வேளாண்மை ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 18.07.2024

மெத்தப் படித்த மேதாவி 
வேளாண் அதிகாரி சொல்வார் 
ஒற்றைப் பயிர் 
பணப் பயிர் செய்தால்  
பத்து தலைமுறைக்கு  
சொத்து சேர்க்கலாம் என !

புத்தி கெட்டு , 
பத்து பயிரை 
பாடில்லாம வளர்க்கும் பூமியில் 
ஒத்த பயிரோட உரம் என 
உப்பையும் கொட்டும் போது  
பச்சை கட்டி வளரும் பயிர்.
பார்த்து பார்த்து பரவசம்.

அடுத்து  
கொத்து கொத்தா 
வந்து குவியும் பூச்சி.
புட்டி புட்டியா மருந்து,
மாய்ஞ்சு மாய்ஞ்சு
தெளிச்சே ஆகணும் .
விளைஞ்சது நல்லா,
விலையில்லை ஆனால் !
கணக்கு பார்த்தா,
கால் பங்கு நட்டம்!! 
விட்டதை பிடிக்கணும் 
என வைராக்கியம்
மீண்டும் மீண்டும் 
அதே வெள்ளாமை
அருமையாக வெளைஞ்சது மீண்டும், 
ஆனால் விலையில்லை.

வருடங்கள் ஓடும் இப்படியே. 
வைராக்கியம் வளரும். 
உரக்கடைக்காரர் உறவு  வளரும்.
மற்ற கடைகளில் வங்கிகளில் கடன்  வளரும்.

சில காலம் சென்ற பின்   
மொத்த சொத்தும் மூழ்கும் நிலையயும் வரும்.
கூலி வேலை செய்ய கவுரவம் விடாது.
பிச்சை எடுத்து பிழைக்க மனம் வராது 
பிறந்த மண்ணுக்கே  உரமாகிப் போகும்
பாக்கியம் கூட கிடைக்குமா தெரியாது.  

-சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி