பற்றை விடுத்து பரமனை நாடுவோம் | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நம் அனைவருக்கும் பலவிதமான ஆசை இருக்கிறது. எந்த ஒரு ஆசையும் அதனோடு நின்றுவிடுவதில்லை. ஆசை பேராசையாக மாறுகிறது. அப்படி மாறும்போது துன்பம் நம்மை துரத்துகிறது. எதற்கும் ஆசைப்படக்கூடாது என்று யாரும் நினைப்பதில்லை. மாறாக நமது ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். ஆசைகளை விட்டுத்தள்ள ஆசையற்றவனை அதாவது எந்த ஆசாபாசமும் இல்லாத இறைவனைப் பற்றிக்கொண்டு இறைச்சாயலின் பிம்பங்களாய் மிளிரவேண்டிய நாம், பொருட்கள் மீதும் பதவிகள் மீதும், பணத்தின் மீதும், இடத்தின் மீதும், இருக்கையின் மீதும், அனைத்தையும் கடந்து அலைபேசியின் மீதும் அளவுகடந்த பற்றுக்கொண்டு படைத்தவனை மறந்து படைப்புப் பொருட்களமீது அலாதிப் பற்றுக்கொண்டு வெளியே சொன்னால் வெட்கம் என்று எண்ணி அமைதியாக அல்லல்படுகிறோம். எத்தனையோ புனிதர்கள் பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் புனித பிரான்சிஸ் அசிசி பணக்கார மோகத்தை வெறுத்து, பகட்டை தூக்கி எரிந்து, அனைத்திலும் ஆண்டவர் ஒருவரையே பற்றிக்கொண்டு அவர் பாதத்தில் சரணடைந்தவர். அவரைப் பின்பற்ற நாம் தயாரா? சற்று யோசிப்போம்.
தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்வதே பற்றற்றநிலை, இதையே புத்தர் நான் என்னும் எண்ணம் விடுத்து நாம் என்னும் எண்ணத்தில் வாழ்வதே உண்மையான பற்று என்கிறார். ஏராளமான பொன்னிருந்தும், பொருளிருந்தும் எல்லாம் இழந்து, இறைவனின் படைப்புகள் மீது தணியாத தாகம் கொண்டு, அதனை தன் காதலியாக பாவித்துக் கொண்டு, இறைவனை முகமுகமாய் தரிசித்தவர் புனித பிரான்சிஸ். அவரைப்போல நாமும் இயற்கையை நேசித்து வாழ்ந்தால் இறையாற்றல் நம்மில் வலுவானதாக இருக்கும்.
ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை என்னும் பாடல் வரிகள் ஆசைகள் நம்மை அலைக்கழித்துக் கொண்டிருந்தாலும் இறுதியில் நமது வாழ்க்கை ஆடி அடங்குகிறது என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது. இன்று நமது மன அமைதியை குலைப்பது நமது பற்றுதல்தான் என்பதை அறிந்திருந்தும் பற்றுகளை துறப்பதற்கு மனம் இல்லை. நாம் எதில் பற்று கொள்ள வேண்டும்? பற்றற்ற பரமனின் பாசத்தில் பற்றுக் கொள்வோம். அடுத்தவர் நலனில் பற்று கொள்வோம். பணிவிடை செய்வதில் பற்று கொள்வோம். இறைவார்த்தைகளை வாழ்வாக்குவதில் பற்று கொள்வோம். செல்வத்தை துறந்து ஏழ்மையில் பற்றுகொள்வோம். அந்த பற்றே நம்மை பற்றற்ற இறைவனிடம் அழைத்துச் செல்லும்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி FBS
Daily Program
