அவரிடம் வருபவரை அவர் புறக்கணிப்பதில்லை!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பாஸ்கா3-ம் வாரம் – புதன்
தி.பணிகள் 8: 1b-8
யோவான் 6: 35-40
அவரிடம் வருபவரை அவர் புறக்கணிப்பதில்லை!
முதல் வாசகம்.
புனித ஸ்தேவானின் மரணத்திற்குப் பிறகு, ஆரம்பகால திருஅவை துன்புறுத்தலை எதிர்கொள்கிறது. சவுல் என்பவர் கிறிஸ்தவர்களை வெகுவாகத் துன்புறுத்தி வந்தார். இருப்பினும், சிறைவாசம் மற்றும் மரணத்தை எதிர்கொண்டாலும் கூட, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் எருசலேமை விட்டு இதர பகுதிகளுக்குச் சிதறிச் சென்று நற்செய்தி அறிவித்தார்கள் என்று லூக்கா விவரிக்கிறார்.
சீடர்களால் அறிவிக்கப்பட்ட நல்ல செய்தியில் (கிறிஸ்தவ இயக்கத்தின் ஆரம்பகால பெயர்) மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். கவனம் இப்போது எருசலேமிலிருந்து யூதேயாவின் பிற நகரங்களுக்கும் சமாரியாவிற்கும் மாறுகிறது. ஆவியானவர் திருஅவையை எருசலேமின் வெளிப்புறப் பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறார். திருஅவை பரவி எண்ணிக்கையில் அதிகரிக்கும்போது ஆவியானவர் சீடர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியை விதைக்கிறார்.
திருத்தூதர்களில் ஒருவரான பிலிப்பு யூதர்களால் புறக்கணிக்கப்பட்ட சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர் என்றும் அறிகிறோம்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தனது தந்தையின் தருவுளத்தை நிறைவேற்றுவதுப் பற்றிப் பேசுகிறார். அவரே நம் தாகத்தைத் தணித்து, நம் பசியை முடிவுக்குக் கொண்டுவரும் உணவாக மாறுகிறார். இயேசு தனது அப்பாவுடனான உறவில் நம்பிக்கை கொண்டவர்கள் உயிர்த்தெழுவர் என உறுதியளிக்கிறார். ‘தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர்’ என்றும் . அவரிடம் வருபவரை அவர் புறம்பே தள்ளிவிடமாட்டார் என்றும் உறுதியளிக்கிறார்.
சிந்தனைக்கு.
கடவுளுடன் ஆழந்த உறவு கொண்டு வாழ்பவர்களுக்குக் கிட்டும் மகிழ்ச்சியைக் கண்டு நாம் வியப்படையக்கூடும். அனைத்துப் புனிதர்களையும் இதற்கு எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம். இறை உறவில் எற்படும் மகிழ்ச்சி என்பது அற்பமான மயக்கம் அல்ல, மாறாக, அது உள்ளத்தில் மலரும் அமைதியின் உணர்வு என்றால் மிகையாகாது.
வாழ்வளிக்கும் ஆண்டவராகிய இயேசுவால் உணவளிக்கப்படுவதிலிருந்தே நமது மகிழச்சிமிகு வாழ்க்கைக்கான ஊற்று பெருக்கெடுக்கிறது. நம்புவோரையும் அவரோடு நெருங்கிய உறவில் வாழ்வோரையும் அவர் கடைசி நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் எழுப்புகிறார். அவரோடு ஆழ்ந்த உறவில் வாழ்வதில்தான் சீடத்துவம் அடங்கியுள்ளது. “உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது” (உரோ 8:39) என்கிறார் பவுல் அடிகள்.
ஒரு கிறிஸ்தவரின் மிக முக்கியமான கொடைகளில் ஒன்று மகிழ்ச்சி. கடவுளோடு ஒவ்வொரு நாளும் நல்லுறவில் வாழ்வோர் அகமகிழ்வர். முதல் வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட வேளையிலும் புலம்பெயர்ந்து அன்னிய ஊர்களில் நற்செய்தியைப் போதித்தனர். இந்த முயற்சியில் அகமகிழ்ந்தனர். ‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட் டாயா?’ என்று இயேசு கேட்பதுபோல் இருந்தது அக்காலத்து சீடர்களின் உறவு வாழ்வு.
கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கக்கூடிய ஒரே விடயம், கடவுளுடனான உறவை மறுதளிப்பதாகும். உணவு இல்லாவிட்டால் நம்மால் எப்படி நீண்ட காலம் வாழ முடியாதோ, அவ்வாறே, விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவாகிய இயேசுவை ஏற்காமல் நம்மால் இறைவுறவில் நீடிக்கவும் முடியாது. இயேசு நமது வாழ்வளிக்கும் உணவு, ஏனென்றால், அவர் நமக்குள் கடவுளோடான உறவை வலுப்படுத்தும் ஆன்மீக உணவாக உள்ளார். அவரது திருவுடல் (நற்கருணை) கடவுளுடனான தோழமைக்கான உணவு. எனவே, என்றும்
அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்!
பாடி அகமகிழ்வோம்.
இறைவேண்டல்.
அடுத்த 267-வது திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக ‘கான்கிளேவ்’ எனும் கர்தினால் பேரவை இன்று கூடுகிறது. இறைமக்களின் வல்லமையுள்ள இறைவேண்டல் கர்தினால்கள் பேரவைக்குத் தேவை என்பதால், தூய ஆவியாரின் தூண்டுதலைப் பின்பற்றி கத்தோலிக்க திருஅவையின் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட நம் தந்தையாம் கடவுளை மன்றாடுவோம்.
இறைவா, என்றுமுள எங்கள் ஆயரே,
உமது மந்தையை இடைவிடாத பராமரிப்பால் ஆளுகிறவரே.
உமது எல்லையற்ற தந்தைக்குரிய அன்பினால்
உமது திருஅவைக்கு ஒரு தலைவரை அருள்வீராக.
அவர் தம்முடைய தூய்மையினால் உம்மைப் அன்பு செய்யவும்,
எங்களுக்கு விழிப்புடன் கூடிய பராமரிப்பை அருளவும் வரமருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
