நன்றி கூறும் நெஞ்சம், ஆண்டவரின் மஞ்சம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

13 நவம்பர் 2024 பொதுக்காலம் 32ஆம் வாரம் –புதன்
தீத்து 3: 1-7
லூக்கா 17: 11-19
நன்றி கூறும் நெஞ்சம், ஆண்டவரின் மஞ்சம்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், பவுல் அடிகள் ஆயராக உள்ள தீத்துவிடம் அவரது கண்காணிப்பில் உள்ள இறைமக்களிடம் கூற வேண்டிய மேலும் சில நற்பண்புகளை எடுத்துரைக்கிறார். முதலாவதாக, இறைமக்கள் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்றும், அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும் என்றும், எவரையும் பழித்துரைக்கவும், எவரோடும் சண்டை போடவும் கூடாது என்று அறிவுறுத்துமாறு தீத்துவைக் கேண்டுக்கொள்கிறார். அனைத்துக்கும் மேலாக, இறைமக்கள் கனிந்த உள்ளத்தினராய் மக்கள் அனைவரோடும் நிறைந்த பணிவுடன் பழக வேண்டும் என்று கற்பிக்கச் சொல்கிறார்.
நிறைவாக, கடவுள் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் நம்மை மீட்டார் என்றும், அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்துள்ளார் எனவும் தீத்துவுக்கு எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கலிலேயா, சமாரியாப் பகுதிகள் வழியாக எருசலேமிற்குப் போய்க்கொண்டிருக்கும் வேளையில் இயேசு பத்துத் தொழுநோயாளர்களுக்கு ஆற்றிய ஒரு குணமளிப்பை லூக்கா குறிப்பிடுகிறார்.
வழியில் இயேசுவை அணுகிய பத்துத் தொழுநோயாளர்கள், தங்களைக் குணப்படுத்தும்படி இயேசுவிடம் இறைஞ்சி வேண்டுகிறார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் போய் உங்களைக் குருக்ககளிடம் காண்பியுங்கள்” என்று சொல்ல, அவரது வார்த்தையில் நம்பிக்கை வைத்து அவர்களும் அவ்வாறு செல்கின்றார்கள்.
செல்லும் வழியிலேயே அவர்கள் முழுமையாக நலமடைந்தார்கள். அவர்களுள் ஒருவர் சமாரியர். அந்த சமாரியர் மட்டும் இயேசுவுக்கு நன்றி செலுத்தத் திரும்பி வருகின்றார். அவரைப் பார்த்து இயேசு, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பி வரக்காணோமே!” என்கின்றார். இயேசு அந்த சமாரியரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.
சிந்தனைக்கு.
லூக்கா மட்டும் குறிப்பிட்டு எழுதியுள்ள இந்த நற்செய்தியில் கடவுளிடமிருந்து, நாம் குணமளிப்பு போன்ற நன்மைகளைப் பெறவேண்டும் என்றால், கடவுளின் முன்னிலையில் நமது தாழ்ச்சி வெளிப்பட வேண்டும் என்று உணர்த்தப்பபடுகிறோம். இயேசுவை அணுக்கியப் பத்துத் தொழுநோயளர்களும் இயேசுவைக் கண்டவுடன், “ஐயா, இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று சொல்லி உதவிக்கு மன்றாடுகிறார்கள். அவர்களது மன்றாட்டை இயேசு ஏற்றுக்கொண்டார்.
அடுத்து, ஆண்டவரின் கட்டளைக்குக் கட்டுப்படுதல் இன்றியமையாதது. கடவுளின் இரக்கத்திற்கு அயராது மன்றாடினால் மட்டும் போதாது. அவருடயைத் தயவைப்பெற, அவருடைய கட்டளைகளைக்குக் கீழப்படிய வேண்டும். நற்செய்தியில் கவனித்தோமானால், அந்த பத்துத் தொழுநோயாளர்களும், இயேசு சொன்னதுபோல் குணமாகும் முன்னரே அவர்களை ஆலயக் குருக்களிடம் காண்பிக்கச் சென்றார்கள்.
நிறைவாக, நன்றி கூறிதல் நமது பண்பாக இருக்க வேண்டும். பத்துத் தொழுநோயாளர்களும் இயேசுவால் நலம்பெற்றார்கள். ஆனால், சமாரியர் ஒருவர் மட்டும்தான் திரும்பி வந்து ஆண்டவருக்கு நன்றி சொன்னார். பெற்ற நன்மைக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று அவர் உணர்ந்தார். இதில் ‘அவர் திரும்பினார்’ என்பது அவர் ஆண்டவர் பக்கம் திரும்பினார் என்பதைக் குறிக்கிறது. இதிலிருந்து மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டுமல்ல எனும் படிப்பினை மேலோங்கி நிற்கிறது. அவர் மீண்டும் தன் குடும்பத்தோடு இணையும் மீட்பைப் பெற்றார்.
நலம் பெற்ற அந்த சமாரியர், தனது நன்றியை ஆழமாக வெளிப்படுத்த ஐந்து வழிமுறைகளைப் பின்பற்றியதை அறிகிறோம். 1. அவர் திரும்பி வந்தார். 2. கடவுளை மாட்சிபடுத்தினார். 3. உரத்த குரலில் பலருக்குக் கேட்கும்படி சாட்சி பகிர்ந்தார். 4. இயேசுவின் பாதத்தில் முகங்குப்புற விழுந்தார். 5. ஆண்டவருக்கு நன்றி கூறினார்.
நாம் பெறும் அனைத்து அருளையும் கடவுளின் அளவற்ற இரக்கத்தின் கொடையாக நாம் காண வேண்டும். பல சந்தர்ப்பங்களில் நாம் பெறும் கொடைகளுக்கும் தயவுக்கும் கடவுளுக்கு நன்றி நவில மறந்துவிடுகிறோம். நன்றி நவில வேண்டும் என்பதை ஒர் பொருட்டாக எண்ணுவதில்லை.
நன்றியுணர்வு அவசியம், ஏனென்றால் அது உண்மையின் வெளிப்பாடு. சராசரி மனிதனாக நாம் அடிக்கடி நமது சொந்த ஆசைகள் மற்றும் இன்பங்களில் கவனம் செலுத்துகிறோமேயொழிய ‘நன்றி’ என்பது மறந்து வார்த்தையாகிவிடுகிறது. தானியங்கி இயந்திரத்தில் (ATM) ‘கார்டு’போட்டவுடன் பணம் வருவதைப்போல் நாம் கேட்டவுடன் நமது விண்ணப்பங்களைக் கடவுன் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். கடவுள் ஒரு தானியங்க இயந்திரம் அல்ல. அவர் இதயம் கொண்ட உயிருள்ளவர். எனவே, கனிவும் இரக்கமும் கொண்ட அவரது இதயத்தை நமது நன்றி மகிழ்விக்கும்.
நாம் எதிர்பார்த்தது கிடைக்காவிட்டாலும், கடவுளிடமிருந்து நாம் பெற்ற அனைத்திற்கும் கடவுளுக்கு நன்றியையும் புகழையும் செலுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை என்று புகழுரைக்கும் நாம் அவருக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக வாழ்ந்து காட்டுவோம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உமது இரக்கத்தை என்மீது எப்போதும் பொழிகிறீர். நானோ உமக்கு நன்றி செலுத்தத் தவறியுள்ளேன். என்னை மன்னியும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா) ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம் +6 0122285452
Daily Program
