இயேசு நம்மில் உறைந்திருக்கும் வாழ்வு தரும் உணவு | ஆர்.கே. சாமி | VeritasTamil

பாஸ்கா3-ம் வாரம் – சனி
தி.பணிகள்  9: 31-42
யோவான் : 6: 60-69


இயேசு நம்மில் உறைந்திருக்கும் வாழ்வு தரும் உணவு.
  
முதல் வாசகம்.

இன்றைய வாசகங்களை நாம் சிந்திக்கும்போது, கடவுள் நமக்கு  நன்மையின் ஊற்றாக இருப்பதை  காண்கிறோம். முதல் வாசகம்  ஆரம்பகாலத்தில் மொட்டாக இருந்த திருஅவை  மலர்வதை  காட்டுகிறது. நேற்று சவுல் ஆரம்பகால கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதைக் கேட்டோம்.   துன்புறுத்திய சவுல் இயேசுவின் நேரடி அழைப்பினால்  பவுலாக  இயேசுவின் ஊழியராக மாறினபோது, அவரது மனமாற்றம் திருஅவைக்கு  ஆசீர்வாதமாக மாறியது.

இன்று புனித பேதுரு நம்பிக்கையாளர்களின் வாழ்க்கையில் என்ன விளைவை ஏற்படுத்தினார் என்பதைக் காண்கிறோம். பேதுரு ஊனமுற்ற மற்றும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஐனேயாவிடம்   "ஐனேயா, இயேசு கிறிஸ்து உன்னைக் குணப்படுத்துகிறார்." குணப்படுத்துபவர் நானல்ல என்றும், நன்மை, மற்றும்  நல்வாழ்வு இயேசுவிடமிருந்து வருகிறது என்றும் பறைசாற்றுகிறார்.  இயேசுவின் திருப்பெயர் மாட்சியுறுகிறது.

தொடர்ந்து  தபிதாவை  மரித்தோரிலிருந்து கடவுள் எழுப்புவதில் பேதுரு எவ்வாறு முக்கிய பங்கு வகித்தார் என்பதையும் நாம் கேள்விப்படுகிறோம். அதன் மூலம், இன்னும் பலர் ஆண்டவராகிய இயேசுவை நம்பினர் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.

 நற்செய்தி.

இயேசுவின் வாழ்வு தரும் உணவு பற்றிய இன்றைய பகுதியின் வசனங்கள் எப்போதும் என் இதயத்தைத் தொட்டவையாகும். இயேசு கூட்டத்தினரிடம் தம்முடைய உடலை உண்டு தம்முடைய இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார். சிலர், “  இதை யார் ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று கூறி வெளியேறத் தொடங்குகிறார்கள். 
நிறைவாக, இயேசு அவர் அழைத்துக்கொண்ட பன்னிருவைரப் பார்த்து,   “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்” என்றார் என்று யோவான் குறிப்பிடுகிறார். 


சிந்தனைக்கு. 
 
இன்றைய நற்செய்தி வாழ்வு தரும் விண்ணக உணவு பற்றிய இயேசுவின் படிப்பினையை முடித்து வைக்கிறது.    நற்செய்தியைக் கூர்ந்து வாசித்தால் ஓர் உண்மை விளங்கும்.  அவருடைய வார்த்தையில் நம்பிக்கை கொள்ளாமல், வெளியேறியவர்களை  இயேசு திரும்ப அழைக்கவில்லை. “ஓ, நான் உருவகமாக மட்டுமே பேசினேன். நீங்கள் உண்மையில் என் சரீரத்தைப் உண்டு என் இரத்தத்தைக் குடிக்க வேண்டியதில்லை” என்று அவர் கூறவுமில்லை, மழுப்பவுமில்லை.  இயேசு அவர்களைப் போக விடுகிறார். ஏனெனில் இயசுவின் சீடர்களாக இருப்பதற்கான முதல் தகுதி, அவரில் நம்பிக்கை வைப்பதாகும்.

இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” (யோவான் 14:1) என்று அவர் மீதும் தந்தையின் மீதும் நாம் கொண்டிருக்க வேண்டிய நம்மிக்கையின் அவசயத்தை வலியுறுத்தினார்.  அப்போது, பேதுரு ஓர் வாக்குறுதியை அளிக்கிறார். “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்” என்றார். இது அவரில் திருமுழுக்குப் பெற்று அவரில் வாழ்வோர் சார்பாக பேதுரு கொடுத்த வாக்குறுதி எனலாம்.

நற்செய்தியில் ‘இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று பலர் முடிவு செய்கிறார்கள். விலகிப் போகிறார்கள். கடவுளால் ஆகாதது ஒன்றிமில்லை என்பது அவர்களின புத்திக்கு எட்டவில்லை. அறிவு தெளிந்தவர்களுக்கே இயேசுவின் போதனை புரியும். 'வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது' என்பதை நாம ஏற்க வேண்டும். எதையும் தூய ஆவியாரின் துணை கொண்டு அறிய முற்பட வேண்டும். 

அடுத்து, நற்செய்தியில் இயேசு கேட்கும் ‘'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்ற கேள்வி நமக்கும் உரியது. தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் தாய் திருஅவையின் போதனையை ஏற்க மறுக்கும் பலர் நேற்று பெய்த மழையில் பூத்த காளான்களைப் போல் ஆங்காங்கே தோன்றும் (நற்கருணை இல்லாத) சபைகளுக்கு   ஓடுகிறார்கள். இயேசு அவர்களைத் தடுக்க விரும்பவில்லை. இயேசு இன்று நம்மையும், ‘'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்ற கேள்வியை எழுப்புகிறார். பேதுருவைப் போல், “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன’ என்று உரக்க கூற துணிவு கொள்ள வேண்டும். நாம் பச்சோந்திகள் அல்ல. 

நிறைவாக ‘'என் தந்தை அருள்கூர்ந்தாலன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று இயேசு  வலியுறுத்துகிறார். ஆம் கெத்சமணியில் காவலர்கள் இயேசுவைக் கைது செய்ய முற்பட்டதும் தந்தையின் ஏற்பாடு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். நாம் தந்தையால் அருள்கூரப்பட்டவர்கள். இயேசுவின் வாழ்வளிக்கும் உணவைத் தேடி குறிப்பாக ஞாயிறுதோறும் அவரை நாடிச் செல்ல வேண்டியவர்கள். 

இறைவேண்டல்.

ஆண்டவரே, நிலைவாழ்வின் ஊற்றே, உமது திருவுடலால் என்னை நாளும் திடப்படுத்தி, காத்து வருகின்றீர்.  தூய  ஆவியாரின்  வல்லமையால், என் கண்களையும், என் மனதையும், உன் இதயத்தையும் திறந்து உம்மில் நான் உறையச் செய்வீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452