கரை சேர்த்த தாய் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
தன் தந்தை இறந்ததும், நாட்டை ஆளும் பொறுப்பேற்ற இளவரசர் தான்தோன்றித்தனமாக நடக்கத் துவங்கினார். அவரின் தாய் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் திருந்தவில்லை. மகனின் தவற்றை உணர்த்த விரும்பிய மகாராணி, அரபு நாட்டிலிருந்து தாய், மகள் என மிக அழகான இரு பெண் குதிரைகளை வரவழைத்தார். அடுத்த நாள் இளவரசரை அழைத்த மகாராணி, "இதில் எது தாய், எது மகள் என்று நீ கூறினால், இக்குதிரைகளை நீ எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.
குதிரைகளைப் பார்த்த இளவரசர் அதிசயித்துப் போனார். ஏனெனில், அவ்வளவு அழகாக ஒரே தோற்றம் கொண்டிருந்தன அக்குதிரைகள். இளவரசர் எவ்வளவோ முயன்றும் அவரால், தாய் எது? மகள் எது? எனக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அடுத்த நாளும் முயற்சி செய்த இளவரசர், தன் தோல்வியை ஒத்துக் கொண்டார். தாய் அவரை நோக்கி, நம் ஊர் ஆற்றுப் பக்கம் வா. யார் தாய்? யார் மகள்? என்று நான் காட்டுகிறேன் எனக்கூறி மகனை ஆற்றுப்பக்கம் அழைத்துச் சென்றார். மகன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவ்விரு குதிரைகளையும் ஆற்று நீரில் தள்ளினார் தாய். தண்ணீரில் விழுந்த குதிரைகள் நீச்சலடிக்கத் தொடங்கின. நெடுநேரம் அவை நீச்சலடித்தன. அப்போது ஒரு குதிரையின் கால்கள் தள்ளாடின, அதனால் தொடர்ந்து நீச்சலடிக்க முடியவில்லை. அதைக் கவனித்த மற்ற குதிரை, தான் நீந்துவதை விட்டுவிட்டு, தத்தளித்தக் குதிரைக்கு உதவி செய்வது போல் அதைக் கரை நோக்கித் தள்ளியது.
அதைக் கண்ட தாய், "மகனே, தத்தளிப்பது குட்டி, உதவுவது தாய். உன் நலனில் அக்கறை கொண்டுதான், இந்தத் தள்ளாத வயதிலும் உன் வழிகளைச் சீராக்க பல வழிகளில் முயல்கிறேன். உன் தந்தை கட்டிக்காத்த அரசைக் கைவிட்டு, குடிமக்களைத் தத்தளிக்க விட்டுவிடாதே" என்று கூறினார். அதைக் கேட்ட இளவரசருக்கு, உண்மை உறைக்க ஆரம்பித்தது.
தாய்மையை விட வாழ்க்கையில் மிக முக்கியமான
எந்த உறவும் இல்லை.