தாழ்ச்சி-நற்கருணையின் படிப்பினை| ஆர்.கே. சாமி | VeritasTamil

புனித வாரம் – வியாழன்
ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி
விடுதலைப் பயணம் 12: 1-8, 11-14
1 கொரி 11: 23-26
யோவான் 13: 1-15
தாழ்ச்சி-நற்கருணையின் படிப்பினை
முதல் வாசகம்.
இன்று நாம் ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலியைக் கொண்டாடுகிறோம். இன்றைய நாள் பெரிய வியாழன் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
முதல் வாசகம் நாம் கொண்டாடும் பாஸ்கா பெருவிழாவின் தோற்றத்தை விவரிக்கிறது. இது இஸ்ரயேலருக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையும் புதிய வாழ்க்கையின் தொடக்கத்தையும் தந்த நிகழ்வு. அவர்கள் எகிப்பிலிருந்து விடுதலையை நோக்கிபு புறப்படவேண்டிய இரவு, பழுதற்ற ஓர் ஆட்டுக்குட்டியைக் கொன்று அதன் இரத்தத்தை வீடுகளின் கதவு நிலைகளில் அல்லது சட்டங்களில் பூச வேண்டும். அதன் இறைச்சியை நெருப்பில் வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும் என்று கட்டளையிடுகிறார் கடவுள்.
அன்று இரவு இரத்தம் பூசபட்ட அவர்களின் வீடுகளைக கடந்து சென்று, மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் கொல்லப்போவதாக கடவுள் கூறுகிறார். இவ்வாறு எகிப்தில் இஸ்ரயேலர் மட்டும் மரணத்திலிருந்து காப்பாற்றப்படுகின்றனர். அதுவே, ஆண்டவரின் முதல் பாஸ்கா அல்லது கடந்து செல்லுதல் ஆகும்.
இது கடவுள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடன் செய்யும் இரத்த உடன்படிக்கை உறவுவாகவும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலம், மக்கள் மரணம் மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதையும் அறிகிறோம். அன்று இரவே, இஸ்ரயேலர் கடவுளால் அவரது மக்களாக ஒரு புதிய வாழ்க்கைக்கு வழிநடத்தப்படுகிறார்கள்.
இரண்டாம் வாசகம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொரிந்து நகர திருஅவையில் விளங்கிய பிரிவினைகளையும், நற்கருணைக் கொண்டாட்டத்தில் அக்காலத்தில் நிலவிய குளறுபடிகளையும், குறைபாடுகளையும் பவுல் எடுத்துரைத்துக் கண்டிக்கிறார். இயேசு இராவுணவின் போது, மேல்மாடியில் நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வை நினைவூட்டி, நற்கருணை கொண்டாட்டத்தில் இயேசுவே மையமாக இருக்க வேண்டும் என்பதை விவரிக்கின்றார்.
நற்கருணை கொண்டாட்டத்தில், அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை கிறிஸ்தவர் 'இறுதிவரை' அறிவிக்கிறார்கள் என்றும், இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மறையுண்மைகள் என்றும் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவராகிய இயேசு, தம்மையே தாழ்த்தி, தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி முத்தி செய்வதோடு, நற்கருணையை ஏற்படுத்தி தம்மையே என்றுமுள தலைமை குருவாகத் தன்னை வெளிப்படுத்தி, திருஅவைக்குக் குருத்துவத்தை தம் திருத்தூதர்களை குருக்களாக நியமித்து ‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ என்று அவர்களுக்குப் பணிக்கிறார்.
தொடர்ந்து, தம்மையே தாழ்த்தி அவர்களின் பாதங்களைக் கழுவி, தம் திருத்தூதர்களையும் தூய்மைப்படுத்தி, குருத்துவத்தை மேன்மைப்படுத்துகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய முதல் வாசகத்தையும் நற்செய்தியையும் ஒப்பிடும்போது, முதல் பாஸ்கா எகிப்தில் பூட்டிய அறைக்குள், இருளில் நடந்தேறியது. புதிய பாஸ்காவோ, மேல்மாடியில், மெல்கிசெதேக்கின் வழிவந்த தலைமை குருவாக இயேசுவால், ஒளியில் நிகழ்கிறது.
இயேசு தம்மையே , ‘வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது’ என்றுரைத்ததை யோவான் நற்செய்தியில் (6:35) எடுத்துரைத்ததைக் கேட்டுள்ளோம். தம்மைப் பின்பற்றுபவர்கள் தம் உடலை உண்டு இரத்தத்தைப் பருக வேண்டியதன் அவசியத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அன்று அதன் பொருள் உடனிருந்த சீடர்களுக்குப் புரியவில்லை. இராவுணவின்போது அதன் பொருள் அவர்களுக்குப் புரிந்தது.
அடுத்து, அன்று தம் திருத்தூதர்களின் பாதங்களை கழுவி அவரது தாழ்ச்சியை நமக்கு முன்மாதிரியாக வெளிப்படுத்தினார். ஆகவேதான், இன்றிரவு நமது அனைத்து ஆலயங்களிலும் நற்கருணை நமது ஒற்றுமை உணவாக மட்டும் அல்லாமல், இயேசுவின் செயலை – பாதங்கள் கழுவுதலை - மீண்டும் செயல்படுத்துகின்றன.
நாமும் பாதம் கழுவுதலைச் சடங்கு என்று மட்டும் எண்ணாமல், இயேசுவைப் போல தாழ்ச்சியை அணிந்து கொள்வோம். தாழ்ச்சி உடையோர் ஒரு போதும் வீழ்ச்சி அடைவதில்லை என்பதை உணர்ந்து உலகம் தழைக்க, இறைவனை இப்பலியில் மன்றாடுவோம்.
கத்தோலிக்க பாரம்பரியத்தின்படி, இன்றிரவு நற்கருணை திருப்பீடத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்திற்குத் திருபவனியாக எடுத்துச் செல்லப்படுவதோடு முடிவடைகிறது. இயேசு மேல் அறையை விட்டு வெளியேறி, கெத்சமணி என்ற இடத்திற்குச் செல்லும்போது நாமும் அவருடன் பயணிக்க அழைக்கப்படுகிறோம். இங்கே இயேசு நம்மை அவருடன் இணைந்து இடைவேண்டலில் ஈடுபட அழைக்கிறார்.
நற்கருணையே நமது கிறிஸ்தவ வாழ்வுக்கு ஊற்றாகவும் உச்சமாகவும் விளங்குகிறது என்று முழங்குகிறது இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் (கத்தோலிக்க மறைக்கல்வி நூல் எண் 1324). ஆம், இயேசு கிறிஸ்துவின் ஒரே மீட்புப் பலியான கல்வாரிப் பலியை நற்கருணை கொண்டாட்டத்தில் சந்திப்பதால், நற்கருணை நமது ஆற்றலுக்கும் ஆன்மீக வாழ்க்கைக்கும் ஆதாரமாக உள்ளது. நற்கருணை மூலம் நாம் இறைருளைப் பெற்று கிறிஸ்துவுடனும் சமூகத்துடனும் ஒன்றிக்கிறோம் என்பதை நினைவில் நிலைநிறுத்துவோம்.
இறைவேண்டல்.
தாழ்ச்சியின் பிறப்பிடமாக விளங்கும் ஆண்டவரே, நானும் உமது எதிர்ப்பார்ப்பின் படி, உன்னத சீடராக, அன்பான பணியில் ஈடுபட எனக்குத் திடத்தையும் தைரியத்தையும் தாரும். உமது ஊழிய மனப்பான்மை மற்றும் செயல்கள் மூலம் நீர் விட்டுச் சென்ற நற்செய்தியை பிறருக்குக் கொண்டு செல்ல எனக்கு உதவுவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
