அமைதியின் தூதுவராக திகழ்ந்த அருளாளர் Giovanni Merlini
அருளாளர் Giovanni Merlini அவர்கள், மக்களுக்கான மறைப்பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர் என்றும், பல மக்களின் ஆன்மாக்களுக்கு விவேகத்துடன் ஆலோசனைகள் பல வழங்கி அமைதியின் தூதுவராக திகழ்ந்தார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் இன்று அருளாளராக உயர்த்தப்பட்ட அருள்தந்தை Giovanni Merlini அவர்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் மறைப்பணியாளர்கள் சபை அருள்தந்தையான அவர், மக்களுக்கான மறைப்பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர் என்றும், பல மக்களின் ஆன்மாக்களுக்கு விவேகத்துடன் ஆலோசனைகள் பல வழங்கி அமைதியின் தூதுவராக திகழ்ந்தார் என்றும் கூறினார்.
புதிய அருளாளரின் பரிந்துரையை நாடி அமைதிக்காக செபிப்போம் துன்புறும் உக்ரைன், மத்திய தரைக்கடல் பகுதி மக்கள், மற்றும் போரினால் துன்புறும் உலக மக்கள் அனைவருக்காகவும் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.போர் எப்போதும் தோல்விதான் என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம் என்று அடிக்கடி வலியுறுத்தி வரும் திருத்தந்தை அவர்கள், உலக அமைதிக்காக சிறப்பாக செபிப்போம் என்றும் கூறி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.
மேலும் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரோடும் தனது ஆன்மிக உடன் இருப்பை வெளிப்படுத்துவதாகவும், துன்புறும் அம்மக்கள் அனைவருக்காகவும் செபிப்பதாகவும் கூறினார்.
சுவிஸ் காவலர் ஊழியர்களின் குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளம் வழங்கியதை திருப்பயணிகளிடம் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை அவர்கள், அக்குழந்தைகளுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்போம் என்றும், இளம்தம்பதியினர் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளம் என்னும் கொடையினை வழங்க இறைவனிடம் செபிப்போம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.