இறைவன் நம்மிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கிறார்! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil
திருவருகைக் காலம் முதல் வெள்ளி மறையுரை 05.12.2025
மு.வா: எசா: 29:17-24
ப.பா: திபா 118:1, 8-9, 19-21,25-27
ந.வா: மத்: 9:27-31
இறைவன் நம்மிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கிறார்!
நம் அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கையில் எத்தனையோ மறையுரைகளையும் இறைச்செய்தியையும் கேட்டிருப்போம். ஆனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கை வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய அழைக்கப்படுகிறோம். ஏனெனில் நாமம் கொண்டாடுகின்ற ஒவ்வொரு கொண்டாட்டமும் கேட்கின்ற ஒவ்வொரு மறையுரையும் நம்மை இறை நம்பிக்கை நிறைந்தவர்களாக வாழ அழைப்பு விடுகிறது.
இன்றைய நற்செய்தியில் பார்வையற்ற ஒருவர் பார்வை பெற வேண்டும் என்பதற்காக இயேசுவிடம் நம்பிக்கையோடு கத்திக் கொண்டே தன்னைக் குணமாக்குமாறு கேட்கிறார். இயேசுவும் "நான் இதை செய்ய முடியும் என நம்புகிறீர்களா? " என்ற கேள்வியை கேட்கிறார். காரணம் இறைவனின் குணமளிக்கும் வல்லமையோடு நமக்கும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே நலம் கிடைக்கும். இயேசு நம்மை இறைநம்பிக்கை நிறைந்தவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார்.
வார்த்தையாக இருந்த இறைவன் மனிதனாக பிறந்ததற்கு காரணம் நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கை நிறைந்தவர்களாக வாழ்ந்து இறை மகிமைக்கும் இறை திருவுளத்திற்கும் சாட்சியம் பகிர வேண்டும் என்பதற்காகவே. நம் கொண்டாட போகிற கிறிஸ்து பிறப்பு விழாவும் இயேசுவின் இரண்டாம் வருகையும் நம்மை இறைநம்பிக்கை நிறைந்தவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறது.
எனவே இறை நம்பிக்கை உள்ளவர்களாக வாழ தடையாய் உள்ள தேவையில்லாத பாவங்கள், மூடநம்பிக்கை, பலவீனங்கள், போட்டி, பொறாமைகள் எல்லாவற்றையும் அகற்றி விட்டு அதோடுகூட நமது நம்பிக்கையில்லாத்தன்மையையும் விலக்கிவிட்டு சரியான பாதையில் பயணிக்க தூய ஆவியாரின் வழி நடத்துதலுக்காக ஜெபிப்போம். தூய ஆவியாரின் தூண்டுதலின் படி வாழ்ந்து இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கும் இறை நம்பிக்கைக்கும் சான்று பகர்வோம். இறை நம்பிக்கை நம் அகக்கண்களை திறந்து அனைத்திலும் நம்பிக்கையோடு இயேசுவைக்காண வழிவகுக்கும்.
இறைவேண்டல்
அன்பான இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் எந்நாளும் நம்பிக்கை வாழ்விற்கு சான்று பகர அருள் தாரும். ஆமென்.