பாவ மன்னிப்பு-கேட்போர் பெறுவர்! | ஆர்.கே.சாமி | Veritas Tamil

18 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 24ஆம் வாரம் –வியாழன்
 
1 திமொத்தேயு  4: 12-16
லூக்கா 7: 36-50

 

பாவ மன்னிப்பு-கேட்போர் பெறுவர்! 

முதல் வாசகம்.

சில சமயங்களில் ஆண்டவராகிய இயேசு மக்களில் மனமாற்றம் கொணர  மற்ற நபர்களைப் பயன்படுத்துகிறார், எடுத்துக்காட்டாக முதல் வாசகத்தில் புனித தீமோத்தேயு புனித பவுலின் பயணத் தோழராக இருந்த பிறகு, அவர் எபேசுவில் உள்ள நம்பிக்கை சமூகத்திறகு ஆயராக நியமிக்கப்படுகிறார். இவர் வழியாக எபேசவில் நற்செய்தி பரவியது.

புனித பவுல், நற்செய்திப் பணியில் ஈடுபடும் தீமோத்தேயுவை இளம் வயதிலேயே மதிப்பிழந்து, பேர்கெட்டுப்  போகக்கூடாது என்று அறிவுறுத்துகிறார். கடவுளின் அழைப்போடு ஆசீர்வாதங்களும் பொறுப்புகளும் வருகின்றன. தீமோத்தேயு கிறிஸ்தவ நெறிகளுக்கு முன்மாதிரியாகவும்  சிறந்த போதகராகவும் விளங்க வேண்டும் என்று விரும்புகிறார். 

ஆகவே, ஆண்டவராகிய இயேசுவிலும் மக்களிலும் தனது சொந்த ஒழுக்க நெறிகளில் தீமோத்தேயு கவனம் செலுத்த வேணடும் என்று பவுல் அன்பு எச்சரிக்கை விடுக்கிறார்.  

நற்செய்தி.


நற்செய்தியில், ஒரு பரிசேயரான சீமோன் வீட்டிற்கு  இயேசு விருந்துக்கு அழைக்கப்படுகிறார். அப்போது, பாவியாக அறியப்பட்ட ஒரு பெண், இயேசு அங்கே இருப்பதை அறிந்துகொள்கிறாள். அவள் ஒரு  நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு உள்ளே நுழைந்து, இயேசுவின் அருகில் அழுது நின்றதோடு, அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார் என்று லூக்கா கூறுகிறார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த பரிசேயரான சீமோன், "இவர் ஓர் இறைவாக்கினராக இருந்தால், தன்னைத் தொடுகிற இந்தப் பெண் எப்படிப்பட்டவள் என்பதை அறிந்திருப்பார், இவள் பாவியாச்சே?" என்று தனக்குள் எண்ணி கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த இயேசு ஓர் உவமையின் வழி அறிவுப்புகட்டுகிறார்.  இரண்டு பேர் கடன் கொடுத்தவருக்குக் கடன்பட்டிருக்கிறார்கள்: ஒருவர் அதிக அளவு (500 டெனாரி), மற்றவர் குறைந்த அளவு (50 டெனாரி). இருவராலும் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. கடன் கொடுத்தவர் இருவர் மீதும் இரக்கப்பட்டு,  இருவரையும் மன்னித்து கடனிலிருந்து விடுதலையளித்தார் என்று உவமையை முடித்து,   எந்தக் கடனாளி கடன் கொடுத்தவரை அதிகமாக அன்பு செய்வார் என்றே கேட்கிறார். சீமோன்  பெரிய கடன்பட்டவர் தான் என்றார்.

பின்னர் இயேசு சீமோனின் நடத்தையையும் அந்தப் பெண்ணின் நடத்தையையும் வேறுபடுத்திக் காட்டுகிறார்: சீமோன் இயேசு எதிர்பார்த்த விருந்தோம்பலை (அவரது பாதங்களுக்குத் தண்ணீர், வாழ்த்து, முத்தம், தலையில் எண்ணெய் பூசுதல்) வழங்கவில்லை, ஆனால் அந்தப் பெண் எதிர்பார்த்ததை விட அதிகமாகச் செய்தார். அவளுடைய செயல்கள் மனந்திரும்புதல், பாவத்திற்காக துக்கம், அன்பு மற்றும் பணிவு ஆகியவற்றைக் காட்டுகின்றன என்றார்.

இயேசு அந்தப் பெண்ணின்   பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றும், அவளுடைய நம்பிக்கை அவளை மீட்டது என்றும் கூறி, அவளை அமைதியாக அனுப்பி வைக்கிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய வாசகங்களைப் பற்றி சிந்திக்கும்போது, பரிசேயரைப் போலவே நம்மில்  சிலரும் கடவுளின் அருளுக்கு உள்ளத்தைத் திறப்பதில்லை.  அவர்கள் தங்கள் சொந்த தீர்மானத்தால், தாங்களே நீதிமான்கள் என்று நம்பி செயல்படுகிறார்க்ள். 

பரிசேயனாகிய சீமோன் போன்றோர்  தங்கள் சொந்த நிலைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள், மற்றவர்களை விரைவாக தீர்ப்பளிப்பவர்கள். இயேசு இத்தகைய எண்ணத்திற்கும், செயலுக்கும் சவாலாகக் கருத்துரைக்கிறார்.  ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் பாவம் செய்யும்போது செய்யும்போது கடவுள் நம்மை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்கிறார். 

ஆம், இயேசு,   “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” (மாற்கு 2:17) என்றார். பாவிகளை அவர் விரும்பி மனமாற்றத்திற்கு அழைக்கிறார்.

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் கடவுளும் ஏற்கனவே நம்மை மன்னித்துவிட்டார்,   கடவுள் நமக்காகச் செய்த, செய்து கொண்டிருக்கும், தொடர்ந்து செய்யவிருக்கும் அனைத்திற்கும் கடவுளைப் புகழ்ந்து நன்றி கூறுவதோடு  நம்மை நாமே, அர்ப்பணிக்க வேண்டும்.  அந்த பாவியான பெண்ணிடமிருந்தும் நாம் சில படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளலாம்.

முதலாவது, நான் பாவியாயிற்றே, விருந்துக்குப் போனால் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?' நான் விரட்டப்படலாமே என்ற கவலை அந்தப் பெண்ணுக்குச் சிறிதும் இல்லை. ஆண்டவரை நேருக்கு நேர் சந்திக்க அவள் துணிவுகொண்டாள்.

அடுத்து,  நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கடவுள் நம்மை மன்னிக்கின்றார். நம்மை சுற்றியுள்ளவர்களும் நம்மை மன்னிக்கக்கூடும்.  ஆனால், நாம் தான்  நடந்த தவறுக்காக காலம் முழவதும ஒதுங்கியே வாழ தீர்மானிக்கிறோம். இதுவும் தவறுதான். மழை நீர் படாத பூமி கிடையாது. எல்லாரும் ஏதோ ஒரு வகையில் பாவிகள்தான். நற்செய்தியில் கண்ட பெண்ணைப்போல் இயேசுவிடம் திரும்பிவர துணிவு பெற வேண்டும். அந்த பாவியான பெண் தடைகளைத் தாண்டி இயேசுவை அண்டினாள். நறுமணத்தைலம் கொண்டு இயேசுவின் பாதம் அமர்ந்து பாவ மன்னிப்புக்கு வழிதேடினாள். பாதை மாறியவள் நேர் பாதைக்கு வழிகண்டாள். ‘உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன். இந்தப் பெண் செய்த பல பாவங்கள் இன்று மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவருடைய அன்பு மிகுதியானது’ என்றார்.

 
இயேசு பாரபட்சம் பார்ப்பவரல்ல, அவர் பரிசேயரின் அழைப்பை ஏற்றார். ஏழைகளையும் பாவிகளையும் தேடிச்சென்ற இயேசு, பணக்கார பரிசேயனை நிராகரிக்கவில்லை. ஆனால், இயேசு விருந்துக்கு வந்தார். ஆகவே, பாவிகளை நிராகரிப்பதும் பாவம்தான் என்பதை நினைவில கொள்வோம்.

இறைவேண்டல்.

இரக்கமிகு என் ஆண்டவரே,  என்னையும் உம்மைப் பின்பற்றுபவர்கள் அனைவரையும்  ஆழமான அன்பால் அன்புசெய்வதற்கு நன்றி.  உம்முடைய மன்னிப்பை என் வாழ்க்கையில்  அனுபவிக்கும்போது எப்போதும் ஆழ்ந்த நன்றியுணர்வுடன் நிரப்பப்படுவேனாக. ஆமென்.

 

 
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452