நற்கருணையே (இயேசுவே) தம் வாழ்வின் மையமாகட்டும் | ஆர்.கே. சாமி | VeritasTamil

பாஸ்கா3-ம் வாரம் – வெள்ளி
தி.பணிகள்  9: 1-20
யோவான் : 52-59


நற்கருணையே (இயேசுவே) தம் வாழ்வின் மையமாகட்டும்!
  
முதல் வாசகம்.

முதல் வாசகம் தமஸ்குக்குச் செல்லும் வழியில்  பவுலின் வாழ்க்கையை மாற்றும் அனுபவத்தைப் பற்றிய விவரத்தை நமக்கு வழங்குகிறது. பவுலுக்கு இந்த சந்திப்பு எவ்வளவு தீவிரமானது என்பதைப் புரிந்துகொள்ள, தர்சு நகரின் சவுல் யார் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். சவுல்  ஒரு பரிசேயர், யூதச் சட்டத்தின் கட்டளைகளை மிகவும் தீவிரமாகவும் கற்றறிந்து, பின்பற்றிய ஒரு யூதர்.  

சவுல் திருச்சட்டத்தை கடைப்பிடிப்பதில்  மிகவும் தீவிரமாக இருந்தார்.  எனவே, முதல் கிறிஸ்தவ மறைசாட்சியான ஸ்தேவானைக்  கல்லெறியும் நிகழ்வில் சவுலும் இருந்தார் என்று லூக்கா சுட்டிக்காட்டுகிறார.  இன்றைய முதல் வாசகம், புதிய நெறி வாழ்வைக் கொண்ட" யூதர்கள் என்று அவர் கருதிய கிறிஸ்தவர்களைக் கைது செய்யும் பயணத்தில், இயேசுவால் அழைக்கப்பட்டு ஞானம் பெறுகிறார் என்பதைக் கூறுகிறது. 
கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தவர் சவுல். இவர் தமஸ்கு நகர் நோக்கிப் போகும்பொழுது, ஆண்டவர் இயேசுவால்  நிறுத்தப்பட்டு,  பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கக் கடவுளால் தேர்ந்துகொள்ளப்படும் திருத்தூதரானார். அன்று முதல், இயேசுவே   இறைமகன் என்று அறிவித்து, அவருக்காகத் தம் உயிரையும் இழக்கத் துணிந்தார் சவுல் என்ற பவுல்.

நற்செய்தி.


நற்செய்தியில் இயேசு  “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள் என்றும்,  எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார் என்றும்,  நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்” என்கின்றார் இயேசு.

 இயேசு இவ்வாறு சொன்னதைக் கேட்டு யூதர்கள், “நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்று முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள். இன்றும் உலகில் அதே முணுமுணுப்பு இருந்து கொண்டுதான் உள்ளது.

இயேசு மேலும், “என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே” என்றும் வலியுறுத்திக் கூறுகிறார்.

சிந்தனைக்கு.

நற்செய்தியின் தொடக்கத்தில், ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று இயேசு தொடங்குவதை கனவனத்தில் கொள்வது சிறப்பு. எனவே, இயேசுவின் இந்த போதனைக்கு மாற்று கருத்தோ போதனையோ இருக்க வாய்ப்பில்லை. அவரது போதனை உறுதியானது. 

யோவான் நற்செய்தியின் இந்த ஆறாவது அதிகாரம், நற்கருணையில் இயேசுவின் உண்மையான உடனிருப்பை உணர்த்தும்  மறைநூலில் காணப்படும்  மிகவும் வலுவான அடிப்படையாகும். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் தம்முடன் இசைந்திருக்கவும் ஊட்டம் பெறவும்  விரும்புகிறார். ஆனால், இயேசுவின் இந்த அறிவிப்பை யூதரகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஏனெனில் முற்காலத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட போதனையே காரணம். யூதர்களைப் பொறுத்தளவில், மாமிசத்தை இரத்தத்தோடு உண்ணக் கூடாது. அது திருச்சட்டத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது.   காரணம் உயிர் இர்தத்தில் கலந்துள்ளது என்று அவர்கள் நம்பினர் (தொநூ 9: 3-4; லேவி 17: 10-16). எனவே,  அவரது உடலையும் இரத்தத்தை அடையாள முறையில்தான் இயேசு  ஏற்க சொன்னார். அவர் இறந்து 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது... எனவே அவரது உடலையும் இரத்தத்தையும் எங்கிருந்து பெறுவது?

ஆகவேதான் தமது உடலாகவும் இரத்தமாகவும் அடையாள முறையில் விளங்க நற்கருணையை ஏற்படுத்தினார். திருப்பலியில் தாய ஆவியாரின் தூண்டுதலால் புளிப்பற்ற அப்பம் அவரது உடலாகவும், திராட்சை இரசம் அவரது இரத்தமுமாக மாற்றப்படுகிறது. கடவுளால் ஆகாதது ஒன்றிமில்லை. 

நற்கருணையில் கிறிஸ்துவின் உண்மையான உடனிருப்பு என்ற கோட்பாட்டைப் பற்றி கத்தோலிக்கர்களும் பிரிந்த சபையினருக்கும் கருத்து வேறுபாடு உண்டு என்பது உலகறிந்த உண்மை.  நற்கருணை  உண்மையில் கிறிஸ்துவின் உடல் மற்றும் இரத்தம் என்று பிரிந்த சபையினரில் பெரும்பாலோர் நம்புவதில்லை.  அவை வெறும்  அடையாளங்கள் மட்டுமே என்று கடந்த சுமார் 500 ஆண்டுகளாக திருஅவையில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்கள் சொல்வதிலும் உண்மை உண்டு. ஏனெனில் அவர்கள் சபைகளில் குருத்துவம் கிடையாது. குருத்துவமின்றி நற்கருணை இல்லை. நற்கருணை இன்றி குருத்துவமும் இல்லை.

கிறிஸ்துவையும் திருஅவையில் நிலவிய குருத்துவத்தையும் சவுல் அழிக்கத் தொடங்கினார். இயேசு அவரை இடைமறித்து, அவரது திருவுடலையே (திருஅவையையே) சவுல் துன்புறுத்துவதாக சவுலுக்குத் தெளிவுப்படுத்தினார். அவரது கண்கள் திறக்கப்ட்டன.  ஆனால், இன்றைய பிற சபையினரோ தங்களுக்கென்று ஒரு கோட்பாட்டை வகுத்துகொண்டு, நற்கருணையில் இயேசுவின் உடனிருப்பு இல்லை என்று குழப்பத்தை விதைத்து வருகிறார்.  அன்று, பன்னிருவருள் ஒருவனான யூதாசு எனப்படும் இஸ்காரியோத்துக்குள் சாத்தான் புகுந்ததுபோல (லூக்கா 22:3) 1500 ஆண்டுகளுக்குப் பின் ஒரு கிறிஸ்தவரில் சாத்தான புகுந்திருக்க வேண்டும். 

1 கொரி 11:23-24 ஆகிய இரு வசனங்களில், “ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றும், அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார் என்று தொடக்கத் திருஅவையில் நிலவிய நம்பிக்கை வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார்பவுல்.  இவரது போதனையும சபையினரால் மறுக்கப்படுகிறது. 

நற்கருணையைத் தூற்றுவார் தூற்றட்டும், வாழ்வளிக்கும் உணவாகிய இயேசுவிடம் நாம் தொடர்ந்து வந்து, அவரால் ஊட்டம் பெற்று அவரது நீடித்த உறவை அனுபவிப்போம். இந்த நறகருணையை ஈன்றெடுத்த அன்னையையும் இந்த மே மாதத்தில் சிறப்பாக நினைவுகூர்வோம். 

இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, குருத்துவத்தின் வாயிலாக நீர் உமது உடலையும் இரத்தத்தையும் எங்களுக்கு வாழ்வளிக்கும உணவாகவும் பானமாகவும் அளித்து, திடப்ப்டுத்தி வருவதற்கு நன்றி கூறுவதில் மகிழ்கிறேன். ஆமென்.
 
  

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452