அழைப்பை ஏற்ற நமக்கு, அரப்பணிப்பு இன்றியமையாதது! | ஆர்.கே. சாமி | VeritasTamil

6 நவம்பர் 2024                                                                                                            பொதுக்காலம் 31ஆம் வாரம் – புதன்
 
பிலி 2: 12-18
மத்தேயு 14: 25-33 

அழைப்பை ஏற்ற நமக்கு, அரப்பணிப்பு இன்றியமையாதது! 

 
முதல் வாசகம்.


பவுல் இப்போது பிலிப்பியருடன் இல்லை. எனவே பிலிப்பியில் உள்ள கிறிஸ்தவர்கள் கடவுளை நம்பி கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து,  அச்சத்தோடும் பயபக்தியோடும் அவர்களது  மீட்புக்காக பாடுபட வேண்டும் என்றும் இத்திருமுகத்தில் அறிவுறுத்துகிறார். கடவுளே அவர்களில்  செயலாற்றுவதால் அவர்களின் முயற்றி வெற்றி தரும் என்று வாழ்த்துகிறார்.  மேலும், கடவுளைக் குறைகூறும் இஸ்ரயேலர்களைப் போலல்லாமல், பிலிப்பியில் உள்ள கிறிஸ்தவர்கள் கடவுளின் உண்மையான பிள்ளைகள் என்றும்,  அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்யத் தகுதியானவர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் படிப்பிக்கிறார்.  அவர்கள் இஸ்ரயேரைப் போல முணுமுணுக்கக் கூடாது என்றும் எச்சரிக்கிறார்.
தொடர்ந்து, பிலிப்பியரின் நல்ல கிறிஸ்தவ வாழ்வின் நிமித்தம் பவுல் மகிச்சியடைவதாகவும், கிறிஸ்துவின் அடுத்த வருகையின் போது, அவரது உழைப்பு வீணாகவில்லை, அவர்  வெறுமனே   உழைக்கவில்லை எனும் உண்மை வெளிப்படும் என்றும் விவரிக்கிறார். நிறைவாக, பவுல் அவரது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதுபோல பிலிப்பியரும் அவர்களது மகிழ்ச்சியைப் பவுலோடு பகிர்ந்து கொள்ள அழைக்கிறார். 
 
நற்செய்தி.

திரளான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தனர், அவர் அவர்களிடம், “ஒருவர் எனக்குச் சீடராக விரும்பி, தங்கள் சொந்த உயிரையும், தங்கள் குடும்பத்தையும் இயேசுவைவிட  மேலாகக் கருதினால்,  அவர்களால் தன்னைப் பின்பற்ற முடியாது. அதிலும், சிலுவையைச் சுமந்துகொண்டு அவரைப்  பின்பற்றாத எவரும் தன் சீடராக முடியாது என்கிறார் ஆண்டவர்.
ஒரு கோபுரத்தைக் கட்டுவதற்கு முற்படும் ஒருவர்,  முதலில் உட்கார்ந்து அதைக் கட்டி முடிக்க முடியுமா என்று சோதித்தறிய செலவைக் கண்டுபிடிக்க மாட்டாரா? என்றும்,  இல்லையெனில், கட்டி  முடிக்க இயலாத நிலையில் மக்களின் ஏளனத்திற்கு ஆளாகமாட்டாரா ? என்ற கேள்வியை சிந்தனைக்கு விருந்தாகக் கொடுக்கிறார்.   
அதேபோல, ஓர் அரசன் போருக்குச் செல்கிறான் என்றால், அவன் தன் படையால் வெல்ல முடியுமா என்பதை முதலில் மதிப்பிட மாட்டாரா ? என்றும், ஒருவேளை அவரால் வெற்றிகொள்ள முடியாது என்றுணர்ந்தால்,  அவர் தொலையில் இருக்கும் போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? என்ற இரண்டாவது எடுத்துக்காட்டையும் இயேசு மக்கள் கூட்டத்தின் முன் வைக்கிறார். நிறைவாக இயேசுவுக்கு முன்னுரிமை அளிக்காத எவரும் தம் சீடராக இருக்க முடியாது என்பதை உறுதியாககு கூறுகிறார்.  

சிந்தனைக்கு.

வித்தியாசமான இவ்வுலகில் வித்தியாசமாக வாழ வேண்டியவர்கள் இயேசுவின் சீடர்கள். பத்தோடு பதினோன்று என்பதல்ல நமது வாழ்வு. அதிலும், இயேசுவுக்கு முன்னுரிமை அளிக்காத எவரும் தமது சீடத்துவத்துற்கு ஏற்றவர் அல்ல என்று இயேசு  கூறியதை இன்று  வாசித்தோம். கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? என்பது போல கிறிஸ்தவப்பெயர் கொண்டோரெல்லாம் இயேசுவின் சீடராகிவிட முடியாது.
உண்மையில், யாரெல்லாம் ‘நான் இயேசுவை பின்பற்றுகிறேன்’ என முடிவெடுத்து இயேசுவை பின்பற்றுகின்றரோ அவர்கள் அனைவருமே இயேசுவின் சீடர்கள் என்று கூறலாம். இதில் இரு பிரிவினர் உண்டு. தனி குருத்தும் மற்றும் பொதுக் குருத்துவம் என்பன.  மத்தேயு 16:24-ல் இயேசு தனது சீடரைப் பார்த்து “என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையை தூக்கிக்கொண்டு என்னை பின்பற்றட்டும்” என்று தெளிவாக விளக்குகிறார். ஆக இயேசுவின் சீடத்துவம் என்பது பூக்கள் நிறைந்த பாதைகள் கிடையாது. மாறாக கல்லும், முள்ளும் நிறைந்த பாதை என்பதை கிறிஸ்தவர்கள் ஆழ்ந்துணர வேண்டும்.
முதல் வாசகத்தில், பிலிப்பியில் உள்ள கிறிஸ்தவர்கள் கடவுளின் உண்மையான பிள்ளைகள் என்றும்,  அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்யத் தகுதியானவர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் படிப்பிக்கறார். பவுல் இந்த அறிவுரை பொதுக் குருத்தவத்திற்கானது. ஆம், கிறிஸ்தவர் என்பது பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்பதல்ல. புறவினத்தார் அப்படிதான வாழ்கிறார்கள். 
முதலில், இயேசுவின் சீடர்களாகிய நாம்  மிகவும் துடிப்பானவர்களாகவும் தைரியசாலிகளாகவும்  செயல்பட வேண்டும். அத்தகைய துடிப்பும் தைரியமும் இயேசுவிடம் இருந்தது. மத்தேயு நற்செய்தி 19:21-ல் நிலைவாழ்வை பெற்றுக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று ஓர் இளைஞன் கேட்டபோது இயேசு அவரிடம் நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய் உம் உடமைகளை விற்று ஏழைகளுக்கு கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர் பின்னர் வந்து என் சீடாராய் இரும்; என்றார்.  அந்த இளைஞரிடம் உண்மையை எடுத்துரைக்க இயேசுவிடம் தைரியம் இருந்தது. அவர் பூசி மொழுகவில்லை. சீடர்கள் நாம் உண்மையைப் பேசு அஞ்சினால் நாம் அவரது சீடர்கள் அல்ல.
அடுத்து, என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது என்கின்றார் ஆண்டவர். இயேசுவின் இப்படிப்பினை தனிக் குருத்துவத்திற்கானது.  நமக்குத்  ‘தேர்ந்து தெளிதல்’   என்ற பண்பும் விவேகமும்  மிகவும் அவசியமாகும்.  இங்கே இயேசு குறிப்பிடும் சீடத்துவம் ‘அருள்பணி’ (துறவற) வாழ்வாகும். குடும்பப் பொறுப்புக்களை நிறைவேற்றும் பணியில் மூழ்கிக்கிடக்காமல் இறையாட்சிப் பணிக்கு  முழுமையாக  அர்ப்பணிப்பதாகப் பொருள் கொள்ளலாம்.    
இயேசுவைப் பின்பற்றி "சிலுவையைச் சுமப்பதன்" மூலம் சீடத்துவம் வரையறுக்கப்படுகிறது. இந்த சொற்றொடர் சுயநலத்தைத் துறப்பதை  வலியுறுத்துகிறது. இந்த பத்தியில், இயேசுவுக்கான சீடத்துவம்  மலிவானது அல்ல, எளிதானது அல்ல, விளைவுகளை ஆழ்ந்த கருத்தில் கொள்ளாமல் ஏற்க முடியாது என்பதை வலியுறுத்தப்படுகிறது.  ஆம், ஒருவர் அருள்பணி வாழ்வை எற்க அனைத்தையும் துறக்க வேண்டும். இத்தகைய முடிவை தீடீரென்று எடுக்க முடியாது. அவர் இன்பத்துன்பங்களை, சவால்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.
கோபுரம் கட்டுபவர் போல அனைத்து ரிதியிலும் ‘இயலும்’, ‘இயலாமை’ பற்றி சிந்திக்கவேண்டும். ஏனெனில், ‘ “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” (லூக்கா 9:62). ஏனெனில் ஆண்டவர் நம்மை மதிப்புமிகு, உன்னத  சீடத்துவத்திற்கு  அழைக்கிறார். "என்னைப் பின்பற்றுங்கள்" என்ற இயேசுவின் அழைப்பை அவரது கொடையாகவும்  கோரிக்கையாகவும் பாரப்போர் வாழ்வு பெறுவர்.

இறைவேண்டல்.

அன்பார்ந்த ஆண்டவரே, இயேசுவே, "என்னைப் பின்பற்றுங்கள்" என்ற உமது அழைப்பை ஏற்றுள்ள நான் எந்நாளும் உம்மில் நிலைத்து நின்று,  தன்னலம் துறந்த நிலையில்  என்னை அர்ப்பணிக்க அருள்புரிவீராக. ஆமென். 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452