இருமணம் கலந்ததே திருணம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 7ஆம் வாரம் –வெள்ளி
சீராக். 6: 5-17
மாற்கு 10: 1-12


இருமணம் கலந்ததே திருணம்!
 
முதல் வாசகம்.

முதல் வாசகத்தில் தூய நட்பின் அருமை பெருமைகளைக் கேட்கிறோம். ‘நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை;  நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்’ என்ற முத்தான வரிகளை நமக்குத் தந்துள்ளார் ஆண்டவர்.  உண்மை நண்பர்களுக்கும் தீய நணபர்களுக்குமிடையே காணப்படும் வேறுபாடுகளை இந்நூலின் ஆசிரியர் தெளிவாக விவரிக்கிறார். 
அவர், பகிரும் கருத்துக்களில் ‘நீ நல்ல நிலையில் இருக்கும்போது, அவர்கள் உன் உயிருக்கு உயிரான நண்பர்களாய் இருப்பார்கள்;  நீ தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் அவர்கள் மாறுவார்கள்; உன் முகத்தில் விழிக்க மாட்டார்கள்’ எனும் படிப்பினை தீய நண்பர்களின் பச்சோந்தி தனத்தை வெளிப்படுத்துகிறது.
நிறைவாக, அவர், நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள் என்று போற்றுகிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், விவாகரத்து மூலம் திருமண உறவை முறித்துக் கொள்வதற்கான அனுமதியைப் பற்றி பரிசேயர்  இயேசுவைக்கேட்ட  போது, விவாகரத்து பற்றி மறைநூல் என்ன சொல்கிறது என்று இயேசு அவர்களைக் கேட்கிறார்.   பரிசேயர் இ.ச. 24: 1-ல் மோசே விவாகரத்து செய்ய அனுமதிப்பதைப் பற்றி குறிப்பிடுகிறார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார் என்று பதில் அளிக்கிறார்.  இதற்கு, இயேசு தொடக்க நூலின்  முதல்  சில அதிகாரங்களை மேற்கோளாகக் குறிப்பிடுகிறார்.  அங்கு கடவுள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடையே திருமண உறவை ஏற்படுத்தினார். அதாவது, கடவுளால் நிறுவப்பட்ட உறவில்  கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள், கடவுள் இணைத்ததை யாரும் பிரிக்கக்கூடாது’ என்று கூறுப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். 

சிந்தனைக்கு.

கடவுள் அன்பாய் இருக்கிறார் (1 யோவான் 4:8). ஆதே வேளையில் தொ.நூ. 1:26-ல்,  கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்’ என்று பன்மையில் கூறயதை வசிக்கிறோம். ஆகவே, கடவுள் ஒரு குடும்பமாக உள்ளார் என்பது  வெள்ளிடைமலை. 
கடவுளின் தந்தை. மகன், தூய ஆவியார்’ எனும் குடும்பத்தில் நிலவும் பிளவுப்படாத தூய அன்பை மனுக்குலத்தோடு பகிரவும் அந்த அன்பின்  பிரமாணிக்கத்தை மனுக்குலத்திலும் எதிர்பார்த்து கணவன்-மனைவி திருமண உறவை ஆசீர்வதித்தார். ஆகவே, மூவொரு கடவுள் குடும்பத்தில் நிலவும் அன்பு, கணவன் மனவி உறவிலும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பது கடவுளின் திட்டம். 
கடவுளால் இணைக்கப்பட்ட ஆதாமும் ஏவாளும் பின்னர் பிரிந்து வாழ்ந்ததாக விவிலியத்தில்  குறிப்புகள் இல்லை. அவர்களின் திருமண உறவின் கனியாக மூன்று பிள்ளைகளை ஈன்றனர். 
இதையே இயேசு பரிசேயர்களுக்கு எடுத்துக்காட்டாக விவரிக்கிறார். மோசேயின் சட்டம் தற்காலிகமாகக் கொடுக்கப்பட்ட ஒன்று. அது இஸ்ரயேலரின் படிவாதப் போக்கிற்காக  மோசே வழங்கினார் என்று இயேசு மேலும் விவரிக்கிறார்.
கத்தோலிக்க திருமணத்தின் அம்சங்கள் பற்றி சிந்திக்கும்போது,  அது ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவியாக இணைக்கிறது.   இந்த இணைப்பு இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்" என்ற வாக்குறுதியில் உறுதிபெறுகிறது. இது ஓர் ஒப்பந்தமாகாது, மாறாக, ஓர் உடன்படிக்கை.  ஒப்பந்தம் மீறப்படலாம், ஆனால், உடன்படிக்கையில் மீறலுக்கு இயமில்லை. இந்த உடன்படிக்கையானது, அவர்கள் ஒருவர் ஒருவரை இறுதிவரை அன்பு செய்யவும், தம் பிள்ளைகளைக் கிறிஸ்துவ நெறியில் வளர்க்கவும், இல்லத் திருஅவையை  உருவாக்கவும் இறையருளை அளிக்கிறது.
ஆகவே, மணமுறிவு என்பது கடவுளின் திட்டத்தில் இல்லாத ஒன்று. மரணம் மட்டுமே இருவரையும் பிரிக்கவல்லது என்பதை திருஅவை தொடக்கக் காலந்தொட்டு போதித்தும் சட்டப்பூர்வமாகக் கடைப் பிடித்தும் வருகிறது. 
ஆகவே, ஆண்டவர் இயேசு போதித்த உண்மையை நாமும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இங்கிலாந்தின் எட்டாம் ஹென்ரி அரசர் தன் முதல் மனைவியை விலக்கிவிட்டு மறுமணம் செய்ய திட்டமிட்டார். அவரது திட்டத்திற்கு வளைந்துகொடுக்காத  திருஅவைதான் கத்தோலிக்கத் திருஅவை. 
ஆகவே, திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்தை நினைவில் நிறுத்துவோம். கணவனும் மனைவியும் பிரமாணிக்கமான நண்பர்களாக வாழ வேண்டும். முதல் வாசகத்தில் ‘நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள் என்றுள்ளதை மனதார ஏற்று, கணவன் குடும்பதில் தலையாகவும், மனைவி குடும்பத்தின் இதயமாகவும்  இணை பிரியா வாழ்வுக்கு தங்களை அர்பப்பணித்து வாழ்வதே சிறந்த இல்லறம். 

இறைவேண்டல்.

ஆண்டவரே, நான் உமது  முன்மாதிரியைப் பின்பற்றி, எனது திருமண வாக்குறுதி   பிரமாணிக்கத்தை  என் வாழ்வில் இறுதிவரை கடைப்பிடிக்க  எனக்குத்  திடமளிப்பீராக. ஆமென.


  
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452