தானங்கள் செய்வோம் பிறரை அன்பு செய்ய!| ஆர்.கே. சாமி | VeritasTamil

திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன்
இ.சட்டம் 30: 15-20
லூக்கா 9: 22-25
தானங்கள் செய்வோம் பிறரை அன்பு செய்ய!
முதல் வாசகம்.
கடவுள் நமக்கு முன் இரு தேர்வுகளை முன்வைக்கிறார் என்பதை இன்றைய வாசகங்கள் நினைவூட்டுகின்றன. மோசே வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டை நெருங்கி வரும்போது, அவர் நுழையமாட்டார் என்று தெரிந்தும், அவர் இஸ்ரயேலர்களுக்கு ஒரு எளிய தேர்வை வழங்குகிறார்: அது வாழ்க்கை அல்லது மரணம். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி, அப்போது நீ வாழ்வாய்’ என்று முடிவை அவரவர் கையில் விட்டுவிடுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்களுக்குத் தம்முடைய இறையாட்சிக்கான பணியில், மற்றவர்களின் கைகளில் ஒப்படைக்கப்டும் அவரது துன்பமும் மரணமும் அடங்கும் என்று தெரிவிக்கிறார். அவருடன் ஒன்றித்து, அவரைப் பின்பற்ற விரும்புவோர் உண்மை வாழ்வான நிலைவாழ்வைப் பெறுவதற்காக துன்புற்று இறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்.
ஆனாலும், தேர்வு அவர்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் (நாமும்) ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்ற சில வேதனையான முடிவை எடுக்க வேண்டும் என்றும் என்றுமுள மகிழ்ச்சியான நிலைவாழ்வுக்கு சீடர்களின் முடிவெடுத்தல் இன்றியமையாதது எனும் படிப்பினை இன்று தரப்படுகிறது.
சிந்தனைக்கு.
இன்று தவக்காலத்தின் இரண்டாம் நாள். இயேசு அவர்தம் பாடுகளை முன்வைத்து, நம்மோடு பேசுகிறார். நற்செய்தியில் இயேசு அவரைப் பற்றிய நான்கு விடயங்களை முன்வைக்கிறார்.
1. மானிட மகன் 'பலவாறு துன்பப்படுவார்.
2. தம் சொந்த மக்களால் 'உதறித் தள்ளப்படுவார்.
3. அவர் 'கொலை செய்யப்படுவடுவார்.
4. அவர் 'உயிருடன் எழுப்பப்படுவார்.
இயேசு, அவர் அடையப்போகும் துன்பங்களையும் மரணத்தையும் வெளிப்படுத்தியப்பின், தன்னைப் பின்பற்றுகிறவர்கள், தன்னலம் துறக்கவும், சிலுவையைத் தூக்கவும், தொடர்ந்து பின்பற்றவும் வேண்டும் என்கிறார்.
இதன்படி, எவர் ஒருவர் தனது மண்ணக வாழ்க்கையைக் காப்பாற்ற விரும்புகிறாரோ அவர் தனது நிலைவாழ்வை இழப்பார். ஆனால், எவர் ஒருவர் தனது மண்ணக வாழ்க்கையை இயேசுவுக்காகவும் நற்செய்திக்காகவும் செலவழித்து, அதை இழப்பாரோ, அவர் தனது நிலைவாழ்வை நிச்சயமாகத் தற்காத்து கொள்வார் என்பது இயேசுவின் அறிவுறுத்தலாக உள்ளது. இதில் தேர்வு நமதாக உள்ளது.
நாம் சிலுவையை அன்பு செய்வதோடு சுமக்கவும் வேண்டும். சிலுவை நமக்கு ஓர் அலங்கரிப்புப் பொருள் அல்ல. அது மீட்பின் அடையாளமும் கருவியுமாகும். தூய ஆவியாருடன் இணைந்து செயல்படுவதன் மூலம் நம் வாழ்க்கையின் துன்பங்களை நமது மீட்பின் கருவிகளாக மாற்ற வேண்டும். இதற்கு இத்தவக்காலமே மிகவும் பொறுத்தமான காலம்.
தவறு செய்வது மனித இயல்பு அதிலிருந்து மீண்டு நற்செயல்களினால் நமது வாழ்வை நாம் மாற்றியமைக்க இக்காலம் அழைக்கிறது. அவரை நோக்கித் திரும்பி வரவும், மனம் மாறவும், அழைக்கப்படும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய எண்ணங்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் எண்ணங்களுக்கும் இடையே உள்ள தூரத்தை சிறிதளவாவது குறைக்க இந்த தவக்காலத்தை முழுமையாகப் பயன்படுத்துவோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, தூய ஆவியின் வல்லமையினாலும் தூண்டுதலினாலும், நான் எனது சிலுவையைச் சுமக்கவும், உமது வழிநடத்துதலைப் பின்பற்றவும் உதவுவீராக, ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
