இறையரசுப் பணிக்குப் பண்பட்ட உள்ளம் கொள்வோம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி
எபிரேயர் 10: 32-39
மாற்கு 4: 26-34
இறையரசுப் பணிக்குப் பண்பட்ட உள்ளம் கொள்வோம்!
முதல் வாசகம்.
எபிரேயருக்கு எழுதிய கடிதத்தின் ஆசிரியர் திருமுழுக்கின் வாயிலாகப் பெற்ற ஒளியின் காரணமாக ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பிட்டு எழுதுகிறார். புதிதாக திருமுழுக்குப் பெற்ற யூதக் கிறிஸ்தவர்கள் உலகின் ஒளியான இயேசுவால் அறிவொளி பெற்றனர். ஆகவே, திருமுழுக்குப் பெற்றவர்கள் கிறிஸ்துவின் ஒளியை எப்போதும் ஒளிர கொண்டிருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
தொடர்ந்து கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள், பெயர்அளவில் அல்லாமல் துன்பத் துயர காலத்திலும் கிறிஸ்துவுன் ஒளி அவர்களில் மங்காமல் ஒளிரச் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார். இதனை முன்னிட்டே, உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டு விடாதீர்கள் என்றும், இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு என்றும் நினைவூட்டுகிறார்.
நிறைவாக, இயேசுவின் இரண்டாம் வருகை அண்மையில் இருப்பதால், இயேசுவின் ஒளியை நம்பிக்கையோடு கொண்டிருப்பவர்கள் வாழ்வு பெறுவர் என்பதையும் வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு மீண்டும் உவமைகளைப் பயன்படுத்துகிறார். அவர் ‘நம்பிக்கை’ செயல்முறையை வளரும் செடியுடன் தொடர்புபடுத்தி மறையுரை ஆற்றுகிறார்.
ஒரு விவசாயி விதையை நட்டு வைக்க, விதையிலிருந்து ஒரு செடி வளரும். வளரும் செடியோ, பின்னர், அதிக விதைகளை உற்பத்தி செய்யும். பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு சென்று அறுவடை செய்வார். அது எப்படி நிகழ்கிறது என்பது மனித ஞானத்துக்கு எட்டாத ஒன்று. அவ்வாறே, மண்ணகத்தில் இறையாட்சி ஆகும்.
இறையாட்சியை சிறிய கடுகு விதைக்கு ஒப்பிட்டு பேசுகிறார், நடப்பட்ட விதை நாளடைவில் வளர்ந்து பெரிய மரமானதும், அது பறவைகளுக்கு உணவையும் பாதுகாப்பையும் அளிக்கிறது.
விண்ணரசு கண்ணுக்குப் புலப்படாத ஒன்று. அதை மனித வார்த்தைகளில் எளிதில் விளக்கிட முடியாது. எனவேதான் மனிதன் அறிந்த பொருளைக்கொண்டு அறிய முடியாத விண்ணரிசின் தன்மையை இயேசு விளக்குகிறார். இங்கே இறுதிகால நிகழ்வையும் இயேசு தொட்டுப் பேசுகிறார்.
சிந்தனைக்கு.
விதைக்கப்பட்ட விதை எப்படி வியப்புக்குரியதாக, நம் அறிவுக்குப் புலப்படாத வகையில் வளர்ந்து மரமாகி பலன் தருகிறதோ அவ்வாறு இறையரசும் இருக்கும் என்ற மறைபொருளை ஆண்டவர் எடுத்துரைக்கிறார்.
இயேசு விதைக்கத் தொடங்கிய இறையரசுக்கான நற்செய்தி உலகிற்குப் புதியது. கடுகு விதைப்போன்று மிகச் சிறியது. அது சிறுக சிறுக வளர்ச்சியுற்று பெரிதொரு மரமாக (அரசாக) தோன்றும். அப்போது, இறுதி காலம் நிகழும் எனும் படிப்பினையைத் தருகிறார் ஆண்டவர். இதையே, ‘உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் ,அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று உரத்த குரலில் கத்தினார்’ (தி.வெ. 14:15) என்று அறிய வருகிறோம்.
இறையரசின் வருகையையொட்டி அவநம்பிகைக்கொள்ள தேவையில்லை. நம்பிக்கை என்பது ஒரு முறை அனுபவமல்ல. இது தொடர்ந்து அதிகரித்து வரும் செயல்முறையாகும். இந்த மண்ணக வாழ்வுக்கு மட்டுமல்ல, விண்ணக வாழ்விற்கும் இறையரசு மீதான நம்பிக்கை இன்றியமையாதது. இங்கே இறையரசை திருஅவைக்கு ஒப்பிடலாம்.
அது நம்மில் கடுகு விதைப்போல் நாளும் வளர்ச்சியுற்று வளர்கிறது. நம்மில் அதன் வளர்ச்சி வெளிப்பட வேண்டும். ஏனெனில், இறையாட்சியே இயேசுவுன் இலட்சியமும் உலக மாந்தரின் நிறைவாழ்வுக்குரியதாக உள்ளது.
சுருங்கச் சொன்னால் கடுகு விதை மரமாகி இவ்வுலகில் பலன் தருவதுபோல், நம்மில் விதைக்கப்படும் இறையரசும் இம்மையில், இந்த மண்ணில் நமக்குப் பலன் தரக்கூடியது. ஆனால், நல்ல சிந்தனை, சொல், செயல் அற்ற மனம் கொண்டோரில் அதன் வளர்ச்சி தடைபடும்.
வெறும் பன்னிரு சீடர்களைக் கொண்டுதான் இயேசு இறையரசுப் பணியைத் தொடக்கி வைத்தார். இன்று இவ்வுலகம் வியக்கும் மரமாக காட்சி தருகிறது.
முதல் வாசகத்தில், “உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு” என்று கூறப்பட்டுள்ளது. ஆம், மனந்தளராமல் செயல்பட்டால் சிறியவற்றிலிருந்து மிகப்பெரியவற்றை உருவாக்கும் வல்லமை நமக்குண்டு என்பதை ஏற்று செயல்படுவோம்.
இறைவேண்டல்.
இறையரசுக்கான விதையை எமதுள்ளத்தில் விதைத்த ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் நீர் விரும்பும் இறையாட்சி பணியாளனாகத் திகழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452