இந்தியாவில் உயரும் வெப்ப அலைகளின் எண்ணிக்கை ; IMD கணிப்பு.

இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் நடப்பு கோடையில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கை இயல்பைவிட அதிகமிருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் ஒன்றை வெளியீட்டுள்ளது.

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் இந்தியாவில் கோடைகாலமாகும். நடப்பாண்டில் மார்ச் மாதத் தொடக்கத்திலேயே ராஜஸ்தான், குஜராத், தெலங்கானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் தீவிரமடைந்துவிட்டது. இந்நிலையில் ஏப்ரல் – ஜூன் வரைலான கோடைகாலத்திற்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை 31.03.2025 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.இவ்வறிவிப்பின்படி, ஏப்ரல் – ஜூன் வரையிலான காலத்தில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஏப்ரல் – ஜூன் காலத்தில் வட இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள் மற்றும் கிழக்கு தீபகற்ப பகுதிகள், மத்திய மற்றும் கிழக்கு இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் வெப்ப அலையின் தாக்கம் நிலவும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிஷா, சட்டீஷ்கர், தெலங்கானா, ஆந்திரபிரதேசம் மற்றும் வடக்கு கர்நாடகா & தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கை இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் – ஜூன் காலத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது கேரளா, தெற்கு மற்றும் கடலோர கர்நாடகா பகுதிகளை உள்ளடக்கிய மேற்கு தீபகற்பப் பகுதிகள், கிழக்கு-மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் ஓரிரு இடங்களைத் தவிர்த்து நாடு முழுவதும் இயல்பைவிட அதிகமாகவே நிலவும் எனவும் கூறியுள்ளனர்.

ஏப்ரல் மாதத்தைப் பொருத்தவரையில் குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கிழக்கு உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிஷா, சட்டீஷ்கர், தெலங்கானா, ஆந்திரபிரதேசம் மற்றும் வடக்கு கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் மத்திய மற்றும் வட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்ப பகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் கோடை மழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.