தூத்தூர் புனித தோமையார் ஆலயத்தில் மறைக்கல்வி ஆசிரியர்களுக்குச் சிறப்புக் கருத்தரங்கம் | Veritas tamil

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் புனித தோமையார் உயர் மறைவட்ட ஆலயம், திருவனந்தபுரம் இலத்தீன் உயர்மறை மாவட்டத்தின் கீழ் செயல்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக மையமாகும். புனித தோமையாரின் பெயரால் விளங்கும் இவ்வாலயம், தூத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள எட்டு கடற்கரைப் பங்குகளின் ஆன்மீக வளர்ச்சிக்கு வழிகாட்டி வருகிறது. மேலும், கல்வி மற்றும் சமூகப் பணிகள் வழியாகவும் இப்பகுதி மக்களின் வாழ்வில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க தூத்தூர் புனித தோமையார் மறைவட்ட ஆலயத்தின் சார்பில், மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம் நவம்பர் 7 அன்று 'நமது திருமண மண்டபத்தில்' நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்ற இக்கருத்தரங்கினை தமிழக மறைக்கல்வி இயக்குநர் அருட்பணி பெனடிக்ட் எம்.டி. ஆனலின் அவர்கள் வழிநடத்தினார்.

இக்கருத்தரங்கில், மறைக்கல்வி ஆசிரியர்கள் கிறிஸ்துவுக்கும் குழந்தைகளுக்கும் இடையே பாலமாகச் செயல்பட வேண்டும் என்றும், மறைக்கல்வியின் மையமும் உயிர்நாடியும் இறைவார்த்தையே என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், மறைக்கல்வி என்பது வெறும் கற்பித்தல் பணி மட்டுமல்ல, இறைவனால் வழங்கப்பட்ட அருள்கொடை மற்றும் பொறுப்புமிக்கப் பணி என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

ஆசிரியர்கள் மாணவர்களின் இதயங்களைத் தொடும் வகையில் கற்பிப்பதுடன், தினமும் திருவிவிலியம் வாசித்தல், செபம் செய்தல், இயற்கையைப் பேணுதல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நற்பண்புகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதேவேளை, காலதாமதம், தரம் தாழ்ந்த பேச்சு, மாணவர்களை ஒப்பிட்டுப் பேசுதல், அளவுக்கு அதிகமான கண்டிப்பு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டியதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது.

நம் பிள்ளைகளின் விசுவாசத்தை வளர்ப்பது ஒவ்வொரு மறைக்கல்வி ஆசிரியருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள முக்கியப் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் இக்கருத்தரங்கம் அமைந்தது.

இந்நிகழ்வினைப் பங்குத்தந்தை அருட்பணி சூசை ஆன்றணி CMF, அருட்பணி பிரியன் CMF, பங்குப் பேரவை மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
 

Tamil Survey Popup Image