இயேசுவின் மறைநிகழ்வுகள் கடவுள் அன்பின் அடையாளம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

14 அக்டோபர் 2024,                                                                                           பொதுக்காலம் 28ஆம் வாரம் – திங்கள்

கலா 4: 22-24, 26-27, 31- 5: 1
லூக்கா 11: 29-32


இயேசுவின்  மறைநிகழ்வுகள் கடவுள் அன்பின் அடையாளம்!
 

முதல் வாசகம்.

நமது சிறப்புச் செயல்களால் நாம்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று நினைப்பது தவறு என்று பவுல் அடிகள் இன்று நினைவூட்டுகிறார்.   உண்மையில் கடவுள் நம்மைத் தேர்ந்துகொண்டதால்தான் நாம் இவ்வுலகில் சிறப்பு வாய்ந்தவர்கள் ஆகிறோம். இன்றைய  முதல் வாசகத்தில், புனித பவுல் கலாத்தியா மக்களுக்குத் திருமுகம்  எழுதும்போது,   அவர்கள் புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள், வாக்குறுதியின் மக்கள், ஆபிரகாமின் உரிமைபெற்ற மனைவியான சாராவின் மக்கள் என்று பறைசாற்றுகிறார். மேலும், நாம் அடிமைகள் அல்ல என்றும், புதிய எருசலேமின் மக்கள் என்ற உண்மையைப் பகர்கிறார்.
 பவுல் அடிகள் அவரது காலத்தில் யூதர்கள் கொண்ட சிந்தனையைச் சுட்டிக்காட்டி  யூதர்கள்  சாரா மூலம் ஆபிரகாமின் இரத்த மரபைக் கொண்டிருந்ததால் அவர்கள் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக கருதினர்   கலாத்தியாவில் உள்ள புறவினத்து கிறிஸ்தவ மக்களை அவர்கள் ஆபிரகாமின் உண்மையான சந்ததி என்று கூறுகிறார்.    யூதர்கள் ஆபிரகாமின் வம்சாவளியினர் என்பதால் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நினைக்கிறார்கள்.   ஆனால், பிறப்பு  அல்லது இரத்தத் தொடர்பின் வழியாக ஆபிரகாமின் மக்களாக  விளங்குவதைவிட உடன்படிக்கையின் மக்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவது மிகவும் முக்கியமானது என்று பவுல் விவரிக்கிறார்.  

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில் இயேசு யூத மக்களுக்கு போதிக்கும்போது, அவர்களில் சிலர் தங்களைச் சிறப்பு வாய்ந்தவர்களாகக் கருதி, ஆபிரகாமின் வழிமரபைக் கொண்டவர்களாகப் பெருமிதம் கொண்டனர்.  அவர்களின் பரம்பரையின் காரணமாக அவர்கள் கடவுள் என்று நினைத்தார்கள். இயேசு கடவுள் அனுப்பிய மெசியா என்பதை ஏற்க மறுத்து,  அவரிடமிருந்து வானக அடையாளங்களைக் காட்டுமாறு வலியறுத்தி வந்தனர். 
இயேசுவோ, அவர்களின் பின்னணியை நன்கு அறிந்தவர். அவர்கள் வணங்கா கழுத்து கொண்டவர்கள் என்பதை அறிவார். எனவே, இறுமாப்பு கொண்ட அவர்களுக்கு’ யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்று மறுக்கிறார்.  மானிட மகனாக இந்த இயேசுவுக்கச் சிறந்த  அடையாளம் என்கிறார்.  மேலும், சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர் தென்னாட்டு அரசியும், யோனாவின் சொல் கேட்டு மனமாறிய நினிவே மக்களும், தீர்ப்பு நாளில் மனமாறாத யூதர்களைக் கண்டனம் செய்வார்கள்  என்றும்,  இயேசு உண்மை உரைக்கிறார்.

சிந்தனைக்கு.

நற்செய்தியில், இயேசு  யோனாவை முன்னிலைப் படுத்தி போதிக்கிறார்.  கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவராக,  நினிவே பகுதியில் புறவினத்தார்  மத்தியில் இறைவாக்குரைக்க அனுப்பப்பட்டவர் யோனா.  யூதர் அல்லாத நினிவே நகர மக்கள்  அவர் போதித்ததைக் கேட்டு    மனம் மாறினார்கள். யோனாவின் இறைவாக்கை ஏற்றுக் கொண்டார்கள். இயேசுவோ யோனாவையும் விடப் பெரியவர், இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர். அப்படியிருந்தும் அவரை யூதர்கள் நம்பவில்லை. அதனால்தான் இயேசு அவர்களைக் கண்டிக்கிறார்.
அந்த யூதர்களைப் போல, இன்றும் சில சபைகளில் கத்தோலிக்கரின்  மாதா வணக்கம், அருள் அடையாளக் கொண்டாட்டங்கள், புனிதர் வணக்கம் போன்றவற்றை முனவைத்து இவையெல்லாம் சாபம் என்றும், இதனால், அவர்களுக்கு மட்டும்  விண்ணகம் செல்ல ‘பாஸ்’ இருப்பதாக நம்பி பிறரைக் குழுப்பிக்கொண்டிருக்கிறார். குழப்பவாதிகள் என்றும் குழப்பவாதிகளாகவே இருப்பர். இவர்களை விட நற்செய்தி அறியாத புறவினத்தார் மேலானவர்கள் என்றால் மிகையாகாது.
இன்றைய முதல் வாசகத்தில் பவுல் அடிகள் இருவேறு பெண்களின் பின்னணியை முன்வைத்து   'அடிமைப் பெண்' - 'உரிமைப் பெண்' என உருவகம் செய்து, இரண்டு வகை மக்களைப் பற்றி விவரிக்கிறார். நாம் சாரா வழி வந்த உரிமைப் பேற்றினப்பெற்றவர்கள். நம்மில் குழப்பத்திற்கு இடமில்லை. 
எனவே, நமக்கு    இதுவரை நமக்குக் கொடுக்கப்பட்ட சில அடையாளங்களின் பொருளை நாம் கண்டுபிடித்து, அவற்றை , வாழ்க்கையில் நமது எல்லா நிலைக்கும் அடித்தளமாக பயன்படுத்த வேண்டும். இயேசுவின் வாழ்க்கை, பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு  ஆகியவை நமக்கு அளிக்கப்பட்டுள்ள உண்மையான, என்றுமுள அடையாளங்களாகும்.   நம் மத்தியில் நற்கருணையில் வாழ்ந்தகொண்டிருக்கும் ஆண்டவர் இதற்குச் சான்றாக உள்ளார். இதைவிட வேறு என்ன அடையாளம் தேவை. நாம் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்ற நம்பிக்கையும் உரிமை வாழ்வு கொண்ட உடன்படிக்கையின் மக்கள் என்பதும் நம்மில் அழியா அடையாளங்களாக அளிக்கப்படுடள்ளன என்பதை மனதில் நிறுத்தி வாழ்வோம்.

இறைவேண்டல்.

என் அன்புக்குரிய ஆண்டவரே, உமது   முன்மாதிரியைப் பின்பற்றி வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் எடுக்க எனக்கு அருள் புரிவீராக.  இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன். ஆமென்.
   
ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                              ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                                +6 0122285452