கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

21 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 16ஆம் வாரம் – திங்கள்
விடுதலை பயணம 14: 5-18
மத்தேயு  12: 38-42


கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்! 

முதல் வாசகம்.
 
இன்றைய முதல் வாசகம், கடவுளின் தயவால் எகிப்தை விட்டு வெளியேறிய இஸ்ரயேலர்கள், எகிப்தியர்களால் துரத்தப்பட்டு,   செங்கடலின் வடக்குப் பகுதியை நெருங்கும்போது,  பார்வோனின் படைகள் நெருங்கி வரும்  ஆபத்தை இஸ்ரவேலர் உணர்ந்ததால், அவர்கள் மோசேக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் முணுமுணுத்ததை விவரிக்கிறது.

அவர்கள் தங்கள் உயிருக்கு அஞ்சுகிறார்கள். செல்லும் வழியில்  கொல்லப்படுவதை விட அடிமைகளாக எகிப்பில் வாழ்வதே நலம் என  விரும்புவார்கள். கடவுள் மீது நம்பிக்கை இழந்ததால் மோசே மக்களைக் கடிந்துகொள்கிறார்.

எகிப்திலிருந்து அவர்களை  அழைத்தவர் கடவுள் என்றும், இன்னும் அற்புதமான அடையாளங்கள் மற்றும் செயல்கள் மூலம் கடவுள் அவர்களை தொடர்ந்து வழியடத்துவார்  என்றும் அவர் அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.  பின்னர் கடவுள் மோசேக்கு தனது கோலை கடலின் மீது நீட்டுமாறு அறிவுறுத்துகிறார், கடல் பிரிந்து இஸ்ரயேலர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் கடக்க அனுமதிக்கிறது. அவர்கள் கடலின் மறுபக்கத்தை அடையும் போது,  பிரிக்கப்பட்ட  நீர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி பார்வோனின் அனைத்து வீரர்களையும்  மூழ்கடிக்கிறது.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும்  கடவுள்  இயேசுவோடு இருக்கிறார் என்பதற்கும், அவர் சொல்வதைச் செய்ய அவருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்கும் ஒரு அடையாளத்தைக் காட்டுமாறு கேடகிறார்கள்.  அவர்களின் நம்பிக்கையின்மையைக் கண்டு, ‘“இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர்’ என்றும்.  இயேசு  அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஒரே அடையாளம் யோனாவின் அடையாளமே என்கிறார். 
      யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார் என்பதே பெரிய அடையாளமாக இருக்கும் என்கிறார்.    
நிறைவாக, அக்காலத்தில் யோனாவின் போதனையால் நினிவே மக்கள் மனமாறினர். பெரும் அழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டனர். ஆதலால், தீர்ப்பு நாளில் நினிவே மக்கள்  எழுந்து, மனமாறா யூதர்களைக் கண்டனம் செய்வார்கள்.   இயேசுவோ யோனாவை விடப் பெரியவர் அல்லவா! அவரது போதனைக்கு யூதர்கள் செவியாத்திருக்க வேண்டும் என்கிறார். 

சிந்தனைக்கு.

இன்றைய பதிலுரைப் பாடலின் பல்லவியில் ‘ஆண்டவருக்குப் புகழ் பாடுவேன்; ஏனெனில், மாட்சியுடன் வெற்றி பெற்றார்’ என்று பதிலுரையாகப் பாடுகிறோம். மற்றும் தொடர்ந்து, ‘ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்’ என்று தியானிக்கிறோம்.

ஆம், ஆண்டவராகிய கடவுள் மகத்தானவர். அவரே நமது அடைக்கலப் பாறை என்றுணர்ந்து செயல்பட்டால் நாம் அவரது பாதுகாப்பில் வாழ்வோம் என்பது திண்ணம்.  "நாம் ஏன் கடவுளிடமிருந்து புதிய அடையாளங்களைத் தொடர்ந்து தேடுகிறோம்? ஆண்டவராகிய இயேசுவில் முழுமையாக நம்பிக்கை வைப்பதற்கு முன்பு கடவுள் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்றுதான்   எதிர்பார்க்கிறோம். 

இயேசுவிடம் அடையாளம் கேட்ட பரிசேயர்களை, மறைநூல் அறிஞர்களைக் குறிப்பிடு, ‘“இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர்’ என்றார் இயேசு. இயேசு அவர்களை ஒரு பொல்லாத மற்றும் விபச்சார தலைமுறை என்று அழைக்கிறார், அவர்களுக்கு முன் சான்றுகள் இருந்தபோதிலும் அவர்கள் நம்ப விரும்பாததை எடுத்துக்காட்டுகிறார். அவர்களின் இதயங்கள் கடினமடைந்துள்ளன என்றும், எந்த அற்புத அடையாளங்களும் அவர்களை மாற்றாது என்றும் அவர் வலியுறுத்துகிறார். அவர்கள் ஒரு காலத்தில் வேற்று தெய்வங்களை வழிபட்டு உண்மை கடவுளுக்குப் பிரமாணக்கமற்றவர்களாக வாழ்ந்தவர்கள். எனவே, ‘விபச்சார தலைமுறை’ என்கிறார்.

கடவுள் நம்மை எப்படி அன்பு செய்கிறார் என்பதை ஒவ்வொரு நாளும் பல வழிகளில் நமக்கு வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.   இன்றைய நற்செய்தியில், மறைநூல் அறிஞர்களும் பரிசேயரும், இயேசு மக்களிடையே செய்யும் அற்புதங்களைக் கண்டாலும், அவர் மெசியாவா என்று அவரிடம் ஒரு அடையாளம் வேண்டும் என்று   வலியுறுத்துகிறார்கள்.  முதல் வாசகத்தில், எகிப்திலிருந்து பாரவோனின் படைப்பலத்தை முடக்கி கடவுள் இஸ்ரயேலரைக்  காப்பாற்றி அழைத்து வந்தார். ஆனாலும் கடவுளைத் தூற்றினர். அவர்கள் மனமாறவல்லை. மீண்டும் மீண்டும் கடவுளுக்கு எதிராகவே செயல்பட்டனர்.

ஆண்டவர், இயேசு மனமாறி தங்களை பெரும் அழிவிலிருந்துத்துக் காத்துக் கொண்ட நினிவே மக்களை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். தீர்ப்பு நாளில் மனமாறாமல் துன்புறப்போகும் மக்களைப் பார்ந்து நினிவே மக்கள் எள்ளி நகையாடுவர் என்கிறார். ஆகவே, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் பழமொழிக்கேற்ப நமது வாழ்வைச் சீர் செய்ய முற்பட வேண்டும். மனமாற விருப்புவோருக்குக் கடவுளின் தயவு என்றும் கிட்டும். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். தினமும் ‘அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப் போற்றுவேன்’ என்று அவரது பாதுகாப்பை நாடுவோம்.

நம்மை அழைத்த ஆண்டவரை விடுத்து, வேற்று வழிபாடுகளில், சடங்கு சம்பரதாயங்களில் ஈடுபடுவோமெனில், அடுத்து நாமும் ‘விபச்சார தலைமுறை’ என்று அழைக்கப்படலாம். 


இறைவேண்டல்.

ஆண்டவரே, உம்மில் எனக்கு முழுமையான நம்பிக்கை இழந்த தருணங்களுக்காக   உம்மிடம் மன்னிப்பையும் மன அமைதியையும் நான் வேண்டுகிறேன். எனக்குத் தயைபுரிவீராக. ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452