சீடத்துவம் – அழைப்புக்கேற்ப வாழ்வது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

23 ஜனவரி 2026
பொதுக்காலம் 2-ஆம் வாரம் – வெள்ளி

1 சாமுவேல்   24: 2-20
மாற்கு   3: 13-19


சீடத்துவம் – அழைப்புக்கேற்ப வாழ்வது!
 

முதல் வாசகம்.

இந்த  பகுதி தாவீது மற்றும் சவுல் அரசின் கதையின் தொடர்ச்சியாக உள்ளது.  மக்களடையே அதிகரித்து வரும் தாவீதின் புகழைக் கண்டு பொறாமைப்பட்டு பயந்த சவுல், அவரைக் கொல்ல தீவிரமாக தேடியலைகிறார்.  தாவீதையும் அவருடைய சீடர்களையும் கண்டுபிடிக்க சவுல் 3,000 பேர் கொண்ட ஒரு படையை வழிநடத்துகிறார், இறுதியில் ஒரு குகையில் கரடுமுரடான பகுதிக்குள் அவர் தாவீதையும் அவரது சீடர்களையும்  கண்டுப்பிடிக்கப்படுகிறார். 

தாவீதின் ஆட்கள் சவுலைப் பழிவாங்கும்படி அவரை வற்புறுத்துகிறார்கள் - கடவுள் சவுலை அவரது கைகளில் ஒப்படைக்கும் நாளாக இது இருக்கலாம் என்று கூட அவர்கள் கூறுகிறார்கள்.  தாவீதோ, “ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர்மேல் கை வைக்கக் கூடாது” என்று உள்ளதில் கலங்கினவராக பின்வாங்கினார்.

சவுல் "ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்" – என்பதால், கடவுளின் திட்டம் தனது சொந்த எண்ணங்களைவிட முக்கியமானது என்பதை தாவீது உணர்ந்தார். தாவீதின் இரக்கம் சவுலின் இதயத்தை மென்மையாக்குகிறது.  

நற்செய்தி, 

இன்றைய நற்செய்தியில், இயேசு ஒரு மலையின் மேல் ஏறி, தாம் விரும்புவோரை தம்மிடம் அழைக்கிறார். அவர் பன்னிரண்டு பேரைத் தம்முடைய நெருங்கிய சீடர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஒரு சமூகமாகப் பணிக்கு அழைக்கிறார்.  
அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் - அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன்,   யூதாசு இஸ்காரியோத்து என்போர் என மாற்கு விவரிக்கிறார். 


சிந்தனைக்கு.


நற்செய்தியைக ஆழந்து வாசித்தால், இயேசு  உலக அடிப்படையில் தம் சீடர்களை   தேர்ந்தெடுக்கவில்லை. அவர்களின் கல்வி சான்றிதழ்கள், செல்வாக்கு உள்ளவர்களின் பரிந்துரை கடிதங்கள், மாத ஊதியம், இதர வெகுமதிகள் போன்றவற்றை அவர் அடிப்படையாகக் கொண்டு தம் திருத்தூதர்களை நியமிக்கவில்லை. 

பிரதிபலன் எதிர்பாராது, அவரை நெருக்கமாகப் பின்பற்றத் தயாராக இருப்பவர்களை அறிந்துணர்ந்து  அவர் அழைத்தார். இது கடவுளிடமிருந்து நமக்கு வரும் அழைப்பு தனிப்பட்டது மற்றும் நோக்கம் கொண்டது  என்பதை   நினைவூட்டுகிறது.

இந்த அழைப்பில்  நாம் அறியும்  மிக முக்கிய அம்சம் என்னவெனில், அழைக்கப்பட்டோர் இயேசுவுடன்  தங்க வேண்டும், அவரது எளிய வாழ்வை ஏற்க வேண்டும், உலகப் பற்று அற்றவர்களாக இருக்க வேண்டும். 

ஆம், இயேசு முதலில் ஒரு  சமூகத்தை உருவாக்குகிறார். பன்னிரண்டு பேர் திருஅவையின் பணியின் அடித்தளத்தைக் குறிக்கின்றனர். அவர்களின் குறைபாடுகளுடன் கூட, இயேசு அவர்களைத் தேர்ந்தெடுக்கிறார் – ஆகவே, நாம் எதிர்ப்பார்ப்பது போல, கிறிஸ்தவ சமூகம் குற்றம் குறையற்ற  ஒன்றல்ல, அது இரக்கத்தின், நம்பிக்கையின்  பிறப்பிடம். 

இயேசு, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் ஒரு தனித்துவமான பணியை ஒப்படைத்தார். அவர் அவர்களுக்கு ‘ "அனுப்பப்பட்டவர்"   என்று பொருள்படும் ‘திருத்தூதர்’என்று பெயரிட்டார்.  ஆயன் தன் மந்தையை அறிந்திருக்க வேண்டும், தன் ஆடுகளைப் பெயரிட்டு அழைக்க வேண்டும். அதுவே  ஓர் ஆயனின் சிறப்பு. இயேசு தன் திருத்தூதர்களைப் பெயரிட்டு அழைப்பதோடு, அவர்களை ஒரே மந்தையாகப் பார்க்கிறார். 


முதல் வாசகத்தில், தாவீது சவுலுக்கு அஞ்சி  தப்பியோடியவராக இருந்தாலும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  மேலும் அவரில் இரக்கமும் நிதானமும் இருந்தது.  கடவுளின் திட்டத்தை மதிக்கிறார். கடவுளின் அருள்பொழிவை மதிக்கிறார். 

 
தாவீது தன்  அதிகாரத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதையும், வாய்ப்பு கிடைத்த போதிலும் சவுலைக் கொல்ல மறுப்பதையும் இரக்கத்தையும் காட்டுகிறது.

அவ்வாறே, இயேசு திருத்தூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்க, குணப்படுத்த மற்றும் பேய்களை விரட்ட அதிகாரம் அளிக்கிறார். அதிகாரத்தை ஆதிக்கத்திற்காக அல்ல, மாறாக சேவை மற்றும் நற்செய்தியின் பணிக்காகப் பயன்படுத்தப் பணிக்கிறார். அவரால் அழைக்கப்பட்ட நம்மில் இத்தகைய தாழ்ச்சியும் முற்போக்கு எண்ணமும் உள்ளதா? என்பது பற்றி சிந்திப்போம். 

இறைவேண்டல்.


திருத்தூதர்களைத் திருஅவைக்காக அழைத்த ஆண்டவரே, என்னையும்  நீர் பெயர் சொல்லி அழைத்துள்ளீர் என்பதால் , உம்மில் நம்பிக்கை வைத்து உமது பணியை நிறைவேற்றுவதில் சோர்வின்றி இருக்க எம்மை காத்தருள்வீராக. ஆமென்.
 

ஆர்கே. சாமி (மலேசியா)
 +6 0122285452