இடையை வரிந்துகட்டுவோம், விளக்கை ஏற்றிக்கொள்வோம் சாட்சிய வாழ்வுக்கு! | ஆர்.கே. சாமி | VeritasTamil

22 அக்டோபர் 2024,                                                                                           பொதுக்காலம் 29ஆம் வாரம் – செவ்வாய்

எபேசியர் 2: 2: 12-22
லூக்கா 12: 35-38
 
 
 இடையை வரிந்துகட்டுவோம், விளக்கை ஏற்றிக்கொள்வோம் சாட்சிய வாழ்வுக்கு!


முதல் வாசகம்.

இவ்வாசகத்தில், புறமதத்திலிருந்து இயேசுவின் அழைப்பால் புதிய நம்பிக்கைக்கு மாறிய எபேசியர்களுக்கு எழுதும் இந்த திருமுகத்தில், பவுல் அடிகள் அவர்களிடம்,  உண்மை கடவுளிடமிருந்து தெய்வங்களை வழிட்டு வந்தவர்கள், இயேசுவின் மூலம், இப்போது  கடவுளுக்கு நெருக்கமாக இருக்கின்றனர் என்று பாராட்டுகிறார்.  
அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், அனைத்து நம்பிக்கையாளரும், யூதர்களும் யூதரல்லாதாரும் இயேசுவின் திருவுடலில் வெவ்வேறு உறுப்புகளாக  இருந்தோதும்  ஒன்றாக வேலை செய்ய அழைக்கப்படுகிறார்கள்.  உடல் மற்றும் கட்டிடம் ஆகிய இரண்டு உவமைகளையும் பயன்படுத்தி,   பவுல் இயேசுவை முக்கிய நிலையில் வைக்கிறார்.  
இயேசு வந்து, தொலையில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த யூதர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்து,  அவர் வழியாகவே, இரு இனத்தவரையும்  ஒரே தூய ஆவி மூலம்   தந்தையாம் கடவுளை அணுகும் பேற்றினைப் பெற்றுத் தந்தார் என்ற உண்மையை எடுத்துரைக்கிறார்.  ஆகையால், மனமாறிய எபேசியர் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உயர் நிலையில் வைத்துஃ போற்றுகிறார்.  

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்கள் எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்.  அவர்களின் பணி வாழ்வு  எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.  ஏனெனில் இயேசு எப்போது திரும்பினாலும், சீடர்கள் விழிப்புடன், அவருடைய வருகைக்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் சீடர்கள் மத்தியில் மெத்தனப்போக்கு ஆகாது என்றும் அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்துகிறார்.

சிந்தனைக்கு.

நற்செய்தியின் தொடக்கத்தில், “உங்கள் இடையை வரிந்துகட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்’ என்று இயேசு சீடர்களுக்குக் கூறினதை வாசித்தோம். ‘தயாராக இருங்கள்’  என்பது ஓர் அழைப்பு. இதில் மிக முக்கியமான அறிவுறுத்தல் என்னவெனில்,  ‘இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள்’ என்பதும் ‘விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்’ என்பதுமாகும்.   
ஆண்டவர் வந்து கதவைத் தட்டும் போது எழுந்துக் கதவைத் திறக்க வேட்டியையோ, அணிந்திருக்கும்  மற்ற ஆடையையோ கையில் பிடித்துக்கொண்டு ஓட முடியாது. அதிலும் விளக்கு இல்லாமல் இருட்டில் இருந்தால், விரைந்து சென்று கதவைத் திறக்க இயலாது. இவை இரண்டுமே காலத்தாமதத்தை ஏற்படுத்தும். 
இரவின் இரண்டாவது அல்லது மூன்றாவது சாமத்தின் வரையிலும் சீடர்கள் விழிப்புடன் இருந்தால் அவர்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று இயேசு கூறி இன்றைய நற்செய்தியை முடிக்கிறார். ஒரு கிறிஸ்தவராக இருப்பது நாம் பிறந்ததால் அல்ல, மாறாக, அழைக்கப்பட்டதால், தேரந்துகொள்ளப்பட்டதால் ஆகும்.   நாம் ஏன் அழைக்கப்பட்டோம் என்பதற்கும் தேர்ந்துகொள்ளப்பட்டோம் என்பதற்கும் பொருளுண்டு. அதுவே, சாட்சிய வாழ்வு. 
சாட்சிய வாழ்வு என்பது கண்மூடித்தனமானது அல்ல. அது சோம்பலுக்கு எதிரானது. எனவே நம்முடைய வாழ்விலிருந்து சோம்பேறித்தனத்தை அகற்றுவோம், ஆண்டவரின் வருகைக்காக எப்போதும் விழிப்பாய் இருப்போம், ஆயத்தமாய் இருப்போம்.  
அத்துடன், “உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து, ‘நானே மெசியா’ என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர்” (மத் 24;4) என்றும் இயேசு நம்மை எச்சரித்துள்ளார். இயேசு குறிப்பிடும் இந்த ‘பலருக்கு’ இன்று பஞ்சமே இல்லை. எங்கள் சபை, உங்கள் சபை என்று கூவி அழைப்போர் எண்ணில் அடங்கா.  நமது நம்பிக்கைக்குப் பாத்திரமாக விழிபாயிருப்போம். சிந்தித்துச் செயல்பட ஞானம் எனும் விளக்கை ஏற்றிக்கொள்வோம்.

இறைவேண்டல்.

‘விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்’ என்றுணர்த்திய ஆண்டவரே, என்னில் மலிந்துள்ள சோம்பலைப் போக்கி உமதுத்  துடிப்புள்ள பணியாளனாக விளங்க என்னை காத்தருள்வீராக. ஆமென்.
       
ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                              ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                                +6 0122285452