நம் வாழ்வு பத்தோடு பதினொன்று என்பதல்ல! | ஆர்.கே. சாமி | VeritasTamil
10 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 23 ஆம் வாரம் -செவ்வாய்
1 கொரி 6: 1-11
லூக்கா 6: 12-19
நம் வாழ்வு பத்தோடு பதினொன்று என்பதல்ல!
முதல் வாசகம்.
இவ்வாசகத்தில், புனித பவுல் கொரிந்திய திருஅவையினர் கடவுளின் சிறப்பு மக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை நினைவூட்டுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக இருக்க வேண்டும் என்ற கடவுளின் அழைப்புக்கு அவர்கள் இசைந்ததால் அவர்கள் மற்ற மக்களைவிட வித்தியாசமானவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
ஆனாலும், கொரிந்தியர் அவர்களின் சிறப்பு அழைப்பை மறந்துவிட்டார்கள் என்றும், அவர்களுக்கிடையில் எழும் சச்சரவுகளை, பிணக்குகளைத் தீர்த்துக்கொள்ளும் அதிகாரத்தையும் அவர்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். சச்சர்வுகளுக்குத் தீர்வுக் காண அவர்கள் வெளி நபர்களைத் தேடாமல், திருஅவை உறுப்பினர்களுடையே தீர்வுகாண வேண்டும் என்று குறிப்பிட்டு எழுதுகிறார்.
மேலும், அவர்கள் உண்மையுள்ளவர்களாகவும் கிறிஸ்துவில் சகோதர சகோதரிகளாகவும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அத்துடன் பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளை அடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை என்பதை மனதில் நிறுத்தி வாழ அழைக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், கடவுள் மனிதர்கள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த இயேசு உலகிற்கு வந்தார் என்பதை நினைவுபடுத்தப்படுகிறோம். இயேசு முதலில் தனது தந்தையுடனான உறவில் நேரத்தைக் கழிக்கிறார். அதன் பிறகு, இயேசு "திருத்தூதர்கள்" - "அனுப்பப்பட்டவர்கள்" என்று பொருள் கொண்ட பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுக்கிறார்.
அவர்களின் பெயர்கள், பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பனவாகும்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அழைப்புக்கேற்ற வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து கொரிந்தியருக்குப் பவுல் எடுத்துரைத்தார். ஏனெனில் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் இவ்வுலகைச் சாராத மக்கள். நற்செய்தியில் இயேசு தனது பன்னிரு சீடர்களைத் தேர்வுச் செய்கிறார். அதற்கு முன்னதாக தந்தையுடம் வேண்டுகிறார்.
ஆம். நாம் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்றால் வித்தியாசமான வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பது பொருள். ஆகவே, வித்தியாசமான இவ்வுலகில் வித்தியாசமான வாழ்வு வாழ நாம் பணிக்கப்படுகிறோம். பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று என்ற வாழ்வு நமதல்ல.
நற்செய்தியில், இயேசு சொல்வதைக் கேட்க வெகு தொலைவில் இருந்து ஏராளமான மக்கள் வந்ததாக லூக்கா குறிப்பிடுகிறார். இந்தக் கூட்டத்தில் பல யூதர்களோடு, தீர், சீதோன் பகுதிகளைச் சேர்ந்தப் புறவினத்தாரும் இருந்தனர். அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க விரும்பினர், ஏனெனில் அவர் மிகுந்த அதிகாரத்துடன் மற்றும் வாழ்க்கையைச் சீர்செய்யும் விதத்திலும் பேசினார். அவருடைய படிப்பினை அவர்களைக் கவர்ந்தது. அவரது வல்ல செயல்கள் அவர்களை ஈர்த்தது.
ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் வார்த்தையால் ஈர்க்கப்படும் நமது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஆண்டவர் எதிர்பார்க்கிறார். நாம் பத்தோடு பதினொன்று அல்ல. “நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்” (யோவான் 15:16) எனும் ஆண்டவர், நம்மில் மாறுபட்ட வாழ்வை எதிர்பார்க்கிறார்.
அவர் தேர்ந்துகொண்ட திருத்தூதர்களின் அர்ப்பணிப்பு வாழ்வாலும் உழைப்பால்தான் நாம் உருவானோம். இந்த அர்ப்பணிப்பு வாழ்வு ஒரு தொடர் நிகழ்வு. இன்று நாம்தான் ‘திருத்தூதர்கள்’. நாமும் அனுப்பப்படுகிறோம் என்பதை நினைவில் நிறுத்தி செயல்பட வேண்டும். இறுமாப்பும் அலட்சியமும் நமக்கு ஆகாது.
இறைவேண்டல்.
என்னைத் தேர்ந்துகொண்ட ஆண்டவரே, உமது எதிர்பார்ப்புக்கு ஏற்ற வாழ்வு வாழ்ந்திட நாளும் என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452