நேரங்களும் காலங்களும் கடவுளின் கொடை! | ஆர்.கே. சாமி | VeritasTamil
27 செப்டம்பர் 2023, பொதுக்காலம் 25ஆம் வாரம் –வெள்ளி
சபை உரை 3: 1-11
லூக்கா 9: 18-22
நேரங்களும் காலங்களும் கடவுளின் கொடை!
முதல் வாசகம்.
'ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு' எனும் தந்துவத்தைச் சபை உரையாளர் முன்வைக்கிறார். உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு: பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம் என பற்பல காலங்களைக் கூறி, தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம் என்றும் மனிதர் வாழ்க்கை வட்டதில் சந்திக்கும் வேறுபட்ட ஆனால் தவறாமல் நடந்தேறும் மாற்றங்களை வைத்து பேசுகிறார்.
நிறைவாக, கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது என்று மனிதரின் இயலாமையைக் கூறி முடிகுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்? என்று முதலில் சீடர்களிடம் கேட்டபோது, அவர்கள் மக்களிடமிருந்துக் கேள்விப்பட்டதை, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கிறாரகள் என்றார்கள்.
தொடர்ந்த்து நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார். பேதுரு, “நீர் கடவுளின் மெசியா” என்கிறார். உடனே இயேசு, “இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தனது பாடுகளையும் உயிர்ப்பையும் முன்னறிவிக்கின்றார்.
சிந்தனைக்கு.
இன்றைய முதல் வாசகத்தை வாசிக்கும்போத், ‘எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே.. இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே, மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே’ என்ற ஒரு பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. இன்பமும், துன்பமும் இணைந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்த்துகிற அருமையான வரிகள். நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது. அதனை யாரும் தடுக்கவும் முடியாது. அதிலிருந்து தப்பிக்கவும் முடியாது. இதனை நன்று உணர்ந்த்துகிறார் முதல் வாசகத்தின் ஆசிரியர சபை உரையாளர்.
நம் வாழ்க்கையில் எப்போதும் எல்லாம் இன்பமயமாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்து ஒவ்வொரு நாளும் கண் விழிக்கிறோம். திடீரென்று என்னென்னவோ நடந்துவிடுகிறது. என்னடா இது வாழ்க்கை? என்று துவண்டு போகிறோம். அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம். துயரப்படுதலுக்கு ஒரு காலம். துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம் என்று பல காலங்களைக் கடந்து செல்ல வேண்டியது தவிர்க்க முடியாததொன்று.
மனிதர்கள் மட்டுமல்ல இயற்கைக்கும் இது பொருந்தும். குளிர்காலம், கோடைகாலம் எனவும், வசந்த காலம், இலையுதிர் காலம் எனவும் பல உண்டு. ஆனால், நாம் குயவன் கையில் களிமண்போல கடவுள் கையில் உள்ளோம். பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம் என்பது நமக்கு வந்தே தீரும். இளமையும் முதுமையும் தவிர்க்கமுடியாத ஒன்று.
எந்தச் சூழலிலும் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்குத் தேவை. எதையும் தாங்கும் இதயம் கொண்டோர் சோதனை வெல்வர்.
இயேசு ஏன் பாடுகள் பட வேண்டும் என்பது சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்திருக்கும். அவர்களின் எண்ணமெல்லாம் மெசியாவாம் இயேசு உரோமையர்களிடமிருந்து தங்களுக்கு விடுதலை அளித்து, எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்வார் என்பதாகவே இருந்தது. இறைத் திட்டம் அது அல்ல. இயேசு, இறைத்திட்டத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.
ஆகவே, வாழ்க்கையில் எச்சூழலில் இருந்தாலும், கடவுளின் திருவுளத்தற்கு ஏற்ப வாழ முற்படுவோமானல் மற்றனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று துணிவோடு முன்னோக்கிச் செல்ல இயலும். நம்ப இயலாதவை பல இருந்தாலும் நம்பக்கூடியவை சில இருக்கத்தான் செய்யும்.
முதலும் முடிவுமாக, அகரமும் னகரமுமாக ஆண்டவர் நம்மோடு உள்ளார். நேரங்கள் அவருடையன, காலங்களும் அவருடையன என்ற நம்பிக்கையில் வாழ்வைத் தொடர்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உம் சீடராக நான் வாழும் இக்காலத்தில், எனக்கு என்ன நேர்ந்தாலும் நீர் என்னைக் காத்திடுவீர் என்ற நம்பிக்கையில் வாழும் வரத்தைத் தந்தருள்வீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452