இயேசுவில் கண்கள் பதியட்டும், பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 4ஆம் வாரம் -செவ்வாய் 

எபிரேயர் 12: 1-4
மாற்கு   5: 21-43


இயேசுவில் கண்கள் பதியட்டும், பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோம்!

முதல் வாசகம்.


 எபிரேயருக்கு எழுதப்பட்ட  இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், யூத கிறிஸ்தவர்களை துன்புறுத்தலின் போதும் நம்பிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்துகிறார். அவர் மனவுறுதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றார். 
புதிய யூத கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும்  துன்புறுத்தல்களை கண்டு அஞ்சாமலும் துவண்டுவிடாமலும் நம்பிக்கை வாழ்வின் இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைவூட்டுகிறார்.
கிறிஸ்த வாழ்க்கையானது ஒரு போராட்ட வாழ்க்கை என்றும், எதிர்கொள்ளும் பிரச்சினைகள், துன்பங்கள், தோல்விகள் அனைத்தையும் சுமந்துகொண்டு பயணிக்க வேண்டும் என்கிறார் .
நிறைவாக, கிறிஸ்தவ வாழ்வின் வெற்றிக்கு மனவுறுதி என்பது இன்றியமையாது என்று வலியுறுத்துகிறார்.  

நற்செய்தி.
நற்செய்தி சற்று நீண்ட வாசகமாக உள்ளது.   இதில்  இரண்டு நபர்களை நாம் சந்திக்கிறோம்.  முதலாவதாக  யாயிர் எனும் தொழுகைக்கூடத் தலைவர். அடுத்து, இரத்தப்போக்குடைய பெண்.  இங்கு, இயேசு இரக்கம் நிறைந்த தமது  அன்பின் பணியைத் தொடர்கிறார். 
முதல் நபரான யாயிர் எனும் தொழுகைக்கூடத் தலைவர் இயேசுவைக் கண்டு அவரது காலில் விழுகிறார்.  பின்னர், “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்'' என்று அவரை வருந்தி வேண்டினார் என்று மாற்கு குறிப்பிடுகிறார். இதே நிகழ்வை யோவானைத் தவிர்த்து மத்தேயு  (9:18-26), லூக்கா (8:40-56) ஆகிய இருவரும் குறிப்பிட்டுள்ளார்கள்.
யாயிரின் வேண்டுகளை ஏற்று இயேசு பயணிக்கும் போது, பல மருத்துவர்களை நாடி  உள்ளதெல்லாம்  செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்புற்ற, பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர்   இயேசுவை அணுகுகிறார்.  இவர் ‘இயேசுவின் மேலுடையைத் தொட்டால் குணமடைவேன்’ என்ற நம்பிக்கை அவளுக்குள் தோன்றவே    அவள் அவ்வாறு செய்யும்போது, அவள் உடனடியாக குணமடைந்தாள்.   
அத்தருணத்தில்,   இயேசுவிடமிருந்து  சக்தி வெளியேறியதை இயேசு அறிந்து,   அவரைத் தொட்டது யார் என்று அவர் கேட்கையில்,  அந்தப் பெண் தொட்டது அவள்தான் என்று  ஒப்புக்கொண்டபோது, இயேசு அவளுடைய நம்பிக்கையைப் பாராட்டியதோடு,  அவரிடம்,  “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு'' என்றார்.
தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து, 'உம்முடைய மகள் இறந்துவிட்டாள்’ என்ற மற்றொரு துக்கச் செய்தி வந்தது. ஆகவே, போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?'   என்று யாயிரிடம்  கூறுகிறார்கள். ஆம், இனி இந்தப் இயேசுவை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்தனர். 
ஆனால், இயேசு பயணத்தைத் தொடர்ந்து யாயிர் வீட்டை அடைகிறார்.   “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்'' என்று கூறவே,  அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். இயேசு அந்தப் பெண்ணை அழைத்து அவளை எழுந்திருக்கும்படி கட்டளையிட அவளும் கண்விழித்து எழுந்தாள். உடனே, இயேசு சிறுமிக்கு உணவு  அளிக்க அங்கிருந்தவர்களை வலியுறுத்துகிறார்.

சிந்தனைக்கு. 

யாயிர். தொழுகைக்கூடத் தலைவர்களில் ஒருவர். சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர். அவர், பலர் முன்னிலையில் இயேசுவின் காலில் விழுகிறார். இயேசுவும் சீடர்களும் இறக்கும் நிலையில் இருக்கும் சிறுமியின் வீட்டை நெருங்கும்போது, சிறுமி இறந்துவிட்டாள் என்ற செய்தி வருகிறது.  நம்பிக்கையைத் தொடரும்படி இயேசு யாயிரை வலியுறுத்துகிறார்.  
இதுபோன்ற  மறைநூல் பகுதிகளை நாம்  வாசித்துச்  சிந்திக்கும்போது, கடவுளின் வல்ல செயல்களைக் கண்டு நாம் அடிக்கடி வியப்படைகிறோம்.   கடவுள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக, எல்லாவிதமான துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் மனவறுதியை நாம் பெற்றிட வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம்.
திருப்பாடல் 34:4-5, ‘துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்’ என்று வாசிக்கிறோம். யாயிரின் நம்பிக்கையும் 12 ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதியுற்ற பெண்மணியின் நம்பிக்கையும் ஆண்டவரில் மையமிட்டது. ஆண்டவர் அவர்களை மீட்டெடுத்தார்.

நம்பிக்கை என்பது கடவுளிடமிருந்து நமக்குக் கிடைத்த கொடை என்றாலும், அது நம்மில் வேரூன்ற வேண்டும்.  அது நமக்கும் கடவுளுக்குமான ஆழ்ந்த உறவின் வெளிப்பாடு.  ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பது வெறும் வார்த்தை மட்டும் கிடையாது அது நம்பிக்கையின் உச்சம். 
‘கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்’ ( பேதுரு 5:7)  என்ற இறைவார்த்தையைப் பற்றிக்கொண்டால் போது, நமக்கு மீட்பு உண்டு. இதைத் தட்டிப்பறிக்க யாராலும் முடியாது. 
முதல் வாசகத்தில், ‘உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்’ என்று அறிவுறுத்தப்பட்டோம். மேலும், ‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ (மத் 11:28) என்று இன்றும் ஆண்டவர் நம்மை அழைக்கின்றார். யாயிரை போல அவரில் சரணடைவோம். ‘நாளைபொழுதை இறைவனுக்கிளத்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு’ 
 

இறைவேண்டல்.


ஆண்டவரே,  உமது தூய ஆவியின் வல்லமையில் நான் எனது நம்பிக்கை வாழ்வை எச்சூழலிலும் தக்கவைக்க எனக்கு உமதருள் தாரும்.  ஆமென்.

  
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452