கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான முயற்சிகளை ஏற்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 7ஆம் வாரம் –புதன்
சீராக். 4: 11-19
மாற்கு 9: 38-40
கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான முயற்சிகளை ஏற்போம்!
முதல் வாசகம்.
கடவுளின் ஞானத்தைப் பின்பற்றுபவரின் பண்புகள் பற்றிய விளக்கத்தை இன்றைய வாசகம் விவரிக்கிறது. மக்கள் ஞானத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும்போது, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அன்பை, மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு வாழ்க்கை, பதவி, பெருமை, தெய்வீக ஆசீர்வாதம், அன்பு போன்றவை கிட்டும். என்கிறார் நூலின் ஆசிரியர்.
தொடர்ந்து, ஞானத்தை விரும்பி பற்றிக்கொள்வோர், மாட்சியை உரிமையாக்கிக் கொள்வதோடு அவர்களை ஆண்டவர் மாட்சியுறச் செய்வார் என்கிறார். மேலும், ஞானத்தை அன்பு செய்வோர் ஆண்டவரை அன்பு செய்கிறார்கள் என்ற மேலான படிப்பினையைம் தருகிறார்.
நிறைவாக, ஞானத்தை நம்புவோரும் அவர்களுடைய சந்ததியும் கூட அதனை உடைமையாக்கிக் கொள்வர் என்று ஞானத்தைக் குறித்து வலியுறுத்திக் கூறுகிறார் ஆசிரியர்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசுவின் பெயரில் அற்புதங்களைச் செய்யும் நபர்களை திருத்தூதர் யோவான் தடுக்க முயற்சித்ததாக இயேசுவிடம் கூறுகிறார். இயேசு ‘அவர்கள் என் சார்பாக செயல்படுவதால் அத்தகையோரைத் தடுக்க வேண்டாம்’ என்கிறார்.
இயேசுவின் பெயரால் நற்செய்தியை அறிவிப்பவர்கள், பணி செய்பவர்கள் சக பணியாளர்களாக்க் கருதப்பட வேண்டும் என்று யோவானுக்கும் பிற சீடர்களுக்கும் இயேசு விளக்கமளிக்கிறார்.
சிந்தனைக்கு.
இயேசு யோவானுக்குச் சொன்ன வார்த்தைகள் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டியவை. யோவானோ தம்மைத் தவிர (சீடர்கள்) வேறு யாரும் இறைவாக்கு உரைக்கக் கூடாது என்ற குறுகிய வட்டத்திலே இருந்திருந்தார். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அவருடைய மனநிலையைச் சரிசெய்கிறார். அதாவது இறைவாக்கு உரைப்பதை – நல்லது செய்வதை – யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவருக்கு எடுத்துக் கூறுகின்றார்.
அடுத்ததாக நல்லது செய்கின்ற அனைவரையும் நாம் வளர்த்தெடுக்கவேண்டும். இவர் என் இனத்தைச் சாராதவர், இவருக்கு என்ன தெரியும், அல்லது இவர் செய்வது நன்றாக இல்லை என்று புறக்கணியாமல், எல்லாரிலும் உள்ள நல்ல பண்புகளை இனங்கண்டு கொண்டு அவற்றைப் பாராட்டக் கூடிய நல்ல மனப்பான்மையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். காரணம் நம்முடைய கடவுள் அனைவரும் மீட்படைய விரும்புகிறவர் (1 திமொ 2:4).
அதேவேளையில், என் சார்பாக நல்லது செய்வோரை அல்லது நற்செய்தி அறிவிப்போரை தடுக்க வேண்டாம் என்றுதான் ஆண்டவர் கூறினார். அவர், எல்லாம் ஒன்றுதான் நீங்களும் அவர்களோடு இணந்துகொள்ளுங்கள் என்று கூறவில்லை. இக்காலத்தில், பல பிரிந்த சபையினர் பலவாறு மிகவும் கவர்ச்சியாகவும் போதிக்கின்றனர். எனவே, எல்லாம் ஒன்றுதான் என்று நாம் அங்கே ஓடிப்போவது தவறு. இயேசுவின் கனவு, எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக’ (யோவான் 17:21) என்பாகும்.
கொரிந்துவிலும் இதர நகர்களிலும் முளைத்த போலி போதகர்களைப் பவுல் அடிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் வார்த்தைகளில், பித்தலாட்டத்தில் மயங்கிவிடாமல் இருக்க கடிதங்கள் வாயிலாகவும் அறிவுறுத்தினார்.
முதல் வாசகத்தில் கூறப்பட்டதைப்போல, கடவுளின் ஞானம் நம்மிலும் பொழியப்படிருக்கிறது. ஆகவே, புனித பவுல் ‘சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே; நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்’ (1 கொரி 1:10) என்று அறிவுறுத்தியதை மனதில் கொள்ள வேண்டும். கடவுள் அருளிய ஞானத்தால் நல்லது கெட்டதைத் தெளிந்து தேர்வுச் செய்ய வேண்டும். ‘எல்லாம் ஒன்றுதான்’ என்பது அறிவுடமை ஆகாது.
கடவுள் திருஅவை வழியாக நமக்கு வழங்கிய வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி நாம் உண்மையான ஞானத்துடன் செயல்படுகிறோம் என்பதை உறுதியாக ஏற்க வேண்டும். ஆண்டவரின் சார்பாக பணி செய்வோரை மதிப்போம், ஆனால் திருஅவையில் பயணிப்போம்.
இறைவேண்டல்.
அண்டவரே, உமக்கு சார்பாக பணி செய்வோரை மதிக்கும் மனப்பான்மையை எனக்குத் தந்தருளும். ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
