நன்றி மறப்பது நன்றன்று! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 32-ம் வாரம்-புதன்
11 நவம்பர் 2026
 

தீத்து 3: 1-7
லூக்கா 17: 11-19
 
நன்றி மறப்பது நன்றன்று!


முதல் வாசகம்.


திருத்தூதர் பவுல், தீத்து எனும் ஆயருக்கு எழுதும்போது, கிறிஸ்தவர்கள் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கீழ்ப்படிந்து, நற்செயல்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அத்தோடு அவர்கள், யாரையும் இழிவாகப் பேசாமல்,  எல்லோரிடமும் கனிவுடனும் பொறுமையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார். அவர் தொடர்ந்து,  நாமும் ஒரு காலத்தில் அறிவில்லாதவர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும், தீய ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களாகவும் வாழ்ந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.


 
மேலும், நமது நற்செயல்களினாலோ, நல்லொழுக்கத்தினாலோ நாம் மீட்புப் பெறவில்லை என்றும், மாறாக, கடவுளின் இரக்கத்தினாலேயே மீட்புப் பெற்றோம் என்பதைப் பவுல் எடுத்துரைக்கிறார். இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் நம்மை மீட்டெடுத்து, தூய ஆவியாரின் அருளால் நம்மைப் புதுப்பித்தார் என்மு படிப்பினையை பகிர்கிறார். 

நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில் சமாரியா, கலிலேயா பகுதிகளுக்கு இடையே பயணம் செய்துகொண்டிருந்தபோது, தொழுநோயால் பாதிக்கப்பட்ட பத்துப் பேர் அவரைச் சந்தித்தனர். அவர்கள் தொலைவிலேயே நின்றுகொண்டு, “இயேசுவே, போதகரே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரல் கொடுத்தனர். இயேசு அவர்களைக் கண்டு, குருக்களிடம் சென்று உங்களைக் காட்டுங்கள் என்று கூறினார். அவர்கள் செல்லும் வழியிலேயே நோயிலிருந்து குணமடைந்தனர் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.


மேலும்,  குணமடைந்த பத்துப் பேரில் ஒருவர் மட்டுமே கடவுளைப் போற்றிக்கொண்டே இயேசுவிடம் திரும்பி வந்து அவருக்கு நன்றி கூறினார் என்றும்  அவர் ஒரு சமாரியர் என்றும் குறிப்பிட்டு எழுதுகிறார்.


தொடர்ந்து,  இயேசு, மற்ற ஒன்பது பேர் எங்கே என்று கேட்டு, நன்றி உணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். பின்னர் அந்தச் சமாரியரிடம், “எழுந்து செல்லும்; உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்று கூறுகிறார். 


சிந்தனைக்கு.

இயேசு, அவரைப் பார்த்து,“பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். -லூக்கா 17:17-18

நற்செய்தியில் இயேசு,  கடவுளிடமிருந்து நாம் பெறும் அருளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றியுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதையும், உண்மையான நம்பிக்கை நம்மை இறைவனிடம் நெருங்கச் செய்கிறது என்பதையும் எடுத்துரைக்கிறார். 

மோசேயின் சட்டத்தின்படி, தொழுநோயாளிகள் சடங்குமுறைப்படி தீட்டுப்பட்டவர்கள். எனவே, அவர்கள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வாழ வேண்டியிருந்தது. அவர்கள் கிழிந்த ஆடைகளை அணியவும், தலைமுடியைக் கலைந்த நிலையில் வைத்திருக்கவும், முகத்தின் கீழ்ப்பகுதியை மூடிக்கொள்ளவும் வேண்டும். மேலும், யாராவது தங்களை நெருங்கி வரும்போது, “தீட்டு! தீட்டு!” என்று உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் என்பதும்  லேவியர் 13:45-46 பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழுநோயாளர் சமூகத்திலும் குடும்பதிலும் ஒன்றித்து வாழ தகுதி இழந்தவர்கள்.


இத்தகையோரில் பத்து பேரை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இயேசு குணப்படுத்துகிறார். அவர்களில் ஒருவர் சமாரியர், யூதர்களுக்கு ஆகாதவர். குணமானதும் நன்றி தெரிவிக்க அந்த சமாரியர் மட்டுமே இயேசுவைத் தேடி திரும்பி வந்து நன்றி தவில்ந்தார்.


இதன் மூலம், இறைவனிடமிருந்து அருளைப் பெறுவது மட்டுமல்ல, அந்த அருளை உணர்ந்து அவருக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்வதும் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. இந்த நிகழ்வின் அழகான ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இது உடல் நலம்பெறுதலைத் தாண்டி, ஆன்மிகக் குணமடைதலின் ஆழமான மற்றொரு நிலையையும் நமக்கு வெளிப்படுத்துகிறது.  


ஆம், ஆன்மிக முதிர்ச்சியில் வளர வேண்டுமெனில், நன்றியுணர்விலும் நாம் தொடர்ந்து வளர வேண்டும். அதற்காக, இறைவேண்டலின் வழியாக இறைவனிடம் மீண்டும் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும்; உரத்த குரலில் அவரைப் போற்றிப் புகழ வேண்டும்; இயேசுவின் திருவடிகளில் விழுந்து அவரை ஆராதிக்க வேண்டும். அப்போதுதான் நாம் இன்னும் ஆழமான ஆன்மிகக் குணமடைதலையும், இறைவனின் அளவற்ற இரக்கத்தில் நிறைவான பங்கையும் பெற்றுக்கொள்ள முடியும். மரியாளின் பாடல் (லூக்கா 1:46-53) மரியாவுக்கு இறைவன் செய்த அருஞ்செயலை முன்னிட்டு அவர் வெளிப்படுத்திய நன்றியுணர்வை காணலாம்.


முதல் வாசகத்தில், கடவுளின் இரக்கத்தினாலேயே மீட்புப் பெற்றோம் என்பதைப் பவுல் எடுத்துரைக்கிறார். நமக்கு கடவுளின் இரக்கமும், அதே வேளையில் நமது நன்றியறிதலும் இன்றியமையாதவை.  செய்நன்றி குறித்து திருவுள்ளவர் இவ்வாறு கூறுகிறார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு." (குறள் 110)
 
இக்குறளின் வழியாக அவர், ஒருவர் செய்த உதவியை மறந்து, அவருக்குத் துரோகம் செய்யும் மனிதனுக்கு வாழ்நாளில்  மன்னிப்போ, பிழைப்போ இல்லை
என்று திருவள்ளுவர் மிகக் கடுமையாக எச்சரிக்கிறார்.


ஆகவே, கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் பெற்ற நாம், பிறரிடமும் அதே அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தி நற்செயல்களில் வாழ வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துவோம்.  

இறைவேண்டல்.


ஆண்டவராகிய இயேசுவே, நன்றி மறவாத இதயத்தையும், உம்மைப் போற்றும் நம்பிக்கையையும் எனக்குத் தாரும். ஆமென்.

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image