அன்னை மரியா தியாகத்தின் தாய்| ஆர்.கே. சாமி | VeritasTamil

திருப்பாடுகளின் வெள்ளி
எசாயா 52: 13- 53: 12
எபிரேயர்  4: 14-16; 5: 7-9
யோவான்  18: 1- 19: 42

அன்னை மரியா தியாகத்தின் தாய்! 
 
முதல் வாசகம்.

நமது முதல் வாசகம் ஏசாயாவின் நான்காவது துன்புறும் ஊழியன் பற்றிய பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. துன்புறும் ஊழியன் அனைவராலும் நிராகரிக்கப்பட்டு, தாக்கப்பட்டு, துன்பப்பட்டு, குத்தப்பட்டு, மற்றவர்களின் பாவத்தை (பலி ஆடு போல) சுமந்து, கடுமையான, கொடுமையான துன்புறுத்தல்களுக்கிடையில்  அமைதியாக இருப்பவராகவும் நிற்பதை வாசகம் விவரிக்கறது. 
 இந்த ஊழியன் தான் ஒடுக்கப்பட்டு, கண்டனம் செய்யப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்டான், இவை அனைத்தும் அவர் எந்த தவறும் செய்யாவிட்டாலும் கூட. மற்றவர்களின் பாவங்களுக்காக,   மக்களின் குற்றங்களுக்கு மன்னிப்பு பெறுவதற்காக அவர் தன்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார்.  

இரண்டாம் வாசகம்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் இன்றைய வாசகப்பகுதி,  இயேசுவை தலைமை குருவாக சித்தரிக்கிறது.  அவர் கடவுளாக இருந்தாலும், அவர் உண்மையிலேயே மனிதராகவும் இருக்கிறார். அந்த வகையில் நாம் அவருடனும்   அவர் நம்முடன் ஒன்றிக்கிறோம். அவர் மனிதராகவும் இருப்பதால் நாம் எதிர்கொள்ளும்  வாழ்க்கை பிரச்சினைகள், துன்ப துயரங்கள், வேதனைகள், ஏமாற்றங்கள், தோல்விகள், வெற்றிகள்,  உடல் மற்றும் உள்ள ரீதியான பலவீனங்கள் யாவற்றையும் அறிந்தவராவார்.

அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார் என்று நாம் அறிவுறுத்தப்படுகிறோம்.

நற்செய்தி.

இன்றைய  ஆண்டவரின் பாடுகளைப் பற்றிய பதிவு புனித யோவானின் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டது. இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்று  அங்கே இருந்த தோட்டத்திற்குப் போனார். இயேசு தாம் மாட்சியுறும் வேளையிலும் கூட ஒரு பணியாளராகவே இருக்க விரும்புகிறார். தன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்கு அவர் தன்னையே கையளிக்கிறார். அவர் இரண்டு முறை " “நான்தான்” " என்ற வார்த்தைகளை தனது பணிக்கான உறுதிப்பாட்டின் அடையாளமாக மட்டுமல்லாமல், அவர் " “நான்தான்” என்பதில் அவர் என்றுமுள கடவுளாக (“இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே”விப 3:14)   என்பதை நினைவூட்டுவதற்காகவும் பதிலளிக்கிறார். அவர் தம்மைப் பின்பற்றுபவர்களின் பாதுகாப்பிற்காக மன்றாடுகிறார். அவர் தனது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதால்  உடனிருந்த சீடர்களில் யாரும் காயப்படுவதை அவர் விரும்பவில்லை.

இயேசு, தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களால்  அழைத்துச் செல்லப்படுகையில், சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் பின்தொடர்கிறார்கள். இயேசு விசாரிக்கப்பட்டு கண்டனம் செய்யப்படுகிறார்.  இயேசு தம்மைக் குற்றம் சாட்டியவர்களை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் எதிர்கொள்கிறார், அதே நேரத்தில் பேதுரு தனது தலைவருடனான தனது உறவை மூன்றுமுறை  மறுக்கிறார்.

இயேசுவை சிலுவையில் அறைய உரோமர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சிலுவை மரணத்தீர்ப்பைப் பெறுகிறார். கல்வாரியில் முடிவு வருகிறது, இயேசு அனைத்தையும் விட்டுக்கொடுக்கிறார். தம்முடைய தந்தையுடனான முழு உறவுக்கும், தம்மைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையே புதிதாக நிறுவப்பட்ட உறவுக்கும் அடையாளமாக அவர் தம்முடைய உயிரைத் தாமாகக் கையளிக்கிறார். 

இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு, அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு  மற்றும் நிக்கதேம் ஆகியோரால் அவசரமாக அடக்கம் செய்யப்படும் சடங்கு நிறைவேற்றப்படுகிறது. சூரியன் மறைவதற்கு முன்பு அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார். மீண்டும் இருள் உலகைக் கைப்பற்றுகிறது.

சிந்தனைக்கு.

ஆங்கிலத்தில் இன்றைய வெள்ளிக்கிழமையானது ‘Good Friday’ என்று அழைக்கப்படுகிறது, இந்த வெள்ளிக்கிழமை நல்ல வெள்ளி.  ஏனென்றால் நமது மீட்புக்காக  இயேசு உயிர் துறந்த நாள்.  விண்ணக வாசல்  நமக்காகத் திறக்கப்படவுள்ளது.   நமது முதல் பெற்றோரின் வீழ்ச்சி இன்று முறியடிக்கப்பட்டது. எனவே, இது நமது மகிழ்சிக்குரிய நாள்.  பாஸ்கா புகழுரையில் சொல்வது போல் முதல் பெற்றோரின் வீழ்ச்சி ஓர் அற்புதமான மீட்பர் மண்ணக மக்களாகிய நம்மைத் தேடி வர  காரணமாக அமைந்தது.

இன்றைய திருச்சடங்கில் சிலுவையைப் பார்க்கும்போது, அது நமக்கு எடுத்துரைக்கும் பொருள் என்ன என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.  இயேசுவின் சிலுவை மரணத்தைக் கேட்டு அழவோ, ஒப்பாரி வைக்கவோ நாம் அழைக்கப்படவில்லை. இயேசுவின் மரணம் மனுக்குலத்தின் வரலாற்றிலே ஒரு மிகப்பெரிய நிகழ்வு.  ஏனென்றால் அவருடைய மரணத்தினாலேதான்  நாம் மீட்கப்பட முடியும் என்பது கடவுளின் திட்டம்.  பாவம் ஒன்று மட்டுமே நம்மையும் கடவுளையும் பிரிக்கிறது.   அதனால், பாவம் மிகவும் அபாயமானது.  “பாவத்தின் சம்பளம் மரணம்” (உரோ 6:23) என்று பவுல் அடிகள் கூறுகிறார்.

"நமது மனாற்றத்தின் மூலமும், சிலுவையின் அடியில் அன்னை மரியாவோடு நிற்பதன்  மூலமும், இன்றைய புனித வெள்ளியை நமது பாவத்தில் நாம் மரிக்கும் நாளாக  மாற்றுவோம். புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி  என்பது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு அல்ல.   இயேசு நம்மீது காட்டிய தனிப்பட்ட அன்பை நன்றியுடன் நினைவுகூர்ந்து, இந்த அன்பிற்கு பதிலளிக்கும் விதமாக, அடுத்திருப்பவர் மீது, குறிப்பாக 'ஏழை எளியோர், துன்புறுவோர், ஒடுக்கப்பட்டோர், வதைக்கப்பட்டோர், உரிமையிழந்தோர்  மீது   பரிவன்பு காட்டி, ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வோர்க்கு  இன்றும் தினமும் புனித வெள்ளி தான். 

இன்றைய நாளில், “எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்” (லூக்கா 23:28) என்ற இயேசுவின் குரல் நமது செவிகளில் விழ வேண்டும்.  கடவுளின் அன்பின் கொடைக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம், மேலும் ஆண்டவரின் இந்த அளவற்ற அன்பின்  பலன்களை நம் வாழ்நாள் முழுவதும் வாழத் தீர்மானிப்போம்.


இறைவேண்டல்.

“எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்த ஆண்டவரே, உமது மண்ணக மரணத்திற்கு எனது பாவமும் துணைபோனது என்று எண்ணி வருந்துகிறேன். என்னை மீட்டு வாழ்வளிப்பீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452