கிள்ளி அல்ல, அள்ளிக் கொடு!| ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் 34 ஆம் வாரம் -திங்கள்
திருவெளி. 14: 1-5 லூக்கா 21: 1-4
கிள்ளி அல்ல, அள்ளிக் கொடு!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், இன்றும் யோவான் கண்ட மற்றொரு காட்சியை வாசிக்கிறோம். இம்முறை யோவான், சீயோன் மலை மீது ஓர் ஆட்டுக்குட்டி நிற்பதைக் காண்கிறார். சீயோன் மலை என்பது யூத மரபுப்படி எருசலேமைக் குறிக்கிறது ( யோவே 2:32. எசா 24:3). ஆனால், கிறிஸ்தவர்களாகிய நமக்கு கல்வாரிதான் சீயோன் ஆகும். ஏனெனில், இயேசு கிறிஸ்து சிலுவையில் இறந்து உயிர்த்தார்.
தீமையை எதிர்த்து போராடி வெற்றிக்கொண்ட இயேசுவைதான் ஆட்டுக்குட்டியாக யோவான் காட்சியில் கண்டார். இக்காலத்தில் நமக்கு சீயோன் என்பது நமது எதிர்நோக்காக விளங்கும் புதிய எருசலேமாகிய விண்ணக்தைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளாம். அடுத்து, ஆட்டுக்குட்டியின் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர் என்று குறிப்பிடுகின்றார். இதில் 144,000 பேர் என்பது தீய சக்தியின் தாக்குதலுக்கு அடிபணியாமல், கிறிஸ்தவ அர்ப்பண வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் (புனிதர்கள்) எனலாம். இவர்கள் மண்ணகத்தில் சிலை வழிபாட்டில் (பணம், பொருள், பதவி, அன்னிய தெய்வங்கள்) ஈடுபடாதவர்கள். இவர்கள்தான் அரியணை முன்னிலையில் புதியதொரு பாடல் பாடிக்கொணடிருந்தார்கள்.
தொடர்ந்து, ‘ஆட்டுக்குட்டி’ சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்; கடவுளுக்கும் ஆட்டுக் குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள்’ என்பதானது, இயேசு இரத்தம் சிந்தி அவரது உயிரையே விலையாகக் கொடுத்து மீட்கப்பட்டவர்கள் என்றாகிறது.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், ஆலயத்தில் செல்வர்களும், வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதை இயேசு காணகிறார். அவர்கள் மத்தியில் அந்த கைம்பெண் இரண்டு காசுகளை காணிக்கையாக அளித்ததைக் இயேசு கண்டார். செல்வந்தர்கள் பலர் அறியும் வகையில் அவர்களது காணிக்கைகளைப் பெட்டியிஇல் போட்டனர். இதன் வழியாக, அவர்கள் "பெருமையை" ஆடம்பரமாக வெளிப்படுத்தினர்.
ஓர் ஏழை கைம்பெண் மலிவான நாணயங்களான இரு செப்பு நாணயங்களைப் போட்டார். அவள் வறுமையில் உள்ளவர் என்றும், கடவுளுக்குக் கொடுப்பதற்கு அவளிடம் போதிய பணம் இல்லாததையும் இயேசு அறிந்திருக்கிறார். ஆனாலும், கடவுள் மீதான அவளது உறுதியான நம்பிக்கை, கடவுளுடனான அவளுடைய உறவை அவர் பாரட்டினார். தனக்கு என்றில்லாமல் இருப்பை அப்படியே கடவுளுக்குச் செலுத்தினாள். வாழ்வதற்கு தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்க அவள் தயாராக இருந்தாள். கடவுள் தன்னைக் கவனித்துக்கொள்வார் என்று அவள் நம்பியதே இதற்குக் காரணம்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில் 144,000 பேர் கடவுளின் முன்னிலையில் புகழ் பாடல்கள் பாடிவதை அறிந்தோம். இவர்கள் மண்ணக வாழ்வில் கடவுளின் பிள்ளைகளாக அவரது அழைப்புக்கு ஏற்ற வாழ்வு வாழ்ந்தவர்கள். ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்’ என்று இயேசு கிறிஸ்துவால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள். ஆகவே, நாம் உலகில் வாழும் தூய்மை வாழ்வுக்குக் கைமாறு உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.
அவரது படைப்புகளாகிய நாம் அனைவரும் முழுமையாக விடுதலை அடைய வேண்டும், மீட்புப் பெற வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். இருப்பினும், நம்மில் சிலர், தங்களது சொந்த மீட்புப் பற்றிய கவலையின்றி, தொலைந்து போன மகன் போல (லூக்கா அதி. 15) நெறி தவறி போகிறோம். கிறிஸ்துவுக்கு நமது "முழு வாழ்வாதாரத்தையும்" வழங்குவதன் மூலம் நாம் அனைவரும் இந்த ஏழை கைம்பெண்ணாக நம்மைப் பார்க்க வேண்டும். நம்மிடம் உள்ள அனைத்தும் கடவுளிடமிருந்து கிடைத்த கொடை. எனவே, அவரிடமிருந்துப் பெற்றதை அவருக்குத் திரும்பத்தருவதில் கஞ்சத்தனம் கூடாது. குறிப்பாக நமது நேரத்தைக் கடவுள் பணிக்குச் செஃவழிப்பதில கஞ்சுத்தனமு கூடாது,
தியாகத்தில்தான் உண்மை மகிழ்ச்சி கிடைக்கும். துரதிர்ஷ்டவசமாக, நம்மில் பலர் இவ்வுலக செல்வங்களில் திலைத்திருக்கும் போது, கிள்ளிக் கொடுக்கவும் தயங்குகிறோம். ‘உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ (மத் 13:12) ஆம், பிறருக்கு உதவி செய்ய விழைவோருக்கு ஆண்டவர் கொடுத்துக்கொண்டே இருப்பார். கருமிகளிடமிருந்து உள்ளதையும் எடுத்துக்கொள்வார். கைம்பெண்ணின் காணிக்கை சிறியதாக இருந்தாலும், கடவுளின் பார்வையில் அது பெரியதாக இருந்தது. அவள் மனநிறைவோடு கொடுத்தாள்.
இன்று, இந்த ஏழை கைம்பெண்ணை நினைத்துப் பார்ப்போம். அவளுக்கு கணவன் கிடையாது. அவளுக்குப் பிள்ளைகள் இருந்தார்களா என்ற விபரமும் தெரியாது. இருப்பதை கடவுளுக்குக் கொடுக்கிறாள், அவளுடைய காணிக்கை மிகவும் சிறியதாக இருந்தாலும், அவர் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டவளானாள். தன்னைக் கடவுள் பார்ததுக்கொள்வார் என்ற நம்பிக்கை அவளில் மேலிட்டது. இங்கே, தனக்கு மிஞ்சிதான் தானம் என்பதை இயேசு போற்றவில்லை. ஏனெனில், அது புறவினத்ததாருக்கே பொருந்தும்.
‘வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!’ (மத் 6:26) என்று அறிவுறுத்திய ஆண்டவரில் நம்பிக்கை வளர்ப்போம்.
இறைவேண்டல்,
கொடுத்துதவ மனமில்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்ற ஆண்டவரே, உமது வார்த்தையில் நம்பிக்கை வைத்து, எனக்குள்தை நான் பகிர்ந்து வாழும் வரமருள்வீராக. ஆமென்
ஆர்.கே.சாமி, ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452