உலகப் பற்று இறைப்பற்றை வேரறுக்கும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

11 செப்டம்பர்  2024 
பொதுக்காலம் 23 ஆம் வாரம் – புதன்
1 கொரி  7: 25-31
லூக்கா 6: 20-26

 
உலகப் பற்று இறைப்பற்றை வேரறுக்கும்!


முதல் வாசகம்.


இவ்வாசகப் பகுதியில், பவுல் அடிகள் கொரிந்தியர்களுக்கு தனது மறைத்தூதுரை பணிக் காலத்தின் தொடங்கக்காலப் போதனையைக் குறித்து  எழுதுகிறார்.   அப்போது, அவரது போதனையானது  இயேசுவிடமிருந்து பெற்றதல்ல, மாறாக அவரது  தனிப்பட்ட நம்பிக்கை என்று  ஒப்புக்கொள்கிறார். ஏனெனில் அப்போது அவரது புரிதலின்படி  இயேசு கிறிஸ்துவின்  மறு வருகை உடனடியாக அல்லது மிக விரைவில் நிகழவுள்ளது என்றே இருந்தது.

எனவே, இயேசுவின் இரண்டாம் வருகை உடனடியாக நடைபெற இருப்பதால், அவரவர் இருக்கும் நிலையில் இருப்பதே  சிறந்ததாக இருக்கும் என்பது அவருடைய போதனை. அவரவர் வாழும்  நிலையிலே இருந்தால் தான்,  இயேசுவின் இரண்டாம் வருகையைச் சிறப்பாக எதிர்கொள்ள இயலும் என்று அவர் போதித்தார். 

எனவே, திருமணமாகாதவர்கள் திருமணத்தை நாடாமல் அப்படி இருப்பதே நல்லது என்கிறார்.  ஆனால், திருமணம் ஆகாமல் தனித்து வாழ்வது ஒருவரை  தவறான வாழ்க்கைமுறைக்கு  இட்டுச் செல்லுமென்றால், அவர்  திருமணம் செய்துகொள்வதே நல்லது என்று போதிக்கிறார். 
ஆனால்,  எது எப்படியிருந்தாலும், அனைவரும் இறைவனின் வருகைக்காகக் காத்திருப்பதும் தயாரிப்பதும்  இன்றியமையாதது என்கிறார்.  

ஆம், இறைவனின் வருகைக்காக நம்மையே முழுமையாக தயாரிக்கிறவர்களாக நாம் வாழ்வதே, ஏற்ற வாழ்க்கைமுறை என்பது பவுலடியாரின் செய்தியாக உள்ளது.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில் லூக்கா விவரிக்கும்  சமவெளிப்பொழிவைக் கேட்கிறோம்.  மத்தேயு 5-ஆம் அதிகாரத்தில் இடம்பெறும் மலைப்பொழிவானது, பொதுவான அறிவுறுத்தலாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது என்று கூறப்பட்டிருக்கும்.

ஆனால் லூக்காவோ, இயேசு நேரடியாகப் பேசுவது போன்று குறிப்பிட்டுள்ளார். மத்தேயுவில் கூறப்பட்டது போல் அல்லாமல்,  ‘ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே’ என்று முகத்து முகம் பார்த்து கூறுவதைப்போல் எழுதியுள்ளார்.  லூக்கவின் இன்றைய சமவெளிப்பொழிவும் மத்தேயுவின் மலைப்பொழிவும் கிறிஸ்தவ வாழ்வுக்கு ஆணிவேராக உள்ளன என்றால் மிகையாகது. 


சிந்தனைக்கு.

   
இன்றைய இரு வாசகங்களும் நமக்கு குழப்பமாகத் தோன்றலாம்.  பவுல் அடிகள்  கொரிந்தியருக்கு கூறும் இன்றையச் செய்தியைச் சிலர்   உலக முடிவு குறித்த முன்னறிவிப்பாகக் கருதக்கூடும்.  

உலக முடிவுப் பற்றிய காலம் நமக்கு உறுதியாகத் தெரியாது.  ஆனால், ஆண்டவர் மீண்டும் வருவார் என்பது மட்டும்  உறுதி.  சிலர் நமது காலநிலை மாற்றங்களை கண்டு, இறுதி காலம் நெருங்கிவட்டதாகவும்  பிதற்றுகிறார்.  நாம் இவற்றைப் பற்றி கவலைப்படுவதில் நியாயமிலிலை. அவரைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே நமது கவலையாக இருக்க வேண்டும்.  இன்றைய நற்செய்தி இதையே வலியுறுத்துகிறது. 

ஏழையாகவும், பசியுற்றோராகவும், அழுகிறவராகவும், அவமதிக்கப்பட்டவராகவும் இருப்பதை ஏன் இயேசு பேறுபெற்றவர்களாக போற்றுகிறார்? இக்கேள்வியை நமக்கு நாமே கேட்க வேண்டும்.  லூக்காவின் நற்செய்தியில், ஏழையாக இருப்பதை பாக்கியமாக  இயேசு அறிவிக்கிறார்.   "ஏழையின் உள்ளத்தோர் பேற்பெற்றவர்கள்  என்று கூறுகிறார்.  உள்ளத்தில் ஏழை என்பது  இவ்வுலக நாட்டங்களில் பற்றற்று இருப்பதாகும். 

ஏழைகள் ஒன்றுமில்லாதவர்கள். அவர்கள் வறுமையின் வாரிசுகள்.  எனவேதான் ஆண்டவர் அவர்களை விண்ணரசுக்கு உரியவர்களாக அழைக்கிறார்.  இவ்வுலகச் செல்வம் மன எளிமையை அழிக்கிறது, வறுமையோ மன எளிமையை அளிக்கிறது.  ஏழையரின் உள்ளத்தோர்: கடவுள் பராமரிக்கும் மக்கள், (வி.ப 22:25).    எனவே, ''ஏழையரின் மனநிலை'' நமதாக இருக்க வேண்டும். நாம் எப்போதும் கடவுளை நம்பி வாழ வேண்டும். நம் சொந்த சக்தியால் பெரிதாக ஒன்றையும் நம்மால் சாதிக்க இயலாது என்பதை உணர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம்.  

அடுத்து, ‘மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர் ஆவீர் என்கிறார் ஆண்டவர்.
 
இயேசுவுக்காக, அவரது நற்செய்திக்காகத் துன்புற்றோர்,  பல நாடுகளில் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டோர் எண்ணிலடங்கா. இவர்கள் பேறுபெற்றோர் பட்டியிலில் தங்களது பெயர்களைப் பதித்ததினால், புனிதர்களானார்கள் என்பதை நினைவில் கொள்வோம். நமக்கும் இது சத்தியமாகும், நமக்கு மனமிருந்தால்.... 


இறைவேண்டல்.


‘ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்’ என்பதை  எனக்குணர்த்திய ஆண்டவரே, ஏழையரின் உள்ளத்துக்குரிய  வாழ்வு வாழ எனக்குதவுவீராக. ஆமென்.
 


 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452