நம் அன்பின் வெளிப்பாடே இரக்கம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

17 செப்டம்பர்  2024 
பொதுக்காலம் 24 ஆம் வாரம் -செவ்வாய்

1 கொரி  12: 12-14, 27-31a
லூக்கா 7: 11-17
 
 
 நம் அன்பின் வெளிப்பாடே இரக்கம்!


முதல் வாசகம்.

 அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம் என்று ஏற்கனவே பவுல் கூறியுள்ளர (10:17).    தூய ஆவியானவர் அவர்கள் அனைவரையும் ஒரே உடலான கிறிஸ்துவின்  உடலாகத்தான் திருமுழுக்குப் பெறச் செய்தார்.  வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், அல்லது சமூகத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் என்ற வேறுபாடு இல்லை. கிறிஸ்தவர்கள் உலகில் கிறிஸ்துவின் உடலில் இணைந்தவர்கள். 

ஆனால், கொரிந்துவிலுள்ள சில கிறிஸ்தவர்கள் தாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று நினைத்தார்கள்.  கிறிஸ்தவர்களில் சிலருக்கு கடவுளின் கொடைகள்  இல்லை என்று நினைத்தார்கள். மற்றும்  அவர்களின் கொடைகள் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அவர்கள் நினைத்தார்கள். எனவே திருஅவையில் சிலரால் தற்பெருமை தலைத்தூக்கியிருந்தது.  மேலும் சிலர் பொறாமை கொண்டனர். அனைத்து உறுப்புகளும் இணைந்து செயல்பட்டால்தான் மனித உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒவ்வொரு பகுதியும் இன்றியமையாதது. ஒவ்வொரு உறுப்பும் முக்கியமானது. கையைப் பார்த்துக் கால் பொறாமை கொள்வது முட்டாள்தனமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறார் பவுல். அனைத்துக்கும் மேலாக அருள் கொடைகளை நாட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். 


 நற்செய்தி.


 ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களோடு நயீன் என்னும் ஊருக்குச் சென்றுகொண்டிருக்கின்றார். அவர் ஊரின் நுழைவாயிலை நெருங்குகையில் இளைஞன் ஒருவனைப் பாடையில் வைத்து மக்கள் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அந்த இளைஞனோ தாய்க்கு ஒரே மகன். அந்தத் தாயோ ஒரு கைம்பெண். உடனே ஆண்டவர் இயேசு பரிவுகொண்டு அந்த இளைஞனை உயிர்பெற்றழச் செய்கின்றார்.

இந்நிகழ்வை தேரில் கண்ட அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது என லூக்கா பதிவுச் செய்துள்ளார்.

 
சிந்தனைக்கு.

ஆண்டவர் இயேசு அந்த கைம்பெண்ணின் மகனுக்கு உயிரளித்தது கண்டு  அங்கிருந்த மக்கள், “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார் என்று பேசத் தொடங்கியதோடு,  கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லி கடவுளைப் போற்றினர்.   

அந்த கைம்பெண் முதலில் கணவனை இழந்தாள், இப்போது  தனக்கு ஆதரவாக இருப்பான் என்று எண்ணி  நம்பிக்கையோடு இருந்த மகனையும் இழந்தாள். எதர்காலத்தை நினைத்து, அவளுடைய உள்ளமும் பயத்தால் நிறைந்திருக்கலாம்.  இந்த உண்மையான துக்கம் மற்றும் பயத்தின் பின்னணியில் இயேசு அவள் வாழ்க்கையில் நுழைகிறார். இயேசுவைப் பற்றி அவளுக்கு ஏதாவது தெரியுமா என்பது நமக்குத் தெரியாது. அவள் அவரைப் பின்பற்றும் சீடர்களில்  ஒருவரல்ல என்று தோன்றுகிறது.  

முந்தைய நாள், இதே மக்கள் நூற்றுவர் தலைவரின் வேலைக்காரனை இயேசு குணப்படுத்துவதைக் கண்டார்கள். அவர்கள் இயேசுவை நம்பினார்கள். அவர்கள் அவருடன் நடந்து, இன்று இந்த இறுதி ஊர்வலத்தை எதிர்கொண்டபோது, இரக்கத்தால் உருகப்பட்டது இயேசுவின் இதயம் மட்டுமல்ல, அவரைப் பின்பற்றுபவர்களின் இதயங்களும் கூட.   நாமும் அவ்வாறே மற்றவர்களுக்காக இரக்கப்படுபவர்களாக, பரிந்து பேசுபவர்களாகச் செயல்பட வேண்டும். பிறருக்காகப் பரிந்து பேசுதல் நமது நற்பண்புகளில் ஒன்றாக மாற வேண்டும். நமக்கேன் பொல்லாப்பு என்று ஒதுங்கிப் போனால், நாம் தனிமைப்படுத்தப்படுவோம். நமது உடலால்  ஒருபோதும், தனியாகக் கல்லறைக்குச் சென்று தன்னை அடைக்கம் செய்து கொள்ள இயலாது. நமக்கும்  நான்கு பேர் தேவை. 

நம்மை நெருங்கிவர விரும்பும் இயேசுவை நம் இதயங்களில் வரவேற்க நாம் தயராக இருக்கிறோமா என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்கவேண்டும். உலகை இரக்கக் கண்களால் பார்க்கப் பழகுவோம். அது இறைஇரக்கத்தை நமக்குப் பெற்றுத் தரும்.  கானா ஊரில் திராட்சை இரசம் தீர்ந்துபோன போது, அன்னை மரியா இரக்கம் அங்கே மகிழச்சியைக் கொணர்ந்ததுபோல, நமது இரக்கமும் பிறருக்கு மகிழ்ச்சி தரும் என்ற நம்பிக்கையோடு செயல்படுவோம், பிறர் நலனுக்காக ஆண்டவரிடம் பரிந்துரைப்போம்.

நாம் பிறர்மீது காட்டும் இரக்கச் செயல்களே சிறந்த நற்செய்தி அறிவிப்பாக மாறும். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார் என்று மக்கள் கடவுளைப் போற்றுவர். முதல் வாசகத்தில் பவுல் அடிகள் வலியுறுத்துவதுபோல், நமது ஒன்றிப்பும் இரக்கமும் நாம் ஒரே உடலைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு சாட்சியமாக விளங்கும்.


இறைவேண்டல்.


இரக்கத்தின் ஊற்றாகிய ஆண்டவரே, இரக்கமுடையோர் பேறுபெற்றோர் என்ற உமது வார்த்தையில் நம்பிக்கை வைத்து வாழும் சீடராக நான் வாழத் திடப்படுத்துவீராக. ஆமென்.


    
 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452