இறையருள் அற்றவருக்கு அவ்வுலகமில்லை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

28 நவம்பர் 2026
 
திருவெளிப்பாடு 22: 1-7
லூக்கா  21: 34-36 


இறையருள் அற்றவருக்கு அவ்வுலகமில்லை!

முதல் வாசகம். 

இன்றையை இவ்வாசகப் பகுதியில், யோவான் அவருக்கான காட்சியில்,  கடவுளின் அரியணையிலிருந்து பாயும் வாழ்வளிக்கும் நீரையும், வாழ்வளிக்கும் மரத்தையும் காண்கிறார்.  அவை இறைவன் அளிக்கும் அருளையும், நிலையான வாழ்வையும், நிறைவான மகிழ்ச்சியையும் குறிக்கின்றன. இனி சாபமோ இருளோ இருக்காது என்றும், இறைவனின் மக்கள் அவரை நேருக்கு நேர் கண்டு, அவரது ஒளியில் என்றென்றும் வாழ்வதோடு,  என்றும் இறைவன் அவர்களுடன் இருந்து, அவர்களை ஆளுவார் என்றும் இக்காட்சியின் மூலம் சித்தரிக்கப்படுகிறது.

மேலும், இங்கே இயேசு விரைவில் வருவதாக உறுதியளிக்கிறார். அவரது வார்த்தைகளைக் கடைப்பிடித்து, அவரது வருகைக்காக விழிப்புடன் காத்திருப்பவர்கள் பேறுபெற்றவர்கள் என்றும்,  இறைவனின் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டு, அவரது வார்த்தைகளின்படி வாழ்ந்து, அவர் அளிக்கும் நிலையான வாழ்வைப் பெறுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

நற்செய்தி.
 
இன்றைய நற்செய்தியில், இயேசு தம் சீடர்களிடம், உலகக் கவலைகளாலும், அளவுக்கு மீறிய உணவு, குடி ஆகியவற்றாலும் தங்கள் உள்ளங்கள் மந்தமடையாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார். இதற்கான காரணத்தையும் அவர் முன்வைக்கிறார்.  ஏனெனில், எதிர்பாராத நேரத்தில்  இறுதிநாள் வந்துசேரும். அது உலக மக்கள் அனைவரையும் திடீரெனத் தாக்கும் கண்ணியைப் போல் இருக்கும் என்பதோடு,  வாழ்வின் அன்றாடக் கவலைகளில் மூழ்கிவிடாமல், இறைவனின் வருகையை உணர்ந்து விழிப்புடன் வாழ வேண்டும் என்ற படிப்பினையைத் தம் சீடர்களுக்கு வழங்குகிறார்.

நிறைவாக, நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்பித்து, மானிட மகன் முன்னிலையில் நிற்கும் வலிமையைப் பெறுவதற்காக எப்போதும் விழிப்புடன் இருந்து இறைவனிடம் மன்றாடுமாறும் இயேசு அழைக்கிறார்.  


சிந்தனைக்கு.

ஆண்டின் பொதுக்காலத்தின் இறுதியை நெருங்கும் நமக்கு,  இயேசு தமது பாடுகளுக்கு முன்பாக ஆற்றிய இறுதி பொதுப் போதனையை  நிறைவு செய்வதைக் காண்கிறோம். கடந்த சில நாள்களாக வானில் தோன்றும் அடையாளங்கள், துன்புறுத்தல்கள், துயரங்கள் மற்றும் தமது மாட்சிமையான வருகையைப் பற்றிப் பேசிய இயேசு, இப்போது மனித உள்ளத்தின் நிலையைப் பற்றிக் கூறுகிறார். குறிப்பாக நமது வாழ்வு ஆன்மீக விழிப்புணர்வை இழந்து, அலட்சியமான நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுக்க அழைப்புவிடுக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், திருவெளிப்பாட்டின் இறுதிப் பகுதியில், கடவுளின் அரியணையிலிருந்து பாயும் வாழ்வளிக்கும் நீரைக் காண்கிறோம். அதன் இரு கரைகளிலும் வாழ்வளிக்கும் மரம் இருக்கிறது. அந்த மரத்தின் இலைகள் மக்களுக்கு நலமளிக்கின்றன. இப்பகுதியில்  வாழ்வளிக்கும் நீர் என்பது இறைவன் அளிக்கும் அருளையும், வாழ்வளிக்கும் மரம் என்பது இறைவனிடமிருந்து கிடைக்கும் நிலை வாழ்வையும் குறிப்பதாகப்பொருள் கொள்ளலாம்,

இவ்வுலகமே நமக்குத் தற்காலிகம் என்ற போது, இங்கு நாம் கொண்டிருக்கும் செல்வம்,  பதவி, புகழ், சொத்து, வசதி,  ஆகியவை மட்டும் நிலையானவை என்பது மடமை.  இவ்வுலகில் நாம் கொண்டிருக்கும் அழகான தோற்றம் கூட தற்காலிகம்தான. இயேசுவின் போதனைகளின் அடிப்படையில், இவ்வுலக வாழ்க்கை நிரந்தரமானது அல்ல; அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நமக்குக் கொடுக்கப்பட்ட கொடை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

நற்செய்தியில், இயேசு, உலகக் கவலைகளால் நமது உள்ளங்கள் மந்தமடைய வேண்டாம் என்று எச்சரிக்கிறார். ஏனெனில், உலக வாழ்க்கையில் மூழ்கி இறைவனை மறந்து வாழ்ந்தால்  நமது ஆன்மாவுக்கு  அழிவுறும்  ஆபத்து   இருக்கிறது. எனவே, நாம் உலகத்தில் வாழகிறோம் என்றாலும், உலகத்திற்குரியவர்களாக மட்டும் வாழ்ந்துவிடக்கூடாது. உலகப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்; ஆனால் அவற்றுக்கு அடிமையாகிவிடக்கூடாது என்பது நமக்கான நினைவுறுத்தலாக உள்ளது.  தாகமுற்ற மனிதனுக்கு நீர் எவ்வளவு அவசியமோ, அதுபோல ஆன்மாவுக்கு இறைவனின் அருள் அவசியம். நாம்,   பல நேரங்களில் உலகக் கவலைகளால் மந்தமடைகிறோம் என்பதை மறுப்பத்றகில்லை.

நிறைவாக, இயேசு நற்செய்தியின் இறுதியில், "எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்று கூறியதை எப்போதும் நினைவில் கொள்வோம். மேலும், மத் 16:26-ல், ‘மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?’ என்ற கேள்வியையும் நமக்கு முன் வைக்கிறார். 

இறைவேண்டல்.
 
ஆண்டவரே! உலகக் கவலைகளால் என் உள்ளம் மந்தமடையாமல் காத்தருளும். உமது வார்த்தையில் நிலைத்திருந்து, இறைவேண்டலில் விழிப்புடன் வாழவும், உமது வருகையை நம்பிக்கையோடும் அன்போடும் எதிர்கொள்ளவும் எனக்கு அருள்புரியும். ஆமென்.


ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image