அன்பில் வேரூன்றிய சீடத்துவம் கிறிஸ்தவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

15 நவம்பர் 2024                                                                                                                          பொதுக்காலம் 32ஆம் வாரம் –வெள்ளி
 2 யோவான்  4-9 
லூக்கா 17: 26-37
 
 
அன்பில் வேரூன்றிய சீடத்துவம் கிறிஸ்தவம்!

முதல் வாசகம்.


இன்றைய வாசகங்கள் நம்பிக்கை கொண்டோர் மற்றும் நம்பிக்கையற்றோர் ஆகிய இரு  தரப்பினர்களுக்கிடையலான வேறுபாட்டை விவரிக்கின்றன. புனித யோவான்  தனது இரண்டாவது கடிதத்தில், ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டும் என்ற படிப்பினையை தம் சமூகத்தினருக்கு வழங்கிறார்.  அன்பு செய்து வாழ்வது,  ஆண்டவராகிய இயேசு “நான் உங்களை அன்பு செய்ததுபோல  நீங்களும் ஒருவரையொருவர்  அன்பு செய்யுங்கள்” என்ற  கட்டளையின்படி வாழ்வதிலிருந்தே வெளிப்படுகிறது என்கிறார். 
இயேசுவையும் அவருடைய போதனையையும் அங்கீகரிக்காத சில ஏமாற்றுக்காரர்கள்  பலர் உலகில் தோன்றியுள்ளனர் என்றும்,  இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்றும், அவர்கள் மத்தியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுத்துகிறார். நிறைவாக, கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல் வரம்பு மீறிச் செல்வோர் கடவுளைக் கொண்டிருப்பதில்லை என்றும் தம் சமூகத்திற்கு அறிவுறுத்துகிறார்.

நற்செய்தி.
 
நற்செய்தியில், நோவா மற்றும் லோத்தின் காலத்தில் நல்லவர்களும் தீயவர்களும் இருந்தார்கள் என்பதை இயேசு நினைவுபடுத்துகிறார்.  நல்லவர்கள் கடவுளால் பாதுகாக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர், தீயவர்கள் கடவுளின் தீர்ப்பை எதிர்கொண்டனர் என்பதை விவரிக்கிறார்.  கடவுளின் ஆட்சியிலும் இதே காரியம் தொடர்ந்து நடக்கிறது என்று இயேசு எச்சரிக்கிறார்.  கடவுளோடு உறவாட விரும்புகிறவர்களும், அன்பான நம்பிக்கை வாழ்க்கையை வாழ்பவர்களும் கடவுளின் மீட்பை அனுபவிப்பார்கள்.  மாறாக, கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்கள் கடவுளின் நியாயமான தீர்ப்பை அனுபவிப்பார்கள் என்றும் நினைவூட்டுகிறார் ஆண்டவர்.

சிந்தனைக்கு.

மக்களினம் மீட்புப் பெற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அதை நிறைவேற்றவே தம் ஒரே மகனை உலகிற்கு ஒன்றுமில்லாதராக, மனுவுரு எடுக்கச் செய்தார்.  எனவேதான் கடவுள் வழியில் செயல்படாதவர்கள் மீது தண்டனைத் தீர்ப்பு அளிக்க கடவுள் திருவுளமானார்.  கடவுள் எப்போதும் அன்பு செய்யவும் மன்னிக்கவும் தயாராக இருக்கிறார்.  ஆனால் சிலர் கடவுளின் அன்பை ஏற்றுக்கொள்ளாமல். ‘என் வழி தனி வழி’ என்று சாத்தானின் வழி செல்வதால், கடும் சொதனைகளுக்கு ஆளாகிறார்கள், பாவக் கடலில் தள்ளப்படுகிறார்கள்.   
கடவுள் வழங்கும் அன்பின் கொடையை நாம் எவ்வாறு பயன்படுத்தினோம் என்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும்.  நாம் பெற்ற கொடையை   அடுத்திருப்பவரோடு பகிர்ந்து கொண்டால், நாம் இன்னும் அதிக அளவு ஆசீர்வதிக்கப்படுவோம் – நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வழி பிறக்கும். 
வழிபாட்டு ஆண்டின் இறுதி வாரங்களுக்குள் நுழையும் நமக்கு, கிறிஸ்துவின் இறுதி வருகையை இன்றைய நற்செய்தி மீண்டும் நினைவூட்டுகிறது. நோவா மற்றும் லோத்தின் உதாரணத்தை இயேசு நமக்குத் தருகிறார். நோவா காலத்தில் பூமியை அழிக்க வெள்ளம் வந்து போது நல்லவர்கள், நேர்மையாளர்கள் காப்பாற்றப்பட்டனர்.  ஆனால் அந்த நேரத்தில் உயிருடன் இருந்த பலர் திடீரென்று எதிர்பாராத அழிவை சந்தித்தனர். அவ்வாறே மானிட மகனின் வருகையும் இருக்கும் என்கிறார் ஆண்டவர். நல்லவர்கள் ஆண்டவரால் எடுத்துக்கொள்ளப்பட்டு தீயவர்களோ தண்டனைத் தீர்ப்பை ஏற்க வேண்டிருக்கும்.
இந்த நற்செய்தி வாசகத்தில் மற்றொரு விடயத்தையும் அறிய வருகிறோம். அது  ‘’தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்’ என்பதாகும்.  நம் உயிரைக்  காப்பாற்றிக்கொள்ள பாவச் செயல்களைச் செய்வதைவிட, நிலைவாழவுக்காக அந்த உயிரை விடுவது மேலானது என்கிறார் ஆண்டவர். உலகில் காணக்கூடிய, அழியக் கூடிய, மீண்டும் உருவாக்கும் அத்தனையும் மாயை தான். அதனால் தான் அழிகிறது, மீண்டும் தோன்றுகிறது. எதுவும் நிலையாக இருப்பதில்லை. நாமோ, அழிவுக்குரியவர்கள் அல்ல, வாழ்வுக்குரியவர்கள். எனேதான், நிலைவாழ்வுக்காக,  தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள் (உரோ 13:14) என்று புனித பவுல் கூறுகிறார். 
முதல் வாசகத்தில், புனித யோவானும்,  “நான் உங்களை அன்பு செய்ததுபோல போல நீங்களும் ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள்” எனும் இயேசுவின் அன்பு கட்டளையை வலியுறுத்தினார். 

இறைவேண்டல்.
 என்னை அன்பால் ஆட்கொண்ட ஆண்டவரே, நீர் என்மீது பொழிந்த அன்பை, நான் எனக்கு அடுத்திருப்பவரோடு பகிர்ந்து வாழும் வரமருள உம்மை இறைஞ்சுகிறேன். ஆமென். 
 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452