“பசுமைப் பயணம்” - தமிழ்நாடு அய்க்கஃப் மற்றும் தமிழக துறவியர் பேரவை | Veritas Tamil

“பசுமைப் பயணம்” 
இயற்கையை காப்போம், வாழ்வுரிமையை மீட்போம் 
(மிதிவண்டி விழிப்புணர்வு பயணம்) 

                         5 – 20 நவம்பர் 2025 
அழிந்துவரும் இயற்கை அன்னையை காக்க, மக்களுக்கு விழிப்புணர்வூட்ட, 
இளையோர்களின் எழுச்சிப் பயணம்… 
மக்கள் இயக்கங்களின் வரலாற்றில் மகுடமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை… 


தோழர்களே! அன்றாடம் கதறி கண்ணீர் விடும் நம் உதரத்தின் கதறல் கேட்கிறதா? இயற்கை அன்னையின் அழுக்குரல் சுயநல உலகில் கேட்காமல் போனதால் இன்று பாலைவனத்தில் வெள்ளம், டிசம்பர் மாதம் என்றாலே மனதில் ஒருவிதமாக பேரச்சம், வெப்பமயமாதலால் பேராபத்துக்கள், அளவுக்கு அதிகமான இயற்கை வளங்களின் சுரண்டலால் 
சூழலியலில் மாற்றங்கள், மழைக்காலத்தில் கடுமையான வெயிலும், வெயில் காலத்தில் அளவுக்கு அதிகமான மழையும் என ஒட்டுமொத்த சூழலியலே மாறிவிட்டது அல்லது மாற்றிவிட்டோம் என்றே சொல்ல வேண்டும். இத்தகையை இயற்கைக்கு எதிரான அவலங்களுக்கு மத்தியில் ஏதாவது ஒரு 
மாற்றம் ஏற்படாதா என்ற ஏக்கம் அனைவரிடமும் சிந்தனை அளவில் உள்ளதை மறுக்க முடியாது. 


ஆனால் யார்? எப்படி? இந்த எண்ணங்களை செயலாக்கம் பெறச் செய்வார்கள். அதற்குத்தான் நம் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், ஆப்பிரிக்க நாட்டின் அன்னை வங்காரி மாதா, இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் தோழர் கிரேட்டா துன்பர்க் போன்றவர்கள் வாழ்ந்து வழிக் காட்டுகின்றனர். 
குறிப்பாக மேனாள் திருத்தந்தை பிரான்சிசு அவர்களின் இறைவா! உமக்கே புகழ்! என்ற திருத்தூது மடலின் 10 ஆம் ஆண்டு நிறைவை செயலாக்கம் பெறச் செய்திட அரிய முயற்சியாக இந்தப் பசுமைப் பயணம் உள்ளது.  


நான், நீ, சமயம், சாதி, உயர்ந்தவன் மற்றும் தாழ்த்தப்பட்டவன் என்ற அனைத்துவிதமான எல்லைகளையும் கடந்து சுவாசிக்கும் அனைவருக்கும், தண்ணீர் பருகும் அனைவரும் இதற்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து நம் தனிம வாழ்வில் முதலில் மாற்றங்களைக் கொண்டுவருவோம், தொடர்ந்து நம் குடும்பங்களிலும், ஊரிலும், சமூகத்திலும் என சிறு துளிகளாகத் தொடங்குவோம். தலைமுறைத் தழைத்தோங்க தடங்களை தயாராக்குவோம், மாற்றம் நாம் ஆகுவோம். 


சில சிந்தனைத் தீப்பொறிகள்… 
• அன்றாட என் தனிமனித வாழ்வில் சுயநலமின்றி இயற்கை வளங்களைப் பாதுகாப்பேன்! என் வாழ்வால் என் தலைமுறைக்கு கற்றுக் தருவேன்! 
• இந்திய அரசியல் சாசனம் கற்றுத்தரும் இயற்கையைப் பாதுகாக்கும் உரிமைகளைப் பாதுகாப்பேன்! அதன்படி வாழ்வேன்!  
• செயற்கையானப் பொருட்கள், நுகர்வுப் பண்பாடு மற்றும் சொகுசு வாழ்வு என்று அல்லாமல், சுகாதாரமான நலவாழ்வு வாழ இயற்கை அன்னை அளிக்கும் சக்திமிகு இயற்கையாக வளரும் பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை உண்டு நலமோடும், வளமோடும் 
வாழ்வேன்! 
• நம் ஒவ்வொருவரின் வாழ்நாளில் குறைந்தது 20 நம் மண்ணிற்கு ஏற்ற மரங்களை நட்டு வளர்போம்! 
• ‘நீரின்றி அமையாது இவ்வுலகு’ என்ற வள்ளுவரின் கூற்றை நினைவில் கொண்டு நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யாமலும், செய்யஅனுமதிக்காமலும், நீரைச் சேமித்து, பாதுகாத்து அனைத்துவிதமான உயிர்களும் வாழ்வதற்கு ஏற்ற நல்லிடமாக மாற்றுவோம்! 
இயற்கை அன்னையின் அழுக்குரல், ஏழைகளின் அழுக்குரல் என்கிறார் மேனாள் திருத்தந்தை பிரான்ஸ்சி... ஆக ஏழைகளின் அழுக்குரலுக்கும், இயற்கை அன்னையின் அழுக்குரலுக்கும் பதிலிறுப்பு செய்ய இணைவோம்! பசுமைப்பயண இயக்கமாகுவோம்! 


ஒருங்கிணைப்பு: தமிழ்நாடு அய்க்கஃப், தமிழக துறவியர் பேரவை மற்றும் சூழலியல் இயக்கங்கள் 
தொடர்புக்கு: 87540 57332 , 81228 10359