போலிபக்தி ஓர் ஏட்டுச் சுரக்காய்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

15 அக்டோபர் 2026
 
எபேசியர்  1: 1-10
லூக்கா 11: 11: 47-54
 
 
போலிபக்தி ஓர் ஏட்டுச் சுரக்காய்!


முதல் வாசகம்.


புனித பவுல் எபேசியர் மக்களுக்கு இறைமக்களுக்கு எழுதிய இந்தப் பகுதியில், கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பையும், நமக்காக அவர் கொண்டிருக்கும் மீட்புத் திட்டத்தையும் எடுத்துரைக்கிறார். முதலில் கடவுளின் ஆசீர்வாதம்குறித்துப் பேசுகையில்,  கடவுள் நம்மை கிறிஸ்துவின் வழியாக விண்ணக ஆசீர்வாதங்களால் நிறைவாக ஆசீர்வதித்துள்ளார்என்கிறார். தொடர்ந்து,   உலகம் தோன்றுவதற்கு முன்பே, நாம் அவருடைய பிள்ளைகளாக வாழ வேண்டும் என்று கடவுள் நம்மைத் தேர்ந்தெடுத்தார் என்கிறார்.

மேலும், கடவுளின் அருளால், இயேசு கிறிஸ்துவின் மூலம் நாம் கடவுளின் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம், இந்த அழைப்பானது, கடவுளின் அன்பினாலும் அருளினாலும் கிடைத்த கொடை என் விவரிக்கிறார். நிறைவாக,  இயேசுவின் இரத்தத்தின் மூலம் நமக்கு மீட்பும் பாவமன்னிப்பும் கிடைக்கின்றன என்பதை வலியுறுத்தி எபேசியருக்கு எழுதுகிறார்.  


நற்செய்தி.


இன்றைய நற்செய்திப் பகுதியிலும், கடந்த சிலை தினங்களைப்போல், இயேசு திருச்சட்ட அறிஞர்களைக் கடுமையாகக் கண்டிக்கிறார். தொடர்ந்து, “ஐயோ! உங்களுக்குக் கேடு! என விமனர்சிக்கிறார்.  அவர்கள் இறைவாக்கினர்களைக் கொன்ற முன்னோர்களின் செயல்களை நினைவுகூரும் வகையில் கல்லறைகளைக் கட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.  ஆனால், அவர்களுடைய முன்னோர்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தாங்களும் கடவுளின் வார்த்தையின்படி வாழத் தவறுகிறார்கள் என்பதை முன்வைத்து போதிக்கிறார்.


மேலும், அவர்கள் மக்களுக்குக் கடவுளின் உண்மையான வழியை அறிந்துகொள்ள உதவுவதற்குப் பதிலாக, அதை அறிந்துகொள்ளத் தடையாக இருக்கிறார்கள் என்று இயேசு சுட்டிக்காட்டுகிறார். இதனால், திருச்சட்ட அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுவின்மீது கோபமடைந்து, அவரிடம் கேள்விகள் கேட்டு அவரைப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள் என்று லூக்கா தெளிவுப்படுத்துகிறார்.


சிந்தனைக்கு.

 
மறைநூல் அறிஞர்கள் கடவுளுடைய சட்டத்தைத் திரித்துக் கூறி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட மரபுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியதன் மூலம், பாமர மக்கள் உண்மையைப் புரிந்துகொள்வதற்கான கதவை  அடைத்தார்கள்.  கடவுளுடைய வார்த்தையையும் மௌனமாக்கினார்கள்.  இத்தகையோருக்குக் கேடு வரும் என்றும், கடுமையான தண்டனை உண்டு என்றும் இயேசு எச்சரிக்கிறார். இறைவனைப் பற்றிப் பேசுவதற்கும், இறைவனின் விருப்பப்படி வாழ்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை இயேசு இன்று சுட்டிக்காட்டுகிறார்.


இன்றைய முதல் வாசகத்தில்  கடவுள் நம்மை உலகம் தோன்றுவதற்கு முன்பே கிறிஸ்துவில் தேர்ந்தெடுத்து, இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார் என்றும்,  கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக நமக்கு மீட்பையும் பாவமன்னிப்பையும் வழங்கியுள்ளார் என்பதையும் தெளிவுப்படுத்தினார்.   


நாமும் இரவும் பகலுமாக இறைவேண்டல் செய்யலாம்,  திருப்பலியில் பங்கேற்கலாம், இறைவார்த்தையைக் கேட்கலாம். ஆனால், நமது வாழ்வில் அன்பு, மன்னிப்பு, இரக்கம், நீதி ஆகியவை வெளிப்படவில்லை என்றால், நமது பக்தி முழுமையானதாக இருக்காது. அது வெளிவேடமாகலாம். 


ஆனால், உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது கடவுளின் அன்பைப் பெறுவதோடு நின்றுவிடாமல், அந்த அன்பை மற்றவர்களுக்குப் பகிர்வதில் நிறைவுபெறும்.  ஆகவே, கடவுள் நமக்கு அளித்துள்ள அருளுக்குத் தகுந்தவர்களாக வாழ்ந்து, நமது வார்த்தைகளிலும் செயல்களிலும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறோம். வெளிவேட சீடத்துவம்  நம்பகத்தன்மைக்கு பங்கம் வருவிக்கும் . வெளிவேடம் சீடத்துவத்தின் தோற்றத்தைக் காக்கலாம்; ஆனால் நம்பகத்தன்மையைக் காக்க முடியாது என்பதை நினைவில் கொள்வோம். 


இறைவேண்டல்.


ஆண்டவரே, வெளிப்புறப் பக்தியோடு மட்டும் நின்றுவிடாமல், தூய்மையான உள்ளத்துடனும் உண்மையான மனமாற்றத்துடனும் வாழ எனக்கு அருள்தாரும். ஆமென்.

ஆர்.கே.சாமி,
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image