நற்செய்தி அறிவிப்பு நமக்கான அழைப்பு!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பாஸ்கா எண்கிழமை –சனி
தி.பணிகள் 4: 13-21
மாற்கு 16: 9-15
நற்செய்தி அறிவிப்பு நமக்கான அழைப்பு!
முதல் வாசகம்.
நேற்றைய வாசகத்தில் புனித பேதுருவின் துணிச்சலான சாட்சிய அறிக்கையை மறைநூல் அறிஞர்களும் தலைமை குருக்களும் ஏற்க முடியாமல் இருவரையும் எச்சரித்து அனுப்பினர். இன்று, பேதுரு மற்றும் யோவானை இப்படியே விட்டுவிட்டால் மக்கள் மத்தியில் அவர்களுக்கான செல்வாக்கு குறைந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். திருத்தூதர்களைத் தண்டித்தால் மக்கள் வருத்தப்படுவார்கள், ஏனென்றால் திருத்தூதர்களின் செயல்களால் பலர் இயேசுவின் திருப்பெயரில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஆகவே, வேறு வழியின்றி, திருத்தூதர்களை அழைத்து, இனிமேல் "அந்தப் பெயரை" (இயேசுவின் பெயரை) குறிப்பிடக் கூடாது என்று வலுவான எச்சரிக்கை கொடுத்து விடுவித்தனர் என்று லூக்கா குறிப்பிட்டுள்ளார்.
நற்செய்தி.
நற்செய்தியில், வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார் என்று மாற்கு விவரிக்கிறார். இந்த மகதலா மரியாவிடமிருந்துதான் இயேசு ஒருமுறை ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று சீடர்களிடம் இதை அறிவித்தார். ஆனால், அவர் உயிரோடு இருக்கிறார் என்ற மரியாவின் செய்தியை அவர்கள் நம்பவில்லை.
தொடர்ந்து, அச்சீடர்களில் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார்.இவர்களது சாட்சியத்தையும் மற்ற சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றி, தம்மை வெளிப்படுத்தி, அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்து, இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்றுரைத்தார் என மாற்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில், ‘அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்’ என்று மாற்கு கூறியதை நாம் கவனத்தில் கொள்வது இன்றியமையாதது.
எனவே, நம்பிக்கையைப் பற்றி நாம் ஆழச் சிந்திப்பது நமக்கான இன்றைய அழைப்பாக உள்ளது.
இயேசு மேலும் தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மறையுண்மையை புரிந்துகொள்ளவும் நமக்கு நம்பிக்கை எனும் கொடையை அளிக்கிறார். எனவே, அவரில் பற்றுறுதி கொண்டு நம்பிக்கை என்பதன் பொருள் அறிந்து வாழ்வது அவசியமாக உள்ளது.
உயிர்த்த இயேசு, சீடர்களுக்கு அவரது உயிர்ப்பில் நம்மிக்கை ஊட்டி, அவர்களுக்கு ஒரு கட்டளையைத் தருகின்றார்.. அந்தக் கட்டளை நாம் அறியாவிடில், உணராவிடில் நமது கிறிஸ்தவ வாழ்வு பொருளற்றது என்றே கூற வேண்டும். “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்பதே அக்கட்டளை. இக்கட்டளையை நன்கு உணர்ந்து அதன்படி வாழ்ந்து மரித்த திருத்தூதர்களின் ஒருவர் புனித பவுல் அடிகள். அவர், ‘நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு’ (1கொரி 9: 16) என்றார். ஆகையால், நாம் நற்செய்தி அறிவிப்பதை நம்முடைய கடமை என உணர்ந்து, நற்செய்தியை அறிவிக்க வேண்டும். இது நம்மீது சுமத்தப்பட்ட பணி. இப்பணியிலிருந்து விலகி ஓட முடியாது.
நறசெய்தி அறிவிப்புக்கு முதன்மையானது நமது சொந்த சாட்சிய ஆன்மீக வாழ்வு. நமது ஆனமீக சாட்சியமானது ஆலயத்தில், வழிபாட்டில் முடங்கிக் கிடப்பதல்ல. பலருக்கு சொல்லாலும் செயலாலும் இயேசுவை வெளிப்படுத்துவது. இது நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட அழைப்பு.
இறைவேண்டல்.
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்க என்னைப் பணித்த ஆண்டவரே, எனது குடும்பம், எனது சுற்றம் என்பதுதான் எனது உலகம் என்பதை ஏற்று, இங்கே உம்மை நான் அறிக்கையிடும் சீடராக வாழ அருள்புரிவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
