்முயற்சி எடுத்துக்காட்டுகிறது.

Tamil Survey Popup Image